`மாறும் முகேஷின் லவ் டிராக்; உயரும் வாசனின் கிராஃப்; விசே-வின் மாற்றம்! - BB வீட்டில் நடந்தது என்ன?

ஷமாவைத் தொடர்ந்து இன்னொரு காமன்மேன் போட்டியாளர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஷமா அளவிற்கு கரிஷ்மா சிறந்த போட்டியாளர் இல்லைதான். ஆனால் அவரை விடவும் சுமாராக ஆடுகிறவர்கள் இன்னமும் வீட்டில் இருக்கிறார்கள். 

வைரம் திருடும் டாஸ்க்கில் வெற்றி பெற்று EVP பெற்ற வாசன், கூட்டாளியாக இருந்த கரிஷ்மாவிற்கு, அவசியப்படும் போது பங்கு தருவதாக சொன்ன நினைவு.

எனில் ஏன் அந்த பாஸை கரிஷ்மாவிற்காக வாசன் பயன்படுத்தவில்லை?

ஆங்காங்கே நடந்த உதிரிச் சண்டைகளைத் தவிர இந்த வாரத்தின் ஹைலைட்டும் ‘வீக்லி டாஸ்க்’தான்.   கடந்த வாரத்தில் நிகழ்ந்த ‘Survival Battle’ என்கிற டாஸ்க்கையே இன்னொரு வடிவில் தந்தார் பிக் பாஸ். அதற்கு Mining Mafia, Quick gun cowboys’  என்கிற லேபிள் வேறு. 

மறுபடியும் அதேதான். ஒருவரின் உணவு, உறக்கம், உடைமை போன்ற அடிப்படையான விஷயங்களை பறித்துக் கொண்டால் அவர்கள் எப்படி தங்களுக்குள் ஆவேசமாக சண்டையிட்டுக் கொள்வார்கள், அவர்களுக்குள் இருக்கிற காட்டுமிராண்டித்தனங்கள் எவ்வாறு வெளிப்படும் என்கிற பரிசோதனை மீண்டும் நிகழ்ந்தது.   இவை தவிர ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற ஈகோ, வன்மம், குரோதம், பகைமை போன்றவை விழித்துக் கொண்டால் என்னவெல்லாம் நிகழும் என்பதற்கான சாட்சியங்கள், இந்த வாரமும் வெளிப்பட்டது. 

வீக்லி  டாஸ்க்கில் சுமாரான ஆட்டக்காரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட கரிஷ்மாவையும் தன்யாவையும் சிறையில் அடைக்கும் பொறுப்பை யாராவது ஒருவர் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பிக் பாஸ் அறிவித்தவுடன் உற்சாகமாக கையை தூக்கினார் அவினாஷ். 

கிடைத்த அந்த சிறிய அதிகாரத்தை வைத்துக் கொண்டு அவினாஷ் செய்த அலப்பறைகள் இருக்கிறதே…. பயங்கர அழிச்சாட்டியம்.  சும்மாவே ஆடுகிறவனுக்கு சலங்கை கட்டி விட்ட மாதிரி ஆகி விட்டது. தன்னை ‘ஜெயிலர்’ முத்துவேல் பாண்டியனாகவே  அவினாஷ் நினைத்துக் கொண்டார் போல. ‘நான்தான் இன்சார்ஜ்.. நான்தான் இன்சார்ஜ்’ என்று கூவிக் கொண்டேயிருந்தார்.

சிறைவாசிகள் கொண்டு சென்ற தலையணை, மெத்தைகளை தடுத்து ‘தண்டனை அனுபவிக்க வேண்டிய எடத்துல உங்களுக்கு சொகுசு தேவையா?’ என்று உறுமினார். சரி, பகல் நேரம் என்பதால் அதைக் கூட ஒப்புக் கொள்ளலாம். ஆனால் இரவு நேரத்திலும் போர்வை, தலையணை உபயோகிக்கக்கூடாது என்றதெல்லாம் கொடூரம்.

