Scene: அப்போது என்னுடைய குரல் முழுவதுமாக போய்விட்டது; ஆனால் லிப் சிங்க் செய்யாமல்... - விஜய் நரேன்
ஏய் சுழலி, போறேன் நான் போறேன் என நமக்கு ஃபேவரிட்டான பல பாடல்களைப் பாடியவர் பின்னணிப் பாடகர் விஜய் நரேன். சமீபத்தில் இவரின் கேரளநாடு பாடலும் இணையத்தில் வைரலானது. இவர் சீன் படத்திலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவிலும் இவர் லைவ்வாக இப்பாடலைப் பாடியிருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு முந்தைய நாள், அவருக்குக் குரலில் பிரச்னை ஏற்பட்டது பற்றியும், அப்படியான சூழலிலும் அடுத்த நாள் இப்பாடலைப் பாடியது பற்றியும் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், "சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஒரு நாளுக்கு முன்பாக, எனக்குத் திடீரெனக் குரல் முழுமையாகப் போய்விட்டது. அது வெறும் தொண்டை வலி மட்டுமல்ல.
ரயில் பாதையில் ரயில் சக்கரம் உராயும் சத்தம் வருவது போல, என்னுடைய குரல் மிகவும் கரகரப்பாக இருந்தது. வேறு வழியின்றி வெள்ளிக்கிழமை மாலையில் மருத்துவரை அணுகியபோது, தொண்டையிலிருந்த வீக்கத்தைக் குறைக்க எனக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.
அந்த வீக்கம் குறைந்து சனிக்கிழமை காலையிலாவது எனது குரல் மீண்டும் திரும்பிவிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். ஏனெனில், நிகழ்ச்சியில் லிப் சிங்க் செய்து பாடுவதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது!
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும் எனது சூழ்நிலையை முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். அவர்களும் லிப் சிங்க் செய்துகொள்ளும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தார்கள்.
சனிக்கிழமை காலை எழுந்தபோது குரலில் லேசான கரகரப்பு இருந்தாலும், என்னால் பேச முடிந்தது. மாலை வரை பேசாமல் அமைதியாக இருந்தால், மேடையில் பாடும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பினேன்.
மாலை 4 மணிக்குச் சவுண்ட் செக் நடந்தபோது எனது குரலின் கரகரப்பு தெளிவாகக் கேட்டது. அப்போதும் லிப் சிங்க் செய்யும் வாய்ப்பு இருந்தது, ஆனால் நேரலையிலேயே பாடிப் பார்ப்பது எனத் தைரியமாக முடிவெடுத்தேன்.
ஒரு இசைக்கலைஞனுக்கு நேரலை கலை நிகழ்ச்சிகளே ரசிகர்களுடன் நேரடியாக ஒன்றிணைவதற்குச் சரியான வழி என்பதில் நான் தீவிர நம்பிக்கை கொண்டவன்.
Imagine being given an opportunity to perform a song youve sung for one of the biggest actors in Tamil at the audio launch, and your voice just decides to shut down 36 hours prior. Buckle up for the story. https://t.co/JasYRdZKBh
— Vijaynarain (@Vijaynarain) November 1, 2026
சில தவறுகள் இருந்தால் என்ன, இறுதியில் மேடையேறிப் பாடியபோது, பிரபஞ்சத்தின் அருளால் என் குரலிலேயே ஒருவழியாகப் பாடி முடித்தேன்.
சில தவறுகள் இருக்கத்தான் செய்தன. எனது குரல் முதல் வரியிலேயே சற்று உடைந்தது உங்களுக்கே கேட்கும். இருப்பினும் நேரலையிலேயே பாடி முடித்த அந்தத் தருணம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது" எனப் பகிர்ந்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


