வேலூர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் சுயம்வர கலாபார்வதி ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

வேலூர் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது, சுட்டெரிக்கும் வெயிலும், சுபிட்சத்தை அருளும் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலும்தான். வேலூரின் மையப் பகுதியில் உள்ள அந்த பிரமாண்டமான கோட்டையைக் காண சுற்றுலாப் பயணிகள் பலரும் வருவர். அவர்களுக்கு அருள்பாலிக்கவே அங்கே கோயில்கொண்டுள்ளார் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஜலகண்டேஸ்வரர்!

உள்ளூர் அன்பர்களால் கோட்டைக் கோயில் என்று அழைக்கப்படும் இந்த அருமையான தலத்தில், அற்புதங்களுக்கும் அநேகம்.

ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்து அம்பாள் சந்நிதிக்கு வந்தால், மூன்று தேவியரையும் - அதாவது மலைமகள், கலைமகள், திருமகள் ஆகிய முப்பெருந்தேவியரையும் ஒரே இடத்தில் நின்றபடி தரிசிக்கலாம். கிழக்குப் பார்த்தபடி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி, தெற்குப் பார்த்தபடி ஸ்ரீமகாலட்சுமி மற்றும் ஸ்ரீசரஸ்வதிதேவி ஆகியோரைத் தரிசித்தால், முப்பெருந்தேவியரின் பேரருள் கிடைக்கும்; வீட்டில் சுபிட்சம் நிலவும் என்கின்றனர் வேலூர் அன்பர்கள்.

அகிலத்துக்கும் முதன்மை சக்தியாகவும் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாகவும் விளங்குபவள் அகிலாண்டேஸ்வரி. இவளே வேலூரின் மையத்தில் கோட்டையில் அமர்ந்து ஆட்சி செய்து வருகிறாள். இவளை வணங்கினால் வேண்டியது கிடைக்கும். வேதனைகள் தணியும் என்பார்கள். இவளைத் தேடி வந்து சரண் அடைந்தால் துக்கம் என்பதே இல்லை என்பதே உண்மை.

வசிஷ்ட்டர், அகத்தியர், கௌதமர், பரத்வாசர், வால்மீகி, காசியபர், என்ற ஆறு ரிஷிகள் வழிபட்ட இடங்களே ஷடாரண்ய க்ஷேத்ரம் எனும் ஆறு காடுகள் என்றாகி அது தற்போது ஆற்காடு என்ற ஊராகியுள்ளது. சப்த ரிஷிகளில் எழாமவரான அத்திரி முனிவர் வணங்கிய ஈசனே ஜலகண்டேஸ்வரர் என்று தற்போது வேலூர் கோட்டையில் வணங்கப்படுகிறார் என்று தலவரலாறு கூறுகிறது. பிறகு சோழர்கள் காலத்தில் பொம்மிரெட்டி, திம்மிரெட்டி என்பவர்களால் இந்த அழகு மிகுந்த ஆலயம் கட்டப்பட்டது என்கிறது வரலாறு.

ஶ்ரீசுயம்வர கலாபார்வதி ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

தென்னிந்திய கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலுக்கு முகப்பாக ஏழு நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது.ஆலயத்தின் உள்ளே வலதுபுறத்தில் திருக்குளமும், இடதுபுறத்தில் கல்யாண மண்டபமும் உள்ளது. இந்த கல்யாண மண்டபத் தூண்களில் உள்ள சிற்பங்கள் உலகப் புகழ் கொண்டவை. அழகின் அத்தனை அம்சமாகவும் விளங்கும் இந்த ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் ஆச்சர்யம் அளிப்பவை. முதல் கடவுளாக முழு முதல் நாயகனாக இங்கு வலம்புரி விநாயகர் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

உட்பிராகாரத்தில் 63 நாயன்மார்கள், சப்தகன்னியர், வீரபத்திரர், விநாயகர் எனத் தொடங்கி நடராஜர், வழித்துணைநாதர், மரகதவல்லி, சோமாஸ்கந்தர், கங்கா பாலாறு ஈஸ்வரன், கால பைரவர், நவகிரகம், சனீஸ்வரர், நந்திதேவர், விநாயகர், வெங்கடேச பெருமாள், சுப்பிரமணியர், மாதேஸ்வரி, வைஷ்ணவி, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, பிரம்மா என பல சந்நிதிகள் இங்குண்டு.

