தீயசக்திகளை ஓட வைக்கும் குருதி பூஜை; இரவில் கேட்கும் சாஸ்தாவின் வில் ஓசை; சோட்டானிக்கரை அற்புதங்கள்!
சோட்டானிக்கரை ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று குருதிபூஜை. இந்தப் பூஜையில் மனநிலை பாதிப்புகளுக்கு உள்ளானவர்களை அழைத்துச் சென்று கலந்துகொள்ள வைத்தால் அவர்களைப் பீடித்திருக்கும் நோய் துஷ்ட சக்திகள் ஆகியன நீங்கும் என்பது நம்பிக்கை அம்பிகையின் சாந்நித்தியமே பக்தர்களின் பாதிப்புகளை நீக்கும் என்று நம்பப்படுகிறது.
இங்கு நடைபெறும் முக்கியமான வழிபாடுகளில் ஒன்று குருதி பூஜை. பகவதி சேவையில் விளக்கில் அம்பிகையை ஆவாஹனம் செய்து வழிபடுவதைப் போல, இங்கு மாலை வேளையில் தீப்பந்தத்தின் ஜுவாலையில் அம்பிகையை ஆவாஹனம் செய்து பூஜைகள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாகக் குருதி தர்ப்பணம் நடைபெறுகிறது. குருதி என்றால் ரத்தம் என்று பொருள். ஆனால், இந்தப் பூஜையில் உண்மையான ரத்தம் பயன்படுத்தப்படுவதில்லை. சுண்ணாம்புத் தண்ணீரில் மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பொருள்களைக் கலந்து சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்படும் திரவமே குருதியாகப் பயன்படுத்தப்படுகிறது.
கேரளத்தில் பெரிய உருளிகள் என்று அழைக்கப்படும் பாத்திரங்களில் இந்தக் குருதியை வைத்து, மேல்சாந்தி தர்ப்பணம் செய்வார். அம்பிகையின் சாந்நித்தியம் அந்தப் பூஜையில் வெளிப்படுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
இதனால் மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் அம்பிகையின் முன்பு தங்களுடைய வேண்டுதல்களைச் சமர்ப்பிப்பார்கள். அம்பிகையின் அருளால் அந்தப் பாதிப்புகள் நீங்குவதாகவும், சிலர் தங்களுக்குத் தொல்லை தரும் தீய சக்திகள் விலகுவதாகச் சத்தியம் செய்து செல்வதாகவும் ஆலயத்தின் ஐதிகங்கள் கூறுகின்றன.
சிலருக்கு ஒருநாளில் பலன் கிடைப்பதாகவும், சிலர் ஒரு வாரம் வரை ஆலயத்தில் தங்கி பஜனம் இருந்து வழிபடுவதாகவும் கூறப்படுகிறது. குருதி தர்ப்பணம் நடைபெற்ற பின்னர் வழங்கப்படும் தீர்த்தத்தையும் பிரசாதமாகப் பெற்றுச் சென்று வீடுகளில் வைத்துக்கொள்வது வழக்கம். இந்தக் குருதி பூஜை தினமும் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மாலையில் நடைபெறும் பெரிய குருதி பூஜை மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.
சோட்டானிக்கரை ஆலயத்துக்குச் செல்பவர்கள் அங்குள்ள மரம் ஒன்றில் பெரிய ஆணிகள் அடிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். தீய சக்திகளின் பாதிப்பிலிருந்து விடுபடுபவர்கள், அம்பிகையின் முன் சத்தியம் செய்து, தங்களுடைய பாதிப்புகளை அந்த மரத்தில் ஆணியடித்து நிலைநிறுத்துவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
அம்மே நாராயணா... தேவி நாராயணா!
கேரளத்தில் பொதுவாகப் பலரும் அம்மே நாராயணா என்று அம்பிகையை வழிபடுவது வழக்கம். ஆனால், சோட்டானிக்கரை ஆலயத்தில் தனித்துவமாக,
அம்மே நாராயணா தேவி நாராயணா
லட்சுமி நாராயணா பத்ரே நாராயணா
என்ற ஸ்லோகம் சொல்லி வழிபடுகிறார்கள்.
இதற்குக் காரணமாக ஒரு விசேஷமான காரணம் கூறப்படுகிறது. இங்கு அம்பிகையின் சாந்நித்தியத்துடன் லட்சுமி நாராயணரின் சாந்நித்தியமும் இணைந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
அதிகாலை வேளையில் சரஸ்வதி அம்சமாகவும், நண்பகலில் லட்சுமி அம்சத்துடன் நாராயணரின் சாந்நித்தியத்துடனும், மாலை வேளையில் துர்கை அம்சமாகவும் அம்பிகை அருள்பாலிப்பதாகச் சொல்லப்படுகிறது. கொல்லூர் மூகாம்பிகையில் மூலவர் திருமேனியில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும்தேவியரின் அம்சங்களும், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சங்களும் இணைந்திருப்பதைப் போலவே, சோட்டானிக்கரையிலும் அம்பிகையுடன் லட்சுமி நாராயணரின் சாந்நித்தியம் இணைந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

அம்பிகைக்குத் துணையாக வந்த சாஸ்தா!
