சத்தியவான் சாவித்திரி விமர்சனம்: நவீன சாவித்திரியின் கதை - கவனம் பெறுகிறதா இந்த குறுக்கு விசாரணை?
வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் சாவித்திரி (கீர்த்தி சுரேஷ்), விருப்பமில்லாத நிலையிலும் தீபக்கை (சாருகேஷ்) திருமணம் செய்துகொண்டு சென்னை வருகிறார். பிரபல வழக்கறிஞர் மார்க்கண்டேயனிடம் (மிஷ்கின்) பயிற்சி பெறும் அவர், மருத்துவக் கல்லூரி டீன் தொடர்பான வழக்கில் தனது குருவையே எதிர்த்து வாதாடுகிறார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. இந்நிலையில் கொலை வழக்கில் தீபக் கைதாக, கணவரைக் காப்பாற்ற மீண்டும் மார்க்கண்டேயனை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார் சாவித்திரி. அந்தச் சட்டப் போராட்டத்தின் முடிவு என்ன என்பதே அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய்யின் ‘சத்தியவான் சாவித்திரி’.
சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், அனுபவமற்ற வழக்கறிஞரின் தயக்கத்தையும், அதே நேரம் எதையும் சமாளிக்கும் புத்திசாலித்தனத்தையும் சரியான அளவில் வெளிப்படுத்துகிறார். நகைச்சுவைக் காட்சிகளில் இயல்பாகவும், உணர்ச்சிகரமான காட்சிகளில் தீவிரமாகவும் நடித்தாலும், வழக்கமான நீதிமன்ற நாயகனின் வார்ப்பில் எழுதப்பட்ட கதாபாத்திரம் அவரின் நடிப்புக்குக் கட்டுப்பாடாக அமைகிறது. தோல்வியே அறியாத மூத்த வழக்கறிஞராக மிஷ்கின், தனது மிகையான உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் நீதிமன்ற மோதல்களுக்குப் பரபரப்பு சேர்க்கிறார். ஆனால், கதை நகர நகர அவரது கதாபாத்திரமும், அவரது உடல்மொழியும் சலிப்பு தட்டுகின்றன. தீபக்காக சாருகேஷ் தன் கதாபாத்திரத்தின் மர்மத்தைத் தக்கவைக்கிறார். சாவித்திரியுடன் சக வழக்கறிஞராகப் பயணிக்கும் பால சரவணனின் நகைச்சுவை ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது.
தொழில்நுட்ப ரீதியாக அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவில் குறை ஒன்றுமில்லை. அதே நேரத்தில் புதுமையும் இல்லை. நீதிமன்ற விவாதங்களுக்கு வேகம் சேர்க்க முயலும் பிரசன்னா ஜி.கேவின் படத்தொகுப்பு பெருமளவில் கைகொடுத்தாலும், சில இடங்களில் அவரது ஃபாஸ்ட் கட்ஸ் ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது. சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை பல இடங்களில் தேவைக்கு அதிகமாக ஒலித்து, உணர்வுகளை வலிந்து திணிக்கிறது.

எமனிடமிருந்து கணவரின் உயிரை மீட்ட புராணச் சாவித்திரியின் கதையை நவீன நீதிமன்றப் பின்னணியில் பொருத்தியிருப்பது சுவாரஸ்யமான யோசனையே. குறிப்பாகத் தொடக்கத்தில் புராணக் கதையை மேடை நாடகமாகக் காட்டுவது, பின்னர் நடக்கவிருக்கும் மோதலுக்கு அறிமுகமாக அமைகிறது. எமனின் விதிகளையே பயன்படுத்தி அவனை வெல்லும் சாவித்திரியைப் போல, சட்டத்தின் வழியே வலிமையான எதிரியை வீழ்த்தும் நாயகி என்ற ஒப்புமையும் ரசிக்க வைக்கிறது. வசனங்களில் இடம்பெறும் பதிலடிகளும், முன்பு சொல்லப்பட்ட வார்த்தைகள் பின்னர் வேறொரு பொருளில் திரும்புவதும் திரைக்கதையின் சில சுவாரஸ்யமான அம்சங்கள்.
ஆனால், இந்த யோசனைகள் அதே முழுமையுடன் திரைக்கு வருவதில் நிறையத் தடுமாற்றங்கள். கதாபாத்திரங்களின் முடிவுகளும் சம்பவங்களும் இயல்பாக வளராமல், இறுதித் திருப்பத்தை நோக்கியே நகர்வது சிக்கல். இதனால் சுவாரஸ்யமான திருப்பங்கள்கூட எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன. விருப்பமில்லாத திருமணத்தைச் சாவித்திரி ஏற்றுக்கொள்வதும், தீபக்கின் மீது காதல் உருவாவதும் என முக்கிய அம்சங்கள் அவசரமாகக் கடந்துபோகின்றன. பெண்களின் சுதந்திரம், ஆணாதிக்கம், திருமண உறவின் சிக்கல்கள், நீதித்துறையின் குறைபாடுகள் எனப் பலவற்றைப் பேச முற்படும் படம், எதையும் ஆழமாக அணுகவில்லை. நீதிமன்ற விவாதங்களில்கூட சட்டப்பிரிவுகளையும் ஆதாரங்களையும் விட டிராமாவே மேலோங்குகிறது. ஒரு கட்டத்தில் நீதிமன்ற டிராமாவைவிட, அடுத்தடுத்த ரகசியங்களை வெளிப்படுத்தும் புலனாய்வுத் திரில்லராகவே படம் நகர்கிறது.

அதே சமயம், முதல் பாதியில் காதல், நகைச்சுவை, நீதிமன்ற டிராமா எனத் திரைக்கதை தடுமாறினாலும், இரண்டாம் பாதியில் தனிப்பட்ட பகையாக மாறும் சட்டப் போராட்டம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இறுதித் திருப்பத்தின் சர்ப்ரைஸும் காக்கப்படுகிறது. ஆனால், அந்தத் திருப்பத்துக்காகவே சில காட்சிகள் செயற்கையாக வடிவமைக்கப்பட்டிருப்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. கதாபாத்திரங்கள் தங்கள் இயல்புக்கு ஏற்ப முடிவெடுப்பதைவிட, திரைக்கதைக்குத் தேவையான இடத்தில் தேவையான முடிவுகளை நம்ப முடியாத வகையில் எடுக்கின்றன.
மொத்தத்தில், பெண்களின் உரிமையையும் சுயச்சார்பையும் பேசத் தொடங்கி, இறுதியில் திருப்பங்களை மட்டுமே நம்பிய வழக்கமான பொழுதுபோக்குப் படமாகச் சுருங்கிவிடுகிறது. நீதிமன்றத்தில் சாவித்திரி முன்வைக்கும் வாதங்களைப் போலவே, படத்தின் திரைக்கதையும் குறுக்கு விசாரணையை முழுமையாகத் தாங்கவில்லை!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

