“நன்றி, டெஸ்ட் கிரிக்கெட்” எண்ணற்ற காயங்கள்; அளவற்ற சாதனைகள்... டெஸ்ட் பயணத்துக்கு விடைகொடுத்த ஷமி!

காயங்கள் எத்தனை முறை முடக்கியபோதும், ஒவ்வொரு முறையும் மீண்டு வந்து களத்தில் நின்றவர். இந்திய டெஸ்ட் அணியின் வெள்ளைச் சீருடையை மீண்டும் அணிந்துவிட மாட்டோமா என்ற நம்பிக்கையோடு காத்திருந்தவர். அப்படி பல தடைகளைக் கடந்து போராடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்திருக்கிறார். 13 ஆண்டுகாலப் பயணத்தில் 64 போட்டிகள், 229 விக்கெட்டுகள் எனத் தனது முத்திரையைப் பதித்துவிட்டு அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு, கிரிக்கெட் ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமான ஒன்றாக மாறியிருக்கிறது.

வெள்ளைச் சீருடையில் தொடங்கிய கனவு!

2013 நவம்பர் 6... கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானம். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக முதன்முதலாகக் களமிறங்கினார் ஷமி. அறிமுகப் போட்டி என்ற பதற்றம் கொஞ்சமும் இல்லாமல் பந்துவீசியவர், இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கிரிக்கெட் உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார். 118 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகள் என்பது அந்தப் போட்டியில் அவருடைய அசாத்தியமான செயல்பாடு.

அந்த அறிமுகப் போட்டியில் தொடங்கிய அதிரடி, அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர்ந்தது. தனது துல்லியமான பந்துவீச்சால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுப் படையில் முக்கிய இடத்தைப் பிடித்தார். புதிய பந்தில் ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களைத் திணறடிப்பதோடு, பழைய பந்திலும் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவராகத் திகழ்ந்தார். குறிப்பாக, வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் வெற்றிகளுக்குத் தனது பந்துவீச்சால் வலுசேர்த்தார்.

2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி, இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினார். அடுத்த தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மீண்டும் தனது முத்திரையைப் பதித்தார்.

இப்படிப் பல்வேறு சூழல்களில் தனது பந்துவீச்சால் இந்திய அணிக்குப் பக்கபலமாக இருந்த ஷமி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 64 போட்டிகளில் 229 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆறு முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஆறாவது இடம். இந்தச் சாதனைகளுக்குப் பின்னால் இருந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் சாதாரணமானதல்ல.

விக்கெட்டுகளை வீழ்த்திய கைகள்... காயங்களால் முடங்கிய காலம்!

ஆனால், ஷமியின் கிரிக்கெட் பயணம் எப்போதும் இப்படியான வெற்றிகளால் மட்டுமே நிரம்பியிருக்கவில்லை. 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக அபாரமாகப் பந்துவீசியவர், அந்தத் தொடருக்குப் பிறகு ஏற்பட்ட கணுக்கால் காயத்தால் நீண்ட இடைவெளியைச் சந்திக்க வேண்டியிருந்தது.

கணுக்கால் பகுதியில் அறுவை சிகிச்சை, அதற்குப் பிறகான ஓய்வு, மீண்டும் உடற்தகுதியைப் பெறுவதற்கான பயிற்சிகள் என மைதானத்துக்கு வெளியே நீண்ட காலத்தைச் செலவிட வேண்டியிருந்தது. ஒருவழியாகக் காயத்திலிருந்து மீண்டு வந்தபோது, இடது முழங்காலில் ஏற்பட்ட வீக்கம் அவரை மீண்டும் முடக்கியது. இந்திய அணிக்குத் திரும்ப வேண்டும் என்ற முயற்சிக்கு ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தடை வந்துகொண்டே இருந்தது.

