சத்குருவிற்கு உலக அமைதி விருது: மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வழங்கினார்


கோவை: ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு, உலகளாவிய அமைதி, மனிதநேயம், சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கி வருவதற்காக ‘உலக அமைதி விருது 2026’ வழங்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள புகழ்பெற்ற ‘கேட்வே ஆஃப் இந்தியா’ பகுதியில், கடந்த சனிக்கிழமை (21/11/2026) அன்று ‘திவ்யஜ் அறக்கட்டளை’ சார்பில் ‘உலக அமைதி விருதுகள் 2026’ வழங்கப்பட்டன. இவ்விழாவில், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் ஆஷிஷ் ஷெலார் ஆகியோர் இணைந்து சத்குருவின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருதை வழங்கிக் கௌரவித்தனர்.

sadhguru2



இவ்விழாவில் சத்குருவுடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், லாய்ட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி. பிரபாகரன் மற்றும் 2008-ஆம் ஆண்டு மும்பை 26/11 தீவிரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்தவரான தேவிகா ரோட்டாவன் ஆகியோருக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.  


விருது வழங்கும் விழாவின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சத்குருவின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சத்குரு பேசுகையில் “மகாராஷ்டிரா எதிர்கொண்டுள்ள நீர் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு மரம் சார்ந்த விவசாயம் ஒரு முக்கியமான வழிமுறையாக இருக்கும். நீரை நீர்நிலைகளில் சேமிப்பதோடு மட்டுமின்றி, மண்ணில் நீரைத் தக்கவைக்கும் திறனையும் மேம்படுத்த வேண்டும். விவசாய நிலங்களில் மரங்களை இணைத்து வளர்ப்பதன் மூலம் மண்ணின் வளத்தையும், நீரைத் தக்கவைக்கும் திறனையும் மேம்படுத்துவதுடன், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்க முடியும்.

ஈஷாவின் ‘மண் காப்போம் - காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் மரம் சார்ந்த விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளின் வருமானம், கடந்த 6 முதல் 8 ஆண்டுகளில் 300 முதல் 800 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதிக எண்ணிக்கையில் மரங்களை நடவு செய்வது மட்டுமே இதற்குத் தீர்வாகாது. மரம் சார்ந்த விவசாய முறையை அறிவியல் பூர்வமாகச் செயல்படுத்தினால் மட்டுமே அதன் முழுமையான பலன்களைப் பெற முடியும்” எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ், “மகாராஷ்டிரா அரசின் ‘ஜல்யுக்த் ஷிவார் 3.0’ திட்டத்தில் மரம் சார்ந்த விவசாய முறையை இணைத்து செயல்படுத்துகிறோம். இதற்காக ஈஷா அறக்கட்டளையின் அனுபவங்களையும் வழிமுறைகளையும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், தனது குழுவை சத்குருவுடன் கலந்தாலோசிக்க அனுப்ப உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் தொழில் சார்ந்த அழுத்தங்கள், சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் சமூக எதிர்பார்ப்புகள் குறித்த கேள்விக்குப் சத்குரு பதிலளிக்கையில் “நமது சமூகச் சூழலோ அல்லது நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகளின் தன்மையோ நமக்கு மன அழுத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்துவதில்லை. நம்முடைய உடல், எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் உயிர்ச் சக்திகளை நம்மால் முறையாக நிர்வகிக்க முடியாததே இதற்குக் காரணம்.

நாம் எதை மன அழுத்தம், பதற்றம், துயரம் என்று அழைக்கிறோமோ, அவை அனைத்தும் அடிப்படையில் நமது புத்திசாலித்தனமே நமக்கு எதிராகச் செயல்படுவதன் வெளிப்பாடுகளாகும். நமது அறிவாற்றல் நமக்குச் சாதகமாகச் செயல்படும் வகையில் அதைக் கையாளத் தெரியாதபோது, அதுவே நமக்கு எதிராகத் திரும்பிவிடுகிறது” என்று சத்குரு கூறினார்.

இவ்விழாவில் துணை முதலமைச்சர் சுனேத்ரா அஜித் பவார், தொழிலதிபர் அனந்த் அம்பானி, பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மேலும், 26/11 மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், நாட்டைக் காக்கப் போராடி உயிர்நீத்த பாதுகாப்புப் படையினருக்கும் இவ்விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.