இது தவிர தண்ணீர் பாட்டிலை பிடுங்கிக் கொண்டு ‘பானையில் இருக்கும் தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும்’ என்றது, சிறைக் கதவை பூட்டி விட்டு சாவியை எடுத்துக் கொண்டது, தட்டிக் கேட்ட வாசனுடன் அநாவசியமாக மல்லுக்கட்டியது என்று அவினாஷின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. வாசன் சொன்னது மாதிரி அவினாஷ் ஒரு அரக்கனா அல்லது கிறுக்கனா என்றே தெரியவில்லை. 

ஆனால் வார இறுதியில் அவினாஷின் இந்த மோசமான அணுகுமுறையை விஜய் சேதுபதி ஆதரித்துப் பேசியது நெருடலாக இருந்தது.

 அவினாஷின் அலப்பறைகளை வாசன் எதிர்கொண்ட அணுகுமுறை சிறப்பானதாக இருந்தது. ‘விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகளுக்கு கூட அடிப்படை வசதிகள் தருவார்கள். உனக்கு அது கூட புரியலையா?” என்று அவினாஷூடன் மல்லுக் கட்டியது நன்று. கரிஷ்மாவும் தன்யாவும் தன்னுடைய நண்பர்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக நின்றார்.   அரிதான சில சமயங்களில் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டாலும் பல சமயங்களில் கனிவான உள்ளம் கொண்டவராக இருக்கிறார் வாசன். அவரிடம் ஒரு க்யூட்டான innocence இருக்கிறது. அடிப்படை மனிதாபிமானம் உள்ளவராக இருக்கிறார்.  

‘கேம் புரியல’ என்று சொல்லப்பட்ட வாசன், வாரத்திற்கு வாரம் முன்னேறிக் கொண்டே செல்கிறார். வாசனுக்கு வெளியில் இருக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இந்த ஷோவில் அவரது அணுகுமுறையும் செய்யும் குறும்புத்தனங்களும் தனியாக ரசிகர்களை ஈட்டியிருக்கும்.

கடந்த வாரத்தில் நீல அணி பெரும்பாலான ஆட்டங்களில் ஜெயித்ததைப் போலவே இந்த வாரம் cowboys அணி அதிக டாஸ்க்குகளில் ஜெயித்தது. மாஃபியா அணி ஒரேயொரு டாஸ்க்கில்தான் ஜெயித்தது. இதற்கான காரணம்  மாஃபியா அணியிடம் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததுதான். வினோத் இதற்காக நிறைய போராடினாலும் சொந்த அணிக்குள்ளேயே இருந்த சண்டைகள் தோல்விக்கு காரணமாக இருந்தன. தன்யாவிற்கும் ஜேசனுக்கும் இடையே நடந்த சண்டை, கரிஷ்மாவிற்கும் ஜேசனுக்கும் இடையே சண்டை என்று நிறைய கருத்து வேறுபாடுகள். இதனால் டாஸ்க்குகளில் உற்சாகமாக செயல்படும் ஜேசன் டல்லாக இருந்தார். போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வத்தைக் காட்டவில்லை. 


இதன்  எதிர்முனையில் கெளபாய்ஸ் அணியிடம் சிறந்த ஒற்றுமை இருந்தது. அசாரின் தலைமையில் ‘ஊ.. ஊ.. ஊ…’ என்று கூட்டாக கத்திக் கொண்டு ஒவ்வொரு டாஸ்க்கிலும் சொல்லி அடித்து  வென்றார்கள். அணி ஒற்றுமை இருந்தால்தான் தொடர் வெற்றி சாத்தியம் என்பதுதான் கடந்த வாரமும், இந்த வாரமும் சொல்லும் செய்தி. 


ஒரேயொரு டாஸ்க்கில் வென்ற மாஃபியா டீம், எதிர் அணியிலிருந்து ஓர் உதவியாளரை எடுக்கலாம் என்கிற நிலை வந்த போது வாசனை தேர்ந்தெடுத்து சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டார்கள். “அவன் உங்க கிட்ட மாட்டலைடா. நீங்கதான் அவன் கிட்ட மாட்டியிருக்கீங்க” என்று அசார் கிண்டலடித்தது உண்மை. 