ஆலய மூலவர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் என்றும் ஸ்வரகண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். அம்பிகை அகிலாண்டேஸ்வரி என்று போற்றப்படுகிறாள். மாங்கல்ய வாழ்வும் மங்கல வரமும் அருளும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியை வணங்கினால் வேண்டியது கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

ஶ்ரீசுயம்வர கலாபார்வதி ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

பல்வேறு சிறப்புகளை உடைய இந்தத் தலத்தில் பெண்கள் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலில் வழிபாடு செய்கிறபோது சகல நன்மைகளும் உண்டாகும். கடன்கள் தீரும் திருமண வேண்டுதல்கள் பலிக்கும்; அம்பிகையின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

இப்படிப்பட்ட மகிமை நிறைந்த தலத்தில் சக்திவிகடனும் வேலூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து திருமண வரம் அருளும் சுயம்வர கலாபார்வதி ஹோமம் நடத்த இருக்கிறோம். இன்றைக்கு இருக்கும் பிரச்னைகளில் ஒன்று பிள்ளைகளுக்கு உரிய வயதில் திருமணம் ஆவது. தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சிறப்பு வழிபாடுகளை நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஒருவருக்கு, ஜாதகத்தில் எந்தக் கிரகத்தால் தோஷம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து, அந்தக் கிரகத்துக்கு உரிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் நிவாரணம் பெறலாம். அவ்வகையில், ஜாதகத்தில் சூரியனால் கல்யாண தோஷம் ஏற்பட்டிருந்தால், ஞாயிற்றுக்கிழமையில் அமிர்தயோகமோ, சித்தயோகமோ உள்ள காலை வேளையில் சூரியனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது அவசியமாகும்.

சுயம்வர கலாபார்வதி ஹோமம்

செவ்வாயால் திருமணம் தோஷம் ஏற்பட்டிருந்தால், செவ்வாய்க் கிழமையில் முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. குறிப்பாக, வைத்தீஸ்வரன்கோவில் சென்று அங்காரகப் பிரீதி செய்துகொள்வது நல்லது.

உலக சுகபோகங்களுக்கு அதிபதி சுக்ரன். அவரின் நிலையின் காரணமாக ஜாதகத்தில் கல்யாண தோஷ பாதிப்புகள் இருக்குமாயின், வெள்ளிக்கிழமையில் இந்திரனையும், சசிதேவியையும் வழிபடுவது நல்லது. அன்றைய நாளில் சுமங்கலி பூஜை செய்வதும் மிக விசேஷம்.

நவகிரகங்களில் புதனின் நிலையானது ஜாதகத்தில் கல்யாணத் தடைகளுக்குக் காரணமாக இருந்தால், மகாவிஷ்ணு வழிபட்டுப் பலன் பெறலாம். புதன்கிழமைதோறும் மகா விஷ்ணுவை வழிபடுவதுடன், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மை தரும். ஏகாதசி விரதம் இருப்பது மிகவும் சிரேஷ்டமான பரிகாரம் ஆகும்.

கல்யாணத் தடைக்கு சர்ப்ப கிரகங் களும் காரணம் ஆகலாம். அப்படியான ஜாதகர்கள், ராகு ப்ரீதிக்கு காலன், சர்ப்பேஸ்வரன் ஆகியோரை வழிபடுவதும் உளுந்து தானம் செய்வதும் நல்லது.

ஆனால் தோஷம் எதுவாக இருந்தாலும் அதைத் தீர்க்கும் ஹோம வழிபாடு ஒன்று உண்டு என்றால் அதுதான் சுயம்வர கலாபார்வதி ஹோமம். அன்னை பார்வதி ஈசனை அடைய மேற்கொண்ட வழிபாடு இது என்பார்கள். இதற்கான மந்திரங்களை பிரம்ம தேவரே உருவாக்கிக்கொடுத்தார் என்பது ஐதிகம். அதன்படி இந்த சுயம்வர பார்வதி ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்தாலே கிரகதோஷங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

வாசகர்கள் கவனத்துக்கு

நாள்: 1.11.2026 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 10 மணி முதல்

இடம்: அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், வேலூர் கோட்டை சுற்றுச்சாலை, வேலூர்.


திருமணப் பிரார்த்தனை யாருக்காகச் செய்யப்படுகிறதோ, அவர்கள் நேரில் கலந்துகொள்வது மிகவும் விசேஷமாகும்.

முன்பதிவு செய்தவர்கள் ஹோமம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, கோயிலுக்கு வருகை தர வேண்டும்.

ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்பவர்களுக்கு, ஜலகண்டேஸ்வரர் தர்மஸ்தாபனம் சார்பில் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ சுயம்வரகலா பார்வதி யந்திரப் படம் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: 044-6680 2980 / 044-6680 2907 / 96770 69112

ஶ்ரீசுயம்வர கலாபார்வதி ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.