Scene: எனக்கு சீன் படத்துல பிடிச்ச பாட்டு இதுதான்னு சூர்யா சார் சொன்னார்! - விஜய் நரேன் பேட்டி

சூர்யாவின் சீன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஜித்து மாதவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் வரும் உனக்கே நிழலானேன் என்ற பாடலைப் பின்னணிப் பாடகர் விஜய் நரேன் பாடியிருக்கிறார்.

ஏய் சுழலி, போறேன் நான் போறேன் போன்ற பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இவர். சீன் படத்திற்கு வாழ்த்து சொல்லி அவரைப் பேட்டி கண்டோம்.

Scene Movie

நம்மிடையே பேசியவர், "நான் பிளேபேக் சிங்கராகக் கரியரைத் தொடங்கிய காலத்திலிருந்தே, அதாவது எனது கல்லூரி நாட்களில் இருந்தே சூர்யா சாருக்கு ஒரு பாடலாவது பாட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது.

ஏனெனில், அவரது காதல் பாடல்களில் இருக்கும் உணர்ச்சிகளை அவரைப்போல வேறு யாராலும் வெளிப்படுத்த முடியாது. இன்றைக்கு அந்த ஆசை முழுமையாக நிறைவேறியிருக்கிறது என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்.

எனக்கு இதற்கு முன்பாகத் தீபாவளி ரிலீஸாக வெளியான படம் என்றால் அது கொடி படத்தில் வரும் இயேசுவே பாடல்தான். அதன்பிறகு இப்போதுதான் எனது பாடல் இடம்பெறும் படம், தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாகிறது" என்றவர், "சீன் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் உனக்கே நிழலானேன் பாடலை நான் மேடையில் பாடியபோது ரசிகர்களிடமிருந்து கிடைத்த அன்பு அளப்பரியது.

சூர்யா சார் மேடைக்கு வரும்போது அரங்கம் முழுவதும் அவ்வளவு ஆரவாரமும் அன்பும் நிறைந்திருந்தது. சூர்யா சாருக்கு இருக்கும் ரசிகர்களின் அன்பு முற்றிலும் மாறுபட்டது. ரசிகர்கள் காட்டும் அன்பிலேயே அது தெளிவாகத் தெரிகிறது.

அப்படிப்பட்ட ஒரு சூழலில் நான் பாடியதே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன்.

மேடையில் பாடுவதற்கு முன்பு பயங்கர நெர்வஸாகத்தான் இருந்தேன். ஆனால், பாடி முடித்த பிறகு விவரிக்க முடியாத ஒரு சந்தோஷம் கிடைத்தது.

Vijay Narain
Vijay Narain

சூர்யா சாரிடமே நேரடியாகச் சென்று, உங்களுக்கு ஒரு காதல் பாடல் பாட வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு சார் எனச் சொல்லிவிட்டு அவரைச் சந்தித்தேன். எல்லாமே ஒரு கனவுபோலவே இருந்தது.

சூர்யா சார் என்னிடம், நீங்கள் இந்தப் பாடலை பாடியதில் எனக்கு மகிழ்ச்சி. இந்தப் படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான் என்றார். அதன்பிறகு அவருடன் போட்டோ எடுக்க என்னுடைய மொபைலைத் தேடியபோது அதைக் காணவில்லை.

உடனே அவரே, போட்டோகிராபர்களைக் கூப்பிட்டு எங்களை போட்டோ எடுக்க வைத்தார். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத செம மொமெண்ட்!" என்றார் நெகிழ்ச்சியுடன்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.