வினோத்தின் உதவியாளர் என்கிற பெயரில் கைகளை பவ்யமாக கட்டிக் கொண்டு வாசன் அடித்த லூட்டிகள் தனி ரகம். அமைதிப்படை அமாவாசையை நினைவுப்படுத்தினார் வாசன். உணவுப் பொருட்களை திருடுவதற்காக கெளபாய்ஸ் அணி ரெய்டிற்காக வந்த போது ‘பெட்ரூம்ல மட்டும் தேடிடாதீங்க’ என்று திறமையாக போட்டுக் கொடுத்தார் வாசன். ‘உனக்கு பலாப்பழம் சைஸ்ல மச்சம் இருக்குடா. எளவட்டப் பொண்ணுங்க எல்லாம் உன்னைத்தான் சுத்தறாங்க. என்னை அண்ணான்னு சொல்லிடறாங்க’ என்று முகேஷிடம் ஜாலியாக அனத்தினார். 

அவினாஷிற்கு தங்கை என்பதால் தனது மூர்க்கத்தனத்தின் மூலம் அவ்வப்போது நிரூபிக்கும் வகையில் நடந்து கொள்ளும் அக்ஷிதா, குக்கரால் அடித்ததைக் கூட வாசன் பெரிது பண்ணவில்லை. அப்போதைய சண்டையோடு விட்டு விட்டார்.

வாசனுக்கு கிடைக்கும் ஆதரவு காரணமாக அவரை கோபப்படுத்தி ‘ரெட் கார்ட்’ வாங்க வைத்து வெளியே அனுப்பும் திட்டத்தை சிலர் முயற்சிக்கிறார்கள். டாஸ்க்கில் தொடர்ந்து ஜெயித்த கௌபாய்ஸ் அணி, தங்களுக்கு கிடைத்த பரிசுகளைப் புறக்கணித்து வாசனை திரும்ப அழைத்துக் கொண்டார்கள். வாசனின் முக்கியத்துவம் புரிந்ததால் நிகழ்ந்த விளைவு இது. 

டாஸ்க்கில் சுமாராக ஆடியவர்களாக கரிஷ்மாவையும் தன்யாவையும் ‘மைனிங் மாஃபியா’ அணி தேர்ந்தெடுத்து சிறைக்கு அனுப்பியது. ஆனால் விசேவின் விசாரணை நாளின் போது ‘யார் inactive-ஆக இருந்தது?’ என்கிற கேள்விக்கு ஜேசனையும் முனியம்மாளையும் சொன்னார்கள். இதிலுள்ள முரணை திறமையாக வெளியே கொணர்ந்தார் விசே. ‘குறைவான ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்றவர்களை எப்படி சுமாரான ஆட்டக்காரர்களாக சொல்ல முடியும்?” என்று மடக்கினார். இதற்காக தன்யாவும் கரிஷ்மாவும் கண்கலங்கி நன்றி சொன்னார்கள். 

ஆனால் இதில் ஒரு சிறிய நெருடல் இருந்தது. ஐந்து ஆட்டங்களில் பங்கேற்ற கரிஷ்மா பெரும்பாலும் ஃபவுல் ஆட்டங்களை ஆடி குழப்பத்தை ஏற்படுத்தினார். அணி வெல்ல வேண்டும் என்பதை விடவும் தான் தெரிய வேண்டும் என்கிற ஆர்வம்தான் கரிஷ்மாவிடம் இருந்தது.  மூன்று ஆட்டங்களில் பங்கேற்ற தன்யாவால் வெற்றியை ஈட்டித் தர முடியவில்லை. ஆர்வமாகச் சென்றாலும் சொதப்பி விடுகிறார்.  ‘வாழ்வா, சாவா?’ என்கிற நிலையில் தொடர் தோல்விகளை சந்திக்கும் மாஃபியா அணியால் எப்படி தன்யாவை அதிக ஆட்டங்களில் பங்கேற்க அனுப்ப முடியும்? 

