மிதுனம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: பேச்சில் கவனம்; அலட்சியம் கூடாது - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. இந்த ராகு-கேது பெயர்ச்சிக்காலத்தில் தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வர வாய்ப்பு உண்டு. பூர்விகச் சொத்துகளில் இருந்த வில்லங்கம் நீங்கும். பாதியிலேயே நின்றுபோன காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

2. உங்களில் சிலர், புது வீடு மாறுவீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். உணவு விஷயங்களில் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் குடும்ப விஷயங்களைச் சொல்லவேண்டாம். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும்.

3. குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் சின்னச் சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கியத்தில் சிறு பிரச்னை வரக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கணினித் துறையினர், முக்கிய தகவல் தொகுப்புகளைக் கவனமாகக் கையாள வேண்டும்.

4. சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை அமையவும் வாய்ப்பு உண்டு. அதேபோல் வெளிநாடுகளில் இருக்கும் உறவுகளால் சிற்சில ஆதாயங்கள் உண்டாகும். இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு மனப் போராட்டங்கள் ஓயும்.

5. செவ்வாயின் நட்சத்திரத்தில் ராகு பயணிக்கும் காலத்தில்... 5.12.2026 முதல் 11.3.2027 வரை, பணவரவு திருப்திகரமாக இருக்கும். சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். உங்களின் தனாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 11.3.2027 முதல் 18.12.2027 வரை ராகு பயணிக்கும்போது சுப காரியங்கள் ஏற்பாடாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

6. ராகு சூரியனின் நட்சத்திரத்தில் 18.12.2027 முதல் 23.6.2028 வரை செல்வதால் தடைகள் நீங்கும். அரசு வேலைகள் முழுமையடையும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். புது வாகனம் வாங்குவீர்கள்.

7. கேது பகவான் மிதுனத்துக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். ஆகவே, இனி எதிலும் நிதானமாக யோசித்து பேசுவது சிறப்பு. எவருக்கும் வாக்குறுதி அளிக்காதீர்கள். குடும்பத்தில் ஓரளவு அமைதி இருக்கும். என்றாலும் மனதில் இனம்புரியாத கலக்கம் இருந்துகொண்டிருக்கும்.

8. இந்தப் பெயர்ச்சிக்காலத்தில் மகனுக்கு நல்ல வேலை; மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்களில் சிலருக்குப் பார்வைப் பிரச்னை ஏற்படலாம். பரிசோதனை அவசியம். உணவு உறக்கத்திலும் அலட்சியம் கூடாது.

9. சமூகத்தில் அதிகார பதவியில் இருப்பவர்கள், தொழிலதிபர்களின் ஆதரவு கிடைக்கும். பழைய சொந்தங்கள் தேடி வரும். கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் பயணிக்கும்போது... 5.12.2026 முதல் 14.08.2027 வரை ஆளுமையும் தைரியமும் அதிகரிக்கும்.

10. சனியின் நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கும் வேளையில் - 14.8.2027 முதல் 22.4.2028 வரை செல்வதால் காரியத்தடைகள் நீங்கும். சொந்த வீடு அமையும். உடல்நலன் மேம்படும். கேது குருவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது 22.4.2028 முதல் 23.6.2028 வரை குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. எனினும் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.

11. வியாபாரத்தில் கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுதொழிலில் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வியாபார சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சிற்சில தருணங்களில் இரட்டிப்பு லாபம் மகிழ்ச்சி தரும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.