`பேக்’ தொழில், ஆண்டுக்கு ரூ.70 லட்சம் டர்ன் ஓவர்; திண்டுக்கல் சுகந்தியின் `வெற்றிக்கொடி கட்டு’ கதை!

பிசினஸ் உலகில் கால்பதித்து, வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் மற்றும் நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டிருக்கும் பெண்களை அடையாளம் காட்டும், அங்கீகரிக்கும் பகுதி... இந்த #HerBusiness. தங்களது புதுமையான சிந்தனைகள், அதைச் செயல்படுத்திய விதம், அணுகுமுறை உள்ளிட்ட பல காரணிகள் மூலம் தொழிலில் ஜெயித்து வரும் இவர்களது வெற்றிக்கதைகள், மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும். புதிதாக உருவெடுக்க வைக்கும்!

‘பிசினஸ் மூளை ஆண்களுக்கானது’ என்ற பொதுப்புத்தி கொண்டது நம் சமூகம். ஆனால், தன் கணவர் கட்டமைத்த பிசினஸை அவரது மறைவுக்குப் பிறகு வெற்றிகரமாகக் கொண்டுசென்று அசத்தி வருகிறார், திண்டுக்கல்லை சேர்ந்த சுகந்தி. ‘சுக்ரா இன்டர்நேஷனல்’ என்ற ஸ்டோரை திண்டுக்கல்லில் நடத்திவரும் இவரது பிசினஸ் பயணம், ‘பெண் நினைத்தால் எதுவும் முடியும்’ என்பதை உலகிற்கு உரக்க உணர்த்தும் மற்றுமோர் உதாரணம்.

Bag Business

“நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே மதுரையில். பி.எஸ்சி கணிதம் படித்திருக்கிறேன். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு பியூட்டிஷியன் கோர்ஸ் படித்தேன். பின்னர், வீட்டிலேயே பார்லர் ஒன்றை அமைத்து ரன் பண்ணிக்கொண்டிருந்தேன். திருமணம் முடிந்தவுடன் திண்டுக்கல் வந்துவிட்டேன்” என்பவர், தன் கணவர் குறித்து பேசினார்.

“என் கணவர் 90-களிலிருந்து திண்டுக்கல்லில் சுக்ரா இன்டர்நேஷனல்’ என்ற பேக் ஸ்டோரை (Bag Store) நடத்திவந்தார். ஸ்கூல் பேக், டிராவல் பேக், ஆஃபீஸ் பேக், ஸ்லிம் பேக், லேடீஸ் ஹேண்ட் பேக், லஞ்ச் பேக் உட்பட மக்களின் பயன்பாட்டிற்குத் தேவையான அனைத்து பேக் வகைகளையும் அங்கே விற்பனை செய்துவந்தார். பல்வேறு விதமான பிராண்டட் பேக் வகைகளை விற்பனை செய்துவந்ததொடு, சொந்தமாகவும் பேக் வகைகளையும் டிசைன் செய்து, தயாரித்து விற்பனை செய்தார். குறிப்பாக, எங்களுடைய சொந்தத் தயாரிப்புக்கு திண்டுக்கல்லில் எப்போதுமே நல்ல டிமாண்ட் உண்டு” என்று தங்கள் கடை குறித்துப் பகிர்ந்துகொண்டார சுகந்தி.

Bag Business

“திருமணம் முடிந்து திண்டுக்கல் வந்தபிறகு என்னால் பியூட்டிஷியன் பணியைத் தொடரமுடியவில்லை. எனக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். கணவர் மற்றும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதிலேயே பத்து ஆண்டுகள் நகன்றன. இந்நிலையில், கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், தொழில் ரீதியிலான பர்ச்சேஸுக்குச் செல்லும்போது என்னையும் என் கணவர் உடன் அழைத்துச் செல்வார். சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற இடங்களுக்கு நானும் அவருடன் பயணம் செய்திருக்கிறேன். இதன்மூலம் தொழில் சார்ந்த பயணங்கள், மற்றும் அப்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் ஆகிய அனைத்தும் எனக்குப் புரிபட ஆரம்பித்தன. பேக்குகளை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, சொந்தமாக பேக் வகைகளைத் தயாரிக்கும்போது கவனிக்கவேண்டியவைவரை தொழில் நுணுக்கங்கள் அனைத்தையும் அவர் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக் கொடுத்தார். 2009-ம் ஆண்டு உடல்நிலை பாதிப்பு அதிகமாகி என் கணவர் காலமானார். அவர் இறந்தபோது, என் மூன்றாவது மகளுக்கு ஒன்றரை வயது“ என்கிற சுகந்தி, அதன்பின்னர் தன் கணவர் நடத்திவந்த தொழிலை தான் எடுத்து நடத்தவேண்டிய நிலைக்கு வந்ததாகக் குறிப்பிடுகிறார்.