இருந்தாலும், ஷமி அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கவில்லை. 2025 ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் மூலம் இந்திய அணிக்குத் திரும்பியவர், ஜனவரி 28-ம் தேதி நடைபெற்ற மூன்றாவது போட்டியில் களமிறங்கினார். தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாடினார். ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் எந்தவொரு ஃபார்மேட்டிலும் அவர் மீண்டும் இடம்பிடிக்கவில்லை.

அதேநேரத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் மேற்கு வங்க அணிக்காக விளையாடி தனது திறமையைத் தொடர்ந்து நிரூபித்துவந்தார். ஐபிஎல் போட்டிகளிலும் களமிறங்கினார். இந்திய அணிக்குத் திரும்புவதற்கான கதவு எப்போது திறக்கும் என்ற எதிர்பார்ப்பும் தொடர்ந்துகொண்டே இருந்தது.

கடைசிப் பந்துக்குப் பிறகும் தொடரும் நினைவுகள்!

ஷமியின் கடைசி டெஸ்ட் போட்டி 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி. அந்தப் போட்டிக்குப் பிறகு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் களமிறங்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படியான சூழலில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்திருக்கிறார். தனது சமூக வலைதளப் பதிவில் அந்த முடிவுக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

"இன்று கனத்த இதயத்துடனும் எண்ணற்ற அழகான நினைவுகளுடனும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்திருக்கிறேன். இந்தப் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவளித்த ஒவ்வொரு சக வீரர், பயிற்சியாளர், குடும்ப உறுப்பினர் மற்றும் நல்ல நேரங்களிலும் கடினமான காலங்களிலும் என் மீது நம்பிக்கை வைத்திருந்த கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் நன்றி" எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், "முதன்முதலில் இந்திய டெஸ்ட் ஜெர்சியை அணிந்தபோது, என் நாட்டுக்காக ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே கனவாக இருந்தது. அதன்பிறகு நான் வீழ்த்திய ஒவ்வொரு விக்கெட்டும், எதிர்கொண்ட ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு காயமும், ஒவ்வொரு மீள்வருகையும் எனக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் என்பது எனக்கு வெறும் போட்டி வடிவம் மட்டுமல்ல; அது என் வாழ்க்கையின் மிகச் சிறப்பான பகுதி" என உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

தொடர்ந்து, "டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய கடைசிப் பந்தை வீசியிருந்தாலும், இந்தியாவுக்காக விளையாடிய பெருமையை எப்போதும் என் இதயத்தில் சுமந்திருப்பேன். நன்றி, டெஸ்ட் கிரிக்கெட்" எனக் குறிப்பிட்டு தனது பதிவை நிறைவு செய்திருக்கிறார்.

இன்னொரு சுவாரஸ்யமான ஒற்றுமையும் இந்த ஓய்வு அறிவிப்பில் இருக்கிறது. 2013 நவம்பர் 6-ம் தேதிதான் ஷமி தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். சரியாக 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே நவம்பர் 6-ம் தேதி தனது ஓய்வு முடிவையும் அறிவித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தாலும், கிரிக்கெட் மைதானத்திலிருந்து ஷமி விடைபெறவில்லை. 

ஒரு காலத்தில் இந்திய அணிக்காக டெஸ்ட் பந்துவீச்சில் நம்பிக்கையின் அடையாளமாக இருந்தவர் ஷமி. அவரது பயணத்தில் வெற்றிகளும் இருந்தன; காயங்களும் இருந்தன; நீண்ட காத்திருப்பும் இருந்தது. ஆனால், அந்த எல்லாவற்றையும் தாண்டி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் கொடுத்த 229 விக்கெட்டுகளும், மறக்க முடியாத பந்துவீச்சுத் தருணங்களும் எப்போதும் நினைவில் இருக்கும். வெள்ளைச் சீருடை இனி அவரைத் தேடி வராது... ஆனால், அந்தச் சீருடையில் அவர் உருவாக்கிய நினைவுகள் ரசிகர்களைத் தேடி வந்துகொண்டே இருக்கும்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.