``IPL தொடரிலிருந்துதான் ஓய்வு: CSK-வுடன் தோனி பயணிப்பார் - சீனிவாசன்
ஐபிஎல் தொடரில் வீரராக மகேந்திர சிங் தோனியின் பயணம் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. வீரராகத் தனது ஓய்வை அறிவித்துள்ள அவர், வரும் 2027-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் முதல் CSK அணியின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சென்னை அணியுடனான அவரது நீண்டகாலப் பந்தம் புதிய வடிவத்தில் தொடர்வதை CSK அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தோனியின் தலைமையின்கீழ் 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. ஐபிஎல் அரங்கில் மொத்தம் 278 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 24 அரைசதங்களுடன் 5,439 ரன்கள் குவித்துள்ளார்.
இதில் சிஎஸ்கே அணிக்காக மட்டும் 272 போட்டிகளில் களமிறங்கி 5,314 ரன்கள் சேர்த்து, அந்த அணிக்காக அதிகப் போட்டிகளில் விளையாடிய வீரர் மற்றும் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையுடன் தனது வீரர் அத்தியாயத்தை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், வீரராக ஓய்வு பெற்று மென்டராகப் புதிய பயணம் தொடங்கும் தோனிக்கு சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் மற்றும் இணை உரிமையாளர் ரூபா குருநாத் ஆகியோர் நெகிழ்ச்சியுடன் புகழாரம் சூட்டியுள்ளனர்.
கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக அணிக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பையும், இக்கட்டான காலகட்டத்தில் அணியை வழிநடத்த அவரது இருப்பின் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து என். சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகேந்திர சிங் தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக வெற்றிகள், பின்னடைவுகள் என அனைத்திலும் நாங்கள் இணைந்தே பயணித்து வளர்ந்துள்ளோம். எங்கள் உறவு இவ்வளவு வலிமையாக இருப்பதற்கு ஒரே காரணம், நாங்கள் ஒருவரையொருவர் சந்தேகிப்பதில்லை என்பதுதான். அந்த நம்பிக்கையே இந்தப் பயணத்தைச் சாத்தியமாக்கியது.
2008-ல் தோனி சிஎஸ்கே அணியில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அதுவே நான் எடுத்த மிகச்சிறந்த முடிவாக அமைந்தது. அணிக்காக அவர் குவித்த சாதனைகளுக்காக மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதாலேயே என் மதிப்பு உயர்ந்தது. தோனி எப்போதும் எங்கள் அடையாளத்தின் ஒரு பகுதியாக இருப்பார். சென்னை எப்போதும் அவருடைய வீடாகவே இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அணியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய ரூபா குருநாத், "சிஎஸ்கே குடும்பத்தின் ஒரு அங்கமாக மென்டர் பொறுப்பில் தோனி தொடர்ந்து பயணிப்பார். குறிப்பாக, அணி ஒரு மாற்றத்தை நோக்கிச் செல்லும் இந்தக் காலகட்டத்தில் அவரது அனுபவமும், நிபுணத்துவமும் எங்களுக்கு விலைமதிப்பற்றது. அணியில் பல இளம் வீரர்கள் இருக்கும் நிலையில், அடுத்த தலைமுறை சிஎஸ்கே அணியை உருவாக்க அவரது வழிகாட்டுதல் பெரிதும் உதவும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே நிர்வாகமும் தங்களது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், ``எண்ணற்ற வெற்றிகள், சவாலான தருணங்கள் மற்றும் நம் இதயத்தில் நீங்காத நினைவுகள் எனத் தொடக்கத்திலிருந்தே தோனி எங்கள் பயணத்தின் இதயமாக இருந்துள்ளார். அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது முதல், அடுத்த தலைமுறை வீரர்களை வழிநடத்துவது வரை தல எப்போதும் எங்கள் அடையாளமாக இருப்பார்" என்று பதிவிட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