தன்யாவுடனான பிரச்சினை காரணமாக ஒரு போட்டியில் கலந்து கொள்ளாமல் ஜேசன் விலகி வி்ட்டார். முனியம்மாளைப் பற்றி சொல்லவே வேண்டாம். மூடு இருந்தால் சிறப்பாக ஆடுவார். இல்லையென்றால் விளையாட்டிலும் விளையாட்டாகவே இருப்பார். ஆக worst performer-களை தேர்ந்தெடுக்கும் போது மாஃபியா அணி கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும். சிலர் ஜேசன், முனியின் பெயர்களைச் சொன்னாலும் பெரும்பான்மையானவர்கள் கரிஷ்மா மற்றும் தன்யாவை பலிகடாக்கி விட்டார்கள். “போன முறை ரெட் டீம்ல இருந்தேன். இந்த முறையும் எனக்கு Bad luck-ஆ இருக்கு?” என்று முகேஷிடம் புலம்பிய அக்ஷிதாவின் பெயர் வெளியே வராதது ஆச்சரியம். 

முகேஷ் என்றவுடன் நினைவிற்கு வருகிறது. பிக் பாஸ் வீட்டில் லவ் டிராக் உருவாவதும், அது வேறு டிராக்கில் பயணிப்பதும் ஆச்சரியமில்லை. எத்தனையோ பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் முகேஷ். 

பாரதிராஜாவின் முதல் மரியாதை திரைப்படத்தில் சிவாஜிக்கும் ராதாவிற்கும் என்னதான் உறவு என்பதை அறிய ஊரே ஆவலாக இருக்கும். இதே போல் முகேஷிற்கும் ஷாதிகாவிற்கும் இடையே ‘லவ்’ இருக்கிறதா என்பதை அறிய முனியம்மாள் ஆவலாக இருந்தார். மற்றவர்களுக்கும் இந்தக் குறுகுறுப்பு இருந்திருக்கும். ஆனால் கிராமத்துப் பின்னணியில் இருந்து வந்திருந்த முனியம்மாள் ஆவல் தாங்காமல் வெளிப்படையாக கேட்டு விட்டார். “ஆமாம்.. நான் அவளை வெச்சிருக்கேன்” என்று நெருக்கடி தாங்காமல் சிவாஜி சொல்வதைப் போல் அல்லாமல் “எங்களுக்குள் இருப்பது நட்புதான். காதல் அல்ல” என்று சுருக்கமாக தெளிவுப்படுத்தி விட்டார் முகேஷ். “காதல் என்பது கெட்ட விஷயம்லாம் இல்லை” என்பதையும் முனியம்மாள்தான் பிறகு சொன்னார். 

‘வயலன்ஸ்ல அடிவாங்கினவன்தான் கூட எழுந்துடுவான். ஆனா ரொமான்ஸ்ல அடிவாங்கினவன் எழுந்திருப்பது கஷ்டம்’. லவ் டிராக் காரணமாக தங்களின் ஆட்டத்தைத் தொலைத்திருப்பவர்கள் பிக் பாஸில் அதிகம். இது முகேஷிற்கும் தெரிந்திருக்கும். ‘முகேஷ்.. நீங்க க்ரூப்புல டூப்பா இருக்கீங்க’ என்கிற விமர்சனம் முகேஷ் மீது பல தடவைகள் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் ‘காதல்லாம் நமக்குத் தேவையா பாஸ்?’ என்று விலகாமல் குறுகுறுவென்று ஷாதிகாவிடம் பேசிக் கொண்டிருந்த முகேஷ், இப்போது டிராக் மாறி அக்ஷிதாவிடம் டிராவல் ஆகிக் கொண்டிருப்பதின் மர்மம் புரியவில்லை. 


