Bournvita: போர்ன்விட்டா ஹெல்த் டிரிங்க் அல்ல இ-காமர்ஸ் தளங்களுக்கு அரசின் அதிரடி உத்தரவு!

போர்ன்விட்டா (Bournvita) மற்றும் பிற பானங்களை ஹெல்த் டிரிங்க் பிரிவிலிருந்து நீக்க இந்திய அரசு இ-காமர்ஸ் இணையதளங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

போர்ன்விட்டாவை பலரும் நீரிலோ அல்லது பாலிலோ கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர். சிலர் அப்படியே போர்ன்விடாவை ஸ்பூனில் எடுத்துச் சாப்பிடவும் செய்கின்றனர். பெரும்பாலும் இது ஆரோக்கிய பானம் (ஹெல்த் டிரிங்க்ஸ்) என்ற பிரிவில் விளம்பரப்படுத்தப்படுகிறது. 

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006 அல்லது அதன் விதிகளின் கீழ், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) விசாரணையைத் தொடர்ந்து, ஹெல்த் டிரிங்க்ஸ் என்ற சொல் வரையறுக்கப்படவில்லை என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியது. 

மேலும், போர்ன்விட்டா மற்றும் பிற பானங்களை ஹெல்த் டிரிங்க் பிரிவிலிருந்து நீக்க இந்திய அரசு இ-காமர்ஸ் இணையதளங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், `போர்ன்விட்டா மட்டுமே பெயரிடப்பட்டுள்ளது. மற்ற எந்த பிராண்டுகளை ஹெல்த் டிரிங்க்ஸ் பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் பொறுப்பை இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசாங்கம் விட்டு வைத்துள்ளது.

போர்ன்விட்டா தடை செய்யப்படவில்லை. ஆனால், மொண்டலெஸ் (Mondelez) தயாரிப்பின் கீழ் வெளிவரும் போர்ன்விடா, 5-ஸ்டார், கேட்பரி, ஓரியோ மற்றும் டோப்லெரோன் போன்ற பிற பிரபலமான பொருள்களை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஹெல்த் பூஸ்டர் எனச் சொல்லி விற்பனை செய்ய முடியாது. 

அரசின் அறிவிப்புக்கு மொண்டலெஸ் எந்தவித அதிகாரபூர்வ பதிலையும் இன்னும் வெளியிடவில்லை.

Bournvita

போர்ன்விட்டாவில் அதிக சர்க்கரை...

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயென்சரான ரேவந்த் ஹிமத்சிங்கா கடந்தாண்டு, போர்ன்விடா குறித்து விமர்சன வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், போர்ன்விட்டாவில் அதிக சர்க்கரை இருப்பது குறித்து வெளிப்படுத்தி இருந்தார். இது பிராண்டின் விமர்சனத்தையும் பரவலான விவாதத்தையும் தூண்டியது.

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், போர்ன்விட்டாவின் அனைத்து தவறான விளம்பரங்கள், பேக்கேஜிங் மற்றும் லேபிள்களையும் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தி இருந்தது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.