“காயம் ஏற்பட்டால்தான் வாய்ப்பா?” – வைபவை வீட்டுக்கு அனுப்பச் சொன்ன ஆகாஷ் சோப்ரா!
கிரிக்கெட்டில் திறமை மட்டும் போதுமா? அந்தத் திறமையை வெளிப்படுத்தத் தொடர்ந்து வாய்ப்பும் கிடைக்க வேண்டுமல்லவா! அப்படித் தனக்குக் கிடைத்த வாய்ப்பில் திறமையை நிரூபித்தும், அடுத்த போட்டியிலேயே அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.
இந்தியா – நியூசிலாந்து டி20 தொடரில் காயம் காரணமாக இஷான் கிஷன் விலகியதால், அவருக்குப் பதிலாக வைபவ் களமிறங்கினார். இரண்டாவது போட்டியில் 4 ரன்கள் எடுத்தவர், மூன்றாவது போட்டியில் 45 ரன்கள் விளாசி கவனம் ஈர்த்தார். ஆனால், இஷான் கிஷன் காயத்திலிருந்து மீண்டதும் நான்காவது போட்டியில் வைபவுக்கு இடம் மறுக்கப்பட்டது.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, “யாராவது காயமடைந்தால் மட்டும்தான் வைபவுக்கு வாய்ப்பு கொடுப்பீர்களா? அப்படியென்றால் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடச் சொல்லலாம். இந்திய அணியின் ஓய்வறையில் இருப்பதைவிட, தொடர்ந்து களத்தில் விளையாடுவதுதான் அவருக்கு அனுபவத்தைக் கொடுக்கும்” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், வைபவின் எதிர்காலம் குறித்து இந்திய அணி நிர்வாகம் தனது திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே நான்காவது போட்டியில் களமிறங்கிய இஷான் கிஷன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். 260 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி 172 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