அக்ஷிதாவும் முகேஷூம் ஸ்டோர் ரூமிற்குள் பேசிக் கொண்டிருக்கும் போது ‘இவங்களுக்கு நடுவுல இந்த கௌசிக் வந்தா?’ என்கிற மாதிரி ஷாதிகா கிராஸ் ஆன காட்சி சுவாரசியம். முகேஷின் லவ் டிராக் மாற்றத்தினால் ஒரு நன்மை விளைந்திருக்கிறது. லட்சுமிபிரியாவும் ஷாதிகாவும் நெருங்கிய தோழிகளாக இருந்தார்கள். முகேஷூடன் அதிக நேரத்தை ஷாதிகா செலவழித்ததால் கோபம் கொண்ட லட்சுமிபிரியா நட்பிலிருந்து விலகினார். இப்போது மீண்டும் அவர்களின் நட்பிற்கு உயிர் வந்திருக்கிறது. கண்ணீருடன் இருவரும் அணைத்துக் கொண்டார்கள். முகேஷின் இந்த மாற்றத்தை அழுது புலம்பாமல் ஷாதிகா மிக இயல்பாக ஏற்றுக் கொண்டது பாராட்டத்தக்கது. 

‘நான் அடிக்கவேயி்ல்ல’  - அழுது சாதித்த அக்ஷிதா


கடந்த வாரத்தைப் போலவே இந்த வீக்லி டாஸ்க்கில் நிகழ்ந்த சம்பவங்கள் பார்ப்பதற்கு கொடூரமாக இருந்தன. அரக்கன் என்கிற பொருத்தமான அடைமொழிக்கு ஏற்ப பல விஷயங்களில் எகிறிக் கொண்டு வந்தார் அவினாஷ். இதுவரை அவரை அடக்கும் வேலையையும் மட்டுமே செய்து வந்த அக்ஷிதா, ‘அண்ணனுக்கு தானும் சளைத்தவள் இல்லை’ என்று வாசனுடன் மூர்க்கமாக மல்லுக்கட்டினார். 


குக்கர் மூடியை வைத்து அவர் வாசனை அடித்தது வீடியோவில் தெளிவாகவே பதிவாகியிருந்தது. ஆனால் அதை ஒப்புக் காெள்ளாமல் ‘எனக்கு அடிக்கும் நோக்கம் இல்லை. அடிக்கவில்லை’ என்று திரும்பத் திரும்ப சொன்னதோடு அல்லாமல், கட்டுப்படுத்த முடியாத அழுகையோடு ஓடி மூச்சுத் திணறலோடு வீட்டை பதைபதைக்க வைத்து விட்டார். உண்மையிலேயே அவர் panic ஆகி விட்டாரா அல்லது அனுதாபத்தைக் கிளறுவதின் மூலம் தப்பிக்க நினைத்தாரா என்று தெரியவி்ல்லை. இது போன்ற ‘டிராமா க்வீன்’ நாடகங்கள் பிக் பாஸ் வீட்டிற்கு புதிதல்ல. 

இதுவொரு கேம் ஷோதான். போட்டியாளர்களுக்குள் விரோதங்கள் தூண்டப்பட்டு அவர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதைப் பார்ப்பதுதான் அடிப்படையான விஷயம். எனில் “ஆமாம்.. அந்த நேரத்தின் உணர்ச்சி வேகத்தில் அடித்து விட்டேன்’ என்று நேர்மையாக ஒப்புக் கொண்டிருக்கலாம். 

சொந்த வீட்டிற்குள் சண்டைக்கோழிகளாக இருந்த அவினாஷூம் அக்ஷிதாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் நேர்மையாக ஆடுவார்கள் என்று பார்த்தால் இங்கு வந்து பாசமலர்களைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். ‘அக்ஷிதா அடிக்கவேயில்ல’ என்று சாதித்தார் அவினாஷ். விசாரணை நாளின் போது கூட தன் அண்ணன் பாசத்தை அவராலேயே தடுக்க முடியவில்லை. இதை சிறப்பாக சுட்டிக் காட்டினார் விசே. 