கணவரின் இறப்புக்குப் பிறகு தொழிலைக் கொண்டு செல்வது என்பது தொடக்கத்தில் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அதிலும், 19 ஆண்டுகளாக என் கணவர் கட்டமைத்து வைத்திருந்த அத்தொழிலை வெற்றிகரமாகக் கொண்டுசெல்லவேண்டிய பெரும் பொறுப்பு என்னிடம் இருந்தது. அது எனக்குள் உண்டாக்கிய பதற்றம் ஏராளம். ஆனால், வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து அச்சப்பட்டுக்கொண்டு இருப்பதைவிட களத்தில் இறங்கி தொழிலை ஒரு கை பார்க்க முடிவு செய்தேன். அவர் இறந்து 10 நாள்களிலேயே நான் கடைக்குப் போய்விட்டேன். காலையில் கடைக்குச் சென்றால் இரவு பத்து மணிக்குத்தான் வீட்டுக்கு வருவேன். பிள்ளைகள் பள்ளி விட்டதும் கடைக்கே வந்துவிடுவார்கள். அப்போது பிசினஸை கவனித்துக்கொண்டே பிள்ளைகளையும் படிக்க வைப்பேன்.

Bag Business

என் கணவர் இறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, எங்களுக்கு வழக்கமாக வரும் ஆர்டர்களில் சில வெளியே போகத் தொடங்கின. அதன்பின்னர், என்னுடைய பிசினஸ் ஸ்ட்ராட்டஜியை நான் மாற்றிக்கொண்டேன். குறிப்பாக, பள்ளி ஆர்டர்களை எடுப்பதில் கவனம் செலுத்தினேன். பள்ளிகளுக்கு நேரில் சென்று பள்ளியின் பெயரிலேயே பிரத்யேகமாக ஸ்கூல் பேக் தயாரித்துக் கொடுக்கும் புரப்போஸலை முன்வைத்தேன். ஆனால், எடுத்தவுடனேயே இதில் வெற்றியடைந்துவிடவில்லை. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு பள்ளி ஒன்றிலிருந்து ஸ்கூல் பேக் ஆர்டர் கிடைத்தது. அதன்பின்னர், ஸ்கூல் பேக் - லஞ்ச் பேக் காம்போ ஆர்டர்களும் அடுத்தடுத்துக் கிடைக்கத் தொடங்கின” என்பவர், இந்த பிசினஸில் தொடந்து வெரைட்டி காட்டியிருக்கிறார்.

“பல்வேறு விதமான பிராண்டட் பேக் வகைகளை விற்பனை செய்வதோடு, வாடிக்கையாளர்களின் விருப்பதிற்கு ஏற்ப பிரத்யேகமாக பேக் வகைகளையும் டிசைன் செய்து தைத்துக் கொடுக்கிறோம். சில வாடிக்கையாளர்கள் தார்ப்பாயில் பேக் தயாரித்துத் தரச்சொல்லி கேட்பார்கள். புனித யாத்திரைகளுக்குச் செல்பவர்களோ, பெரிய டிராவல் பேக்குகளை கேட்பார்கள். இப்படி, வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கஸ்டமைஸ்டு பேக் வகைகளை நாங்கள் தயாரித்துக் கொடுக்கிறோம்” என்கிறார் உற்சாகத்துடன்.

தொழில்முனைவோர் சுகந்தி I Entrepreneur Suganthi

சுகந்தியின் ஸ்டோரில் தற்போது மூன்று ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் பேக் ஆர்டர்களை எடுத்துத் தைக்கும் இடத்தில் ஆறு பேர் பணியாற்றுகின்றனர். இந்த வணிகம் மூலம் ஆண்டொன்றுக்கு 50 முதல் 70 லட்சத்துக்கு டர்ன் ஓவர் செய்து அசத்துகிறார் சுகந்தி. அதுமட்டுமல்லாமல், தன் ஸ்டோரின் முதல் கிளையை ராஜபாளையத்தில் தொடங்கியிருக்கிறார்.

’’தமிழகம் முழுக்க இன்னும் நிறையக் கிளைகளைத் தொடங்கவேண்டும், அதை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறேன்” என்று தெளிவும் நம்பிக்கையுமாகப் பேசுகிறார் இந்த சிங்கப் பெண்.

தொடர்ந்து களமாடி வெற்றி மேல் வெற்றியை அள்ளுங்கள் சுகந்தி!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.