Asian Games: தோஹாவை நோக்கி அடுத்த பயணம்; 85 பதக்கங்களுடன் இந்தியா... வண்ணமயமான நிறைவு விழா

16 நாட்கள்... 43 விளையாட்டுகள்... ஆயிரக்கணக்கான வீரர்களின் போட்டி என பரபரப்பாக நடந்த 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு நகோயாவில் இன்று கோலாகலமாகத் திரை விழுந்தது. ஜப்பானின் பாலொமா மிசுஹோ (Paloma Mizuho) ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், ஐச்சி - நகோயா (Aichi-Nagoya) ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவுபெற்றன.

வண்ணமயமான நிறைவு விழா

ஜப்பானிய கலாசாரம் மற்றும் நவீன கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்ற நிறைவு விழா, விளையாட்டுப் போட்டிகளின் 16 நாள் பயணத்தை கொண்டாடும் வகையில் அமைந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒன்றாக அணிவகுத்து, போட்டிக்குப் பிறகான ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

இந்திய அணியின் கொடியேந்தும் (Flag Bearer) பொறுப்பை துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை நீரு தந்தா முன்னின்று நடத்தினார். இத்தொடரில் டிராப் ஷூட்டிங் பிரிவில் தனிநபர் தங்கம் மற்றும் கலப்பு அணி தங்கம் உள்ளிட்ட மூன்று பதக்கங்களை வென்ற நீருவுக்குக் கிடைத்த இந்தப் பொறுப்பு, அவரது சிறப்பான செயல்பாட்டுக்குக் கிடைத்த அங்கீகாரமாக அமைந்தது.

அணைந்த ஜோதி... தோஹாவிடம் ஒப்படைக்கப்பட்ட கொடி

நிறைவு விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக ஆசிய விளையாட்டுப் ஜோதி அணைக்கப்பட்டது. இதன்மூலம் நகோயா போட்டிகளின் அதிகாரப்பூர்வ முடிவு குறிக்கப்பட்டது.

அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தவுள்ள கத்தாரின் தோஹாவிடம் ஆசிய விளையாட்டுப் கொடி அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இதன்மூலம் 2030-ல் நடைபெறவுள்ள அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பயணமும் தொடங்கியது.

85 பதக்கங்களுடன் இந்தியா

இந்த விழாவுடன் இந்தியாவின் நகோயா பயணமும் நிறைவடைந்தது. 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களுடன் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்தது. தடகளத்தில் 24 பதக்கங்களும், துப்பாக்கிச் சுடுதலில் 15 பதக்கங்களும் இந்தியாவின் முக்கிய பதக்கப் பங்களிப்பாக அமைந்தன.

கிரிக்கெட், ஹாக்கி, கபடி ஆகிய அணிகள் தங்கம் வென்றதுடன், வில்வித்தை, குத்துச்சண்டை, மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகளிலும் இந்திய வீரர்கள் வெற்றிகளைப் பதிவு செய்தனர். நகோயாவில் ஏற்றப்பட்ட விளையாட்டு ஜோதி இன்று அணைந்தாலும், இந்திய வீரர்களின் வெற்றிக் கதைகள் அடுத்த இலக்கான தோஹா 2030-ஐ நோக்கித் தொடர்கின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.