திருப்பதி போக நேரமில்லையா? இங்கே போங்க... பிரச்னைகள் தீர்க்கும் மட்டைத் தேங்காய் பிரார்த்தனை!
புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடுதான். அதுவும் திருப்பதி பெருமாளை வழிபடுவது இந்த மாதத்தில் மிகவும் விசேஷம். திருப்பதியில் இந்த மாதம் முழுவதுமே கூட்டம் அதிகம் இருக்கும். எனவே திருப்பதி செல்லப் பலர் தயங்குவதுண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது திருமலைவையாவூர்.
செங்கல்பட்டில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது திருமலை வையாவூர். திருப்பதியில் பாதி திருமலை வையாவூர் என்பார்கள் பெரியோர்கள்.
ராஜாதோடர்மால் என்ற மன்னன் திருப்பதி வேங்கடவனின் பக்தன். திருமலை திருப்பதி ஆலயத்துக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். ஒருநாள் அவன் கனவில் தோன்றிய திருமால், ‘`இங்கே மலை உச்சியில் எனக்கொரு கோயில் இருப்பதுபோல், இந்த மலையின் இன்னொரு பாகம் அமைந்துள்ள பகுதியிலும் எனக்குக் கோயில் கட்டு. அங்கேயும் குடியமர்ந்து, பூவுலகை ரட்சிப்பேன்!’’ என்றார். அத்துடன் பர்வதத்தின் மற்றொரு பாகம் விழுந்த இடத்தையும் காட்டி அருளினாராம்.
அவர் காட்டிய தலம் திருமலைவையாவூர் என்கிறது தலபுராணம். ஆதிவராக க்ஷேத்திரம் என திருப்பதி சிறப்பிக்கப்படுவது போன்றே, இந்தத் தலத்தையும் போற்றுகிறார்கள் பக்தர்கள். ஊரின் நடுவே ஓங்கி உயர்ந்துள்ள மலையில், சுமார் 450 படிகளைக் கடந்து செல்ல... திருமாலின் ஆலயத்தைத் தரிசிக்கலாம். வாகனப் பாதையும் உண்டு.
இங்கே அருள்மிகு பிரசன்ன வேங்கடேச பெருமாள் என்ற திருப்பெயருடன் அருள்கிறார் இறைவன் . திருப்பதியில் உள்ளது போன்றே, இங்கேயும் முதலில், ஆதிவராகரைத் தரிசித்த பிறகே வேங்கடேச பெருமாளைத் தரிசிக்க வேண்டுமாம்.
கருவறையில்... சாளக்கிராம