குறைகள் தீர்க்கும் குத்தாலம் சோழீஸ்வரர் ஆலயம்: ஏழரை சனியின் கஷ்டங்கள் தீர்க்கும் பாதாள சனீஸ்வரர்!

கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்திலுள்ள குத்தாலத்தில் பிரதான சாலைக்கு அருகிலேயே அமைந்துள்ளது அருள்மிகு சோழீஸ்வரர் ஆலயம்.

இந்த ஊரில் பஞ்ச பூதங்கள் வழிபட்ட ஐந்து சிவாலயங்கள் அமைந்துள்ளன. அவற்றில் சோழீஸ்வரர் ஆலயமும் ஒன்று என்பது சிறப்பு. இந்தத் தலத்தின் பெருமையைப் பேசுகிறது திருத்துருத்திப் புராணம் என்கிற நூல்.

இரண்டு ஆறுகளுக்கிடையில் உண்டான மணல்திட்டு போன்ற இடைக்கழிப் பகுதிக்குத் துருத்தி என்பது பெயர். காவிரிக்கும், அதன் கிளை நதிக்கும் இடையே அமைந்திருக்கும் இவ்வூர் முற்காலத்தில் திருத்துருத்தி என்று வழங்கப் பெற்றது. மேலும் உத்தால மரங்கள் நிறைந்த வனமாகவும் இந்தக் காவிரித்தலம் விளங்கியதாம்.

உத்தாலம் என்பது அலையாத்தி தாவர இனத்தைச் சார்ந்த ஒருவகை அத்திமரம். எனவே உத்தாலம் என்று அழைக்கப்பெற்ற இப்பகுதி, பிற்காலத்தில் திரிந்து தற்போது குத்தாலம் என்று அழைக்கப்படுகிறது.

குத்தாலம் சோழீஸ்வரர் ஆலயம்

உமையம்மை முதலாக சகல தேவர்களும், முனிவர்களும், அருளாளர்களும் தவமியற்றிய புண்ணிய பூமி இது. அதற்கு அடையாளமாகவும் ஐந்து தொன்மையான சிவாலயங்கள் அமையப் பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர். ஶ்ரீஉத்தவேதீஸ்வரர், ஶ்ரீசோழீஸ்வரர், ஶ்ரீஓங்காளீஸ்வரர், ஶ்ரீமன்மதீஸ்வரர், மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆகிய ஐந்து சிவாலயங்கள் இவ்வூரில் அமைந்து சோழர்காலப் பெருமையைப் பறைசாற்றுகின்றன.

இந்த ஐந்து ஆலயங்களில் ஶ்ரீசௌந்தர்யநாயகி சமேத ஶ்ரீசோழீஸ்வரர் ஆலயம் சுமார் 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. சோழர்களின் கட்டடக்கலைக்கு உதாரணமாகப் பிரமாண்டமாகவும் விரிந்த திருச்சுற்றுகளுடனும் அழகுக் கட்டுமானத்துடனும் திகழ்ந்ததாம் இந்த ஆலயம். இங்கு அக்னிபகவான் தவமியற்றி வழிபட்டமையால், ஈசன் அக்னீஸ்வரராகக் காட்சியளித்து அக்னிக்கு வரமளித்தாராம்.

ஈசனின் திருவுளப்படி இங்கே திருக்குளம் அமைத்து நீராடி அக்னி தவமிருந்து அருள்பெற்ற தலம்தான் இது என்கிறது புராணம். விக்கிரமச் சோழரின் மனைவியான கோமள் என்பவளின் வெண்குஷ்ட நோய் இங்கு குணமாகியது என்றும் சொல்கிறது தலபுராணம்.

ஐந்து நிலைகள் உடைய ராஜகோபுரத்தைத் தரிசித்து உள்ளே நுழைந்தால், மகாமண்டபம் கடந்ததுமே ஶ்ரீசோழீஸ்வரப் பெருமானை எளிதில் தரிசிக்க இயல்கிறது. இவ்வாலயத்தில் உள்ள பக்கவாட்டு வழியில் சென்றால் ஶ்ரீசௌந்தர்யநாயகியைத் தரிசித்துவிடலாம். பெயருக்கு ஏற்றாற்போல் ஒப்பில்லாத நாயகியாய் காட்சிதரும் இந்த அன்னை மிகுந்த வரப்ரசாதி‌‌ என்கிறார்கள் பக்தர்கள்.

வெளிச்சுற்றில் கிழக்கு நோக்கிய வண்ணம் மற்றொரு அம்மையான ஶ்ரீபரிமளசுகந்த நாயகி காட்சித் தருகிறாள். பரத மகரிஷியின் வேள்வியில் மகளாக உதித்தவளாம் இந்த அம்பிகை. கோயிலின் தலவிருட்சம் வில்வம்.

மேலும் இங்கே சித்தி விநாயகர், பாலவிநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், கஜலக்ஷ்மி, பைரவர், சூரிய சந்திரர் ஆகியோரும் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சித் தருகிறார்கள்.

குத்தாலம் சோழீஸ்வரர் ஆலயம்
குத்தாலம் சோழீஸ்வரர் ஆலயம்

பாதாள சனீஸ்வரர்

இத்தலத்து சனிபகவான், சுயம்புவாக பூமியிலிருந்து வெளிப்பட்ட மூர்த்தி என்பதால் பாதாள சனீஸ்வரர் எனப் போற்றப்படுகிறார். பாதாளத்திலிருந்து தோன்றியமையால் இவரின் திருவடியைக் காண இயலாது என்பதும், இவரைப் பீடத்திலிருந்து அகற்ற முடிவதில்லை என்பதும் சிறப்புத் தகவல்கள். இவர் வேறெங்கும் காண்பதற்கரிய கோலத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் காட்சி தருகிறார் சனிபகவான்.

இத்தகு சிறப்புவாய்ந்த சனிபகவானை வழிபட்டு பலன்பெறுவோர் ஏராளம். சனிபகவானால் துயருற்ற நளனக்கு, இங்குள்ள சனிபகவானே வழிகாட்டி திருநள்ளாறு தலத்துக்கு அனுப்பினார் என்பது தலவரலாறு சொல்லும் செய்தி. சனிக்கிழமைகளில் இவருக்கு நல்லெண்ணெய் ஊற்றி 12 தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும். குறிப்பாக ஏழரை சனியால் உண்டாகும் துன்பங்களை இந்தச் சனிபகவான் நீக்கி நன்மைகள் அருள்வார் என்கிறார்கள்.

சோமவாரம், பிரதோஷம் முதலான விசேஷ தினங்களில் இந்த ஆலயத்தின் இறைவனைத் தரிசித்து நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட நீண்ட ஆயுளும், சகல யோகங்களும் கிடைக்கும் என்பது ஐதிகம்.

கார்த்திகை ஞாயிறுகளில் இத்தலத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு, சகல பிறவிகளிலும் உண்டான தீவினைகள் நீங்கி நற்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை கடை ஞாயிறன்று இவ்வூரின் ஐந்து சிவாலய மூர்த்திகளும், தத்தமது பரிவாரங்களுடன் காவிரி ஆற்றங்கரையில் தீர்த்தமளித்து, அன்றைய தினம் முழுவதும் அங்கேயே தங்கியிருந்து அருள்பாலிப்பது மிக விசேஷம்.

குத்தாலம் சோழீஸ்வரர்
குத்தாலம் சோழீஸ்வரர்

இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய குத்தாலம் ஶ்ரீசோழீஸ்வரரையும் மற்றுமுள்ள சிவாலயங்களையும் வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று தரிசித்துவாருங்கள். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.