கணவன் - மனைவி காதலைச் சொல்லும் வசியப்பொருத்தம்! உங்களுக்கு எப்படி?
கல்யாணத்துக்கு ஜாதகரீதியாக பத்து பொருத்தங்கள் பார்ப்பது வழக்கம். தினப்பொருத்தம், கணப் பொருத்தம், மாகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசிப்பொருத்தம், ராசியாதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகிய பத்தும் திருமணத்துக்கான தச விதப் பொருத்தங்கள் என்கின்றன ஜோதிட நூல்கள்.
இந்த 10 பொருத்தங்களிலும் ராசிப் பொருத்தமும் வசியப்பொருத்தமும் குறிப்பிடத்தக்கவை. எவ்வளவு செல்வமும் யோகமும் பெற்றிருந்தாலும் தம்பதியர் மனம் ஒருமித்து வாழ ராசிப் பொருத்தமும் வசியப்பொருத்தமும் அவசியம்! முதலில் ராசிப் பொருத்தம் பற்றி அறிவோம். பல இடங்களில் ராசிப்பொருத்தத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆக, ராசிப்பொருத்தம் பார்ப்பது எப்படி நாமும் தெரிந்துகொள்வது அவசியம்.
ராசிப் பொருத்தம் பார்ப்பது எப்படி?
பெண்ணின் ராசியிலிருந்து ஆணின் ராசி வரைக்கும் எண்ணினால் வரும் எண்ணிக்கையைப் பொருத்து ராசிப் பொருத்தம் நிர்ணயிக்கப் படுகிறது. பெண்ணின் ராசியில் இருந்து புருஷ ராசி வரையிலுமான எண்ணிக்கை 2 முதல் 6 வரை இருந்தால் திருமணப் பொருத்தம் இருக்காது.
உதாரணம்: பெண் அசுவினி நட்சத்திரம் எனில் அவளுடைய ராசி மேஷம் ஆகும். எனவே, மேஷத்துக்கு துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிகளில் அமையும் சித்திரை முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்களுக்கு ராசிப் பொருத்தம் உண்டு எனக் கொள்ளலாம்.
மணமக்கள் சகல செல்வ சுகபோகங்களை வசதி-வாய்ப்புகளைப் பெற்றால் மட்டும் போதாது. இருவரும் பரஸ்பரம் மனம் ஒருமித்தும் வாழ வேண்டும். ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பும் அன்பும் ஏற்பட, அந்நியோன்யமாகக் கழியவேண்டும் அவர்களின் வாழ்க்கை. அதற்கு வசியப் பொருத்தம் பார்ப்பது அவசியம் என்பார்கள்.

வசியப் பொருத்தம் பார்ப்பது எப்படி?
திருமணமான ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அன்பு வயப்பட்டு வாழ்தல் வசியம் எனப்படும். இது, ஒருவரையருவர் சார்ந்து வாழும் சுகத்தையும், ஒருவரையருவர் பாராட்டி வாழும் இயல்பையும் தரும். அதேபோல், வசியப் பொருத்தம் இருந்தால் சிறப்பான குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உண்டு.
இந்த வசியப் பொருத்தமானது ஆண், பெண் ராசிகளை அனுசரித்து கீழ்க்காணும்படி அமையும். உங்களுக்கும் உங்களின் ராசி, வாழ்க்கைத்துணைவரின் ராசி கீழ்க்காணும்படி இருந்தால் வசியப் பொருத்தம் இருக்கிறது என்று கொள்ளலாம். உங்களின் இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமையும், உங்களுக்கு வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்பும் ஆதரவும் பூரணாக உண்டு.
வசியப் பொருத்தமுடைய ராசிகள்:
பெண் ராசி - ஆண் ராசி
மேஷம் - சிம்மம், விருச்சிகம்.
ரிஷபம் - கடகம், துலாம்
மிதுனம் - கன்னி
கடகம் - விருச்சிகம், தனுசு
சிம்மம்- மகரம்
கன்னி - ரிஷபம், மீனம்
துலாம் - மகரம்
விருச்சிகம் - கடகம், கன்னி
தனுசு - மீனம்
மகரம் - கும்பம்
கும்பம் - மீனம்
மீனம் - மகரம்
மேலே குறிப்பிட்ட அட்டவணைப்படி இல்லாமல் ராசிகள் அமைந்தால், வசியப் பொருத்தம் அமையாது.
வசியப்பொருத்தத்துடன் ஆண்-பெண் திருமணத்தில் இணையும் போது அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
வசியப் பொருத்தம் இருந்தால் கூறப்படும் பலன்கள்
1. கணவன் – மனைவி ஈர்ப்பு: ஒருவர்மீது மற்றொருவருக்கு ஈர்ப்பும் விருப்பமும் அதிகரிக்கும்.
2. மன ஒற்றுமை: ஒருவருடைய எண்ணங்களையும் விருப்பங் களையும் மற்றொருவர் புரிந்துகொண்டு வாழ்வார்கள்.
3. குடும்ப ஒற்றுமை: குடும்ப வாழ்க்கையில் இணக்கமும் பரஸ்பர ஆதரவும் நிலவும்.
4. அன்பும் பாசமும்: தம்பதியரிடையே அன்பு, நெருக்கம், பாசம் ஆகியவை சிறப்பாக அமையும்.
5. கருத்து வேறுபாடுகளைக் குறைத்தல்: ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் தன்மை அமையும். மற்றவர்கள் மத்தியில் தங்கள் வாழ்க்கைத்துணையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அவர்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பக்கத்துணையாக இருப்பார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