குப்பைக் காடாக மாறிய பிக் பாஸ் வீடு


உணவு தேடுகிறேன் என்கிற பெயரில் அவினாஷ், ஷாதிகா உள்ளிட்டவர்கள் வீட்டை இரண்டாக புரட்டிப் போட்டதும், கழிப்பறை சமாச்சாரங்களை அப்படியே வெளியே கொட்டியதும் காணச் சகிக்காத விஷயங்கள். என்னதான் நாம் நாகரிக மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் மூர்க்கத்தனம் இறங்கி விட்டால் எத்தனை மோசமாக நடந்து கொள்கிறோம் என்பதற்கான உதாரணம் இந்தக் காட்சிகள். அக்ஷிதாவைப் போல் முழு குக்கரை சோற்றுக்குள் மூடி மறைக்காமல் “ஆமாம்.. சார்.. வேணுமின்னுதான் குப்பையைக் கொட்டினோம்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ஷாதிகாவைப் பாராட்டலாம். 


யாருடன் சண்டையிட்டாலும் எதிராளியின் பாதி பலம் வாலிக்கு சென்று விடுமாம். இராமாயணத்தில் இப்படியொரு கதை இருக்கிறது. அதைப் போலவே ஷமாவுடன் இத்தனை வாரங்கள் உற்சாகமாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்த ஜேசன், இந்த வாரத்தின் பெரும்பாலான சமயங்களில் டல்லாக இருந்தார். ‘Am a man’ என்று தான் கத்தியது, ரம்யா கிருஷ்ணனால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம். 

‘இந்த வீட்டில் யாருடன் விளையாடுவது அசௌகரியமாக இருக்கிறது?’ என்கிற கேள்வியின் போது பலரும் ஜேசனின் பெயரைச் சொன்னார்கள். ஆம், தன்னுடைய உடல்மொழியாலும் மூர்க்கத்தனத்தனாலும் அச்சுறுத்தலையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறார். அதே சமயத்தில் தன்னுடைய நட்புணர்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் இன்னொரு ஜேசனை காண முடிகிறது. ‘ஷமாவைத் தவிர யாருடனும் ஆட தனக்கு அசௌகரியமாக இல்லை’ என்று சொன்ன ஜேசன், அதற்குப் பிறகு ‘am here show my personality’ என்று அவினாஷிடம் சொன்னது சிறப்பான வாசகம். அது நல்லதோ அல்லது கெட்டதோ, என்னுடைய உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்துவேன் என்று சொன்னது அவரது நேர்மையைக் காட்டுகிறது. 

அடுப்பை எடுப்பதற்காக சமையல் அறைக்கு ஆவேசமாக வந்த அவினாஷை எப்படி தடுப்பது என்று தெரியாமல் ‘என்னைத் தொட வர்றியா?’ என்று விளையாட்டுத்தனமான தொனியில் கத்தினார் தன்யா. அவர் சொன்ன வார்த்தைகளின் உட்பொருள் விவகாரமானதுதான். ஆனால் சொன்ன நோக்கம் விளையாட்டுத்தனமானது. இந்த context-ஐ மிகச் சரியாக வெளிக்கொணர்ந்தார் விஜய்சேதுபதி. தன்யாவிற்கு ஏன் உதவப் போகவில்லை என்கிற கிடுக்கிப்பிடி கேள்வியின் மூலம் அக்ஷிதாவை மடக்கியது சிறப்பு. ‘நீங்க மயங்கி விழறா மாதிரி நடிச்சாலும் நாங்க விடப் போறதில்லை. கேள்வி கேட்டே தீருவோம்’ என்கிற செய்தியை விசே உணர்த்திய விதம் நன்று. 

கடந்த இரண்டு சீசன்களாக விசேவின் அதிரடியான அணுகுமுறை மீது நிறைய விமர்சனம் எழுந்திருக்கிறது. ஆனால் தொண்டைப் பிரச்சினையுடன் வந்திருக்கிற விசேவிடம் நிறைய மாற்றம் தெரிகிறது. அதிகம் வளர்த்தாமல் கச்சிதமாக விசாரணையை முடித்துக் கொள்கிறார். அதில் சற்று நகைச்சுவையையும் கலக்கிறார். தொண்டைப் பிரச்சினை நீங்கிய பிறகும் இதே பாணி தொடர்ந்தால் நன்று. 

வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த காமன்மேன் போட்டியாளர் கரிஷ்மா, ஆரம்ப நாளில் அதிரடியான கேள்விகளின் மூலம் சக போட்டியாளர்களை கதி கலங்க வைத்தார். அதற்குப் பிறகு அவரிடம் எந்த சுவாரசியமும் வெளிப்படவில்லை. வைரம் டாஸ்க்கில் கூட அவர் வைரத்தை எடுத்தாலும் பாதுகாக்கத் தெரியாமல் திணறினார். இதர டாஸ்க்குகளிலும் ஆர்வக் கோளாறுடன் ஃபவுல் கேம்களை ஆடி சொதப்பினார். எனவே அவர் இந்த வாரம் எவிக்ட் ஆனதில் பெரிதாக பிரச்சினை ஏதுமில்லை. ஆனால் அவரை விடவும் சுமாராக ஆடுகிற முத்தழகி, தன்யா, லட்சுமிபிரியா, அஷ்மிதா போன்றவர்கள் இன்னமும் உள்ளே இருப்பது முரண். 

முகேஷை காப்பாற்றிய வாசன். ஆனால் கரிஷ்மா?

தன்னிடமிருந்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸை முகேஷிற்காக வாசன் பயன்படுத்தி அவரைக் காப்பாற்றினார். இதனால் வாசனின் மீதான மதிப்பு பார்வையாளர்களிடம் உயர்ந்திருக்கும். ‘முகேஷ் ஒரு நல்ல பிளேயர். அதனால் காப்பாற்றினேன்’ என்று காரணம் சொன்னார் வாசன். வைரம் டாஸ்க்கில் தன் கூட்டாளியாக இருந்த கரிஷ்மாவிற்கு  நன்றிக்கடன் தீர்க்க வேண்டும் என்று ஏன் வாசனுக்குத் தோன்றவில்லை? 


இதை ஒரு கேள்வியாக பிறகு முன்வைத்தார் தன்யா. “நீ முகேஷை அடிச்சிட்ட. அதுக்காக கொடுத்தியா?” என்று சரியாக decode செய்ய முயன்றார். “நீ கரிஷ்மாவைக் காப்பாத்தியிருந்தா, ஜேசன் முகேஷை காப்பாத்தியிருப்பான்’ என்றொரு யோசனையையும் சொன்னார் தன்யா. ஆனால் பிறருக்காக EVP-ஐ ஜேசன் பயன்படுத்துவாரா என்பது சந்தேகம்தான். ‘டாஸ்க்ல சூப்பரா ஆடுவான்’ என்று பெயர் வாங்கியிருக்கிற முகேஷ், இனியாவது லல் டிராக் உபாயத்தைப் பயன்படுத்தாமல் ஆட்டத்தில் ஃபோகஸ் செய்தால் நன்று. 


‘பாவக்காவிற்காக’ ஒரு போராட்டத்தையே நடத்தி முடித்த முனியம்மாளிடம் “மற்றவர்களை எளிதில் குறை சொல்கிற நீங்கள் ஏன் களத்தில் இறங்கக்கூடாது?” என்று சிறப்பாக குட்டு வைத்தார் விசே. முனியம்மாள் வீட்டின் தலைவராக இருந்தால் அந்த வாரம் எப்படியிருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். முனியம்மாளுக்கு பாவக்காய் கிடைக்காத சோகத்தை சக போட்டியாளர்கள் நகைச்சுவையாக மாற்றியது சுவாரசியமான காட்சி. 


கரிஷ்மா வெளியேறியிருக்கும் நிலையில், இன்னொரு சுவாரசியமான போட்டியாளர் உள்ளே வந்தால்தான் ஆட்டம் சூடுபிடிக்கும் என்று தோன்றுகிறது. 

கரிஷ்மாவிற்குப் பதிலாக இந்த வாரம் வேறு யார் வெளியேறியிருந்தால் அது பொருத்தமானதாக இருந்திருக்கும்? கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்க மக்களே. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.