சோட்டானிக்கரை ஆலயத்தில் இரண்டு சாஸ்தா சந்நிதிகள் இருப்பதற்கும் ஒரு சுவாரசியமான வரலாறு சொல்லப்படுகிறது. அம்பிகை ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் ஆலயத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று, தன்னை நம்பியிருக்கும் பக்தர்களின் நலனை விசாரித்துவிட்டு வருவதாக ஐதிகம்.
ஒருமுறை அம்பிகை இரவு நேரத்தில் சர்வ அலங்கார பூஷிதையாக, நகைகள் அணிந்து பவனி வந்துகொண்டிருந்தாள். அப்போது ஆதிசங்கரரின் தாயார் ஆரியாம்பாள் வாழ்ந்த மேப்பாளூர் மனை வழியாகச் சென்றாள்.
அந்த வழியில் வீட்டின் திண்ணையில் படுத்திருந்த இருவர், நள்ளிரவில் நகைகள் அணிந்துகொண்டு தனியாகச் செல்லும் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். அவள் யார் என்று தெரியாமல், இந்த இரவு நேரத்தில் துணைக்கு யாரும் இல்லாமல் தனியாகச் செல்கிறாளே... இவளுக்குப் பிள்ளை குட்டிகள் இல்லையோ என்று பேசிக்கொண்டார்கள்.
அந்தப் பேச்சு அங்கு வழிபாட்டு மூர்த்தியாக இருந்த சாஸ்தாவின் காதில் விழுந்தது. தன்னுடைய தாயான அம்பிகையைப் பற்றி இப்படிப் பேசுகிறார்களே என்று எண்ணிய சாஸ்தா, வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு அம்பிகைக்குத் துணையாகப் புறப்பட்டார். அம்பிகையுடன் சோட்டானிக்கரை ஆலயம் வரை வந்த சாஸ்தா, அங்கேயே அவளுக்குத் துணையாகத் தங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே ஆலயத்தில் அம்பிகைக்கு அருகில் சாஸ்தா எழுந்தருளியிருப்பதாக ஐதிகம்.
இன்றும் ஆலயத்தில் பஜனம் இருப்பவர்கள் இரவு நேரத்தில் தங்கியிருக்கும்போது, அம்பிகையின் கொலுசுச் சத்தத்தையும், சாஸ்தா வில்லூன்றி நடக்கும் சத்தத்தையும் கேட்டதாகச் சில பக்தர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதைக் கேட்கலாம்.
மேல்காவு, கீழ்காவு என இரண்டு சந்நிதிகளிலும் தனித்தனியாகச் சாஸ்தா அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது. மேல்காவு சந்நிதியில் அம்பிகை, சிவபெருமான், சாஸ்தா, கணபதி ஆகியோரையும், கீழ்காவு சந்நிதியில் பத்ரகாளியுடன் சாஸ்தாவையும் தரிசிக்கலாம்.

எப்போது தரிசனம் செய்யலாம்?
சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி காலம் மிகவும் விசேஷமானது. ஆடி மாதம், கேரளத்தில் கர்க்கடக மாதம் என்று அழைக்கப்படும் காலத்திலும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். கேரளத்தில் கர்க்கடக மாதம் ராமாயண மாதமாகக் கடைப்பிடிக்கப்படுவதால், அந்த மாதத்தில் ராமாயண பாராயணம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறும்.
இதனால் அம்பிகை ஆலயத்தில் ஓரளவு கூட்டம் குறைவாக இருக்கும். தரிசனத்தை நிதானமாக மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்தக் காலத்தையும் தேர்வு செய்யலாம். குருதி பூஜையைத் தரிசிக்க விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை செல்லலாம். அன்று இரவு சுமார் 8 மணிக்குப் பிறகு பெரிய குருதி பூஜை நடைபெறும்.
அதேநேரத்தில் மேல்காவு, கீழ்காவு ஆகிய இரண்டு சந்நிதிகளிலும் தரிசனம் செய்ய விரும்புபவர்கள் மாலை நேரத்திலேயே ஆலயத்துக்குச் செல்வது சிறந்தது. மேல்காவு பூஜைகள் முடிந்து நடை சாத்தப்பட்ட பிறகே கீழ்காவு குருதி பூஜை தொடங்கும் என்பதால், முன்கூட்டியே சென்று இரண்டு சந்நிதிகளையும் தரிசித்துவிட வேண்டும்.
மேல்காவு ராஜராஜேஸ்வரியாகவும், கீழ்காவு பத்ரகாளியாகவும் அருள்பாலிக்கும் அம்பிகையைத் தரிசித்து, அவளுடைய திருவருளைப் பெறுவதற்காகப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அம்பிகையின் அருளை நாடி வரும் பக்தர்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கும் திருத்தலமாகச் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் திகழ்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


