IPL 2027: தோனி ஓய்வு; ஸ்டார்க் - போல்ட் விடுவிப்பு - வரும் ஐபிஎல் மினி ஏலம் எப்படி இருக்கும்?
ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்னதாக அனைத்து 10 அணிகளும் தங்களது தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை அணிகள் எடுத்திருக்கும் அதிரடி முடிவுகள், கோவாவில் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறவுள்ள ஏலத்தை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் மாற்றப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வரலாற்று மாற்றங்களும், அதிர்ச்சி வெளியேற்றங்களும்
இந்த முறை தக்கவைப்பு பட்டியலில் மிகப்பெரிய உணர்வுப்பூர்வமான மற்றும் முக்கியமான மாற்றம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிகழ்ந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றின் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி தனது ஓய்வை அறிவித்துவிட்டு, 2027 சீசனில் சிஎஸ்கே அணியின் ஆலோசகராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். மறுபுறம், அணிகளின் பர்ஸ் தொகையை அதிகரிக்கும் நோக்கில் பல நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக டெல்லி கேபிடல்ஸ் அணி மிட்செல் ஸ்டார்க்கையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டையும், மும்பை இந்தியன்ஸ் அணி டிரெண்ட் போல்ட் மற்றும் தீபக் சாஹரையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மதீஷா பதிரனா மற்றும் ரச்சின் ரவீந்திராவையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷிம்ரான் ஹெட்மயரையும் விடுவித்திருப்பது ஏலக்களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணிகளின் பர்ஸ் பலமும், ஏல வியூகங்களும்
ஏலத்தில் எந்த அணி ஆதிக்கம் செலுத்தப்போகிறது என்பதை அவர்களிடம் மீதமுள்ள தொகையே தீர்மானிக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ. 47.45 கோடி என்ற மிகப்பெரிய தொகையுடன் ஏலத்திற்குள் நுழைகிறது. ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கும், முகமது ஷமி ராஜஸ்தான் அணிக்கும் டிரேட் செய்யப்பட்டதாலும், ஆன்ரிச் நார்ட்ஜே, வனிந்து ஹசரங்கா, அவேஷ் கான் ஆகியோர் விடுவிக்கப்பட்டதாலும் லக்னோவிடம் இவ்வளவு பெரிய தொகை குவிந்துள்ளது.
இவர்களுக்கு அடுத்தபடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.41.65 கோடி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ. 40.15 கோடி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ரூ.39.50 கோடி ஆகிய அணிகள் வலுவான பர்ஸ் தொகையுடன் காத்திருக்கின்றன. அதே சமயம், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.14.15 கோடி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ரூ.8.75 கோடி ஆகிய அணிகள் தங்களது முக்கிய வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டு, சிறிய அளவிலான மாற்றங்களுக்கு மட்டுமே ஏலத்தை நம்பியுள்ளன.

ஏலத்தில் மோதப் போகும் நட்சத்திர வீரர்கள் ஒப்பீடு
இந்த மினி ஏலத்தில் சில குறிப்பிட்ட இடங்களுக்கு அணிகளிடையே கடும் போட்டி நிலவப்போகிறது. இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் ஒரே ஏலத்தில் வருவது அரிதான நிகழ்வு. பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவதில் போல்ட் கில்லாடி என்றால், டெத் ஓவர்களிலும் பெரிய போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஸ்டார்க் வல்லவர்.
போல்ட்டை விடுவித்துவிட்டு பஞ்சாப் அணியிடமிருந்து அர்ஷ்தீப் சிங்கை டிரேட் செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் பும்ரா - அர்ஷ்தீப் கூட்டணிக்குத் துணையாக மீண்டும் போல்ட்டையோ அல்லது ஸ்டார்க்கையோ வாங்க முயற்சிக்கலாம். மறுபுறம், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் மதீஷா பதிரனாவை கேகேஆர் விடுவித்துள்ள நிலையில், பதிரனா மற்றும் மேட் ஹென்றி ஆகியோரைக் குறிவைத்து சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் ஏலத்தில் களமிறங்கும்.
இந்திய வீரர்களுக்கான மவுசு
மினி ஏலத்தில் தரமான இந்திய வீரர்களுக்கு எப்போதும் அதிக விலை கிடைக்கும். அந்த வகையில், மிடில் ஆர்டர் அதிரடி வீரர்களான நேஹல் வதேரா மற்றும் மசூத் ஷாருக் கான், இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அபிஷேக் போரெல் ஆகியோருக்கு அணிகளிடையே பலத்த போட்டி நிலவும். பந்துவீச்சில் தீபக் சாஹர், அவேஷ் கான், ஆகாஷ் தீப் மற்றும் வேகப்புயல் உம்ரான் மாலிக் ஆகியோரைத் தட்டித் தூக்க இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தேவைப்படும் அணிகள் பெரும் தொகையைச் செலவிடத் தயாராக இருக்கும்.
டிரேட் விண்டோ மூலம் ஹர்திக் பாண்டியா (MI-லிருந்து PBKS), ரிஷப் பண்ட் (LSG-லிருந்து DC), சஞ்சு சாம்சன் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் (CSK), முகமது ஷமி (LSG-லிருந்து RR) என ஏற்கனவே அணிகளின் சமநிலை மாறியுள்ளது. இப்போது ஸ்டார்க், ஹெட், போல்ட், பதிரனா, ஹெட்மயர் போன்ற மேட்ச் வின்னர்கள் ஏலத்திற்கு வருவதால், டிசம்பர் 16-ம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் 2027 ஏலம் ஒரு மினி ஏலமாக இல்லாமல், மெகா ஏலத்திற்கு இணையான பரபரப்பைக் கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

