மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

 

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சவுரவ் கங்குலி, ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ்  அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அவர் ஒரு அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

 

முன்னதாக ஹேமங் பதானி தலைமை தாங்கிய பயிற்சி பிரிவுக்குப் பதிலாக தற்போது கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே டெல்லி அணியின் கிரிக்கெட் இயக்குநராகவும், ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருந்தார்.

 

"இனிமேல் பார்வையாளராக மட்டும் நின்று வழிகாட்டும் காலம் முடிந்தது; களத்தில் இறங்கி நேரடியாக செயல்பட தயாராகிவிட்டேன்" என்று கூறி டெல்லி கேப்பிடல்ஸ் வெளியிட்ட வீடியோவில் கங்குலி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். டெல்லி அணி உரிமையாளர்களான பார்த்திவ் ஜிந்தால் மற்றும் கிரண் குமார் கிராந்தி ஆகியோர் கங்குலியின் வருகை அணிக்கு புதிய உத்வேகத்தைத் தரும் என்றும், முதல் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்ற வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

கங்குலிக்கு உறுதுணையாக யுவராஜ் சிங் (பேட்டிங் பயிற்சியாளர்), சாமிந்தா வாஸ் (வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர்), மற்றும் அமித் மிஸ்ரா (சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர்) உள்ளிட்ட நட்சத்திப் பயிற்சியாளர் குழு அமைக்கப்பட உள்ளது. கேப்டன் அக்சர் படேல் தலைமையில், புதிய பயிற்சியாளர் குழுவுடன் டெல்லி கேப்பிடல்ஸ் களம் காண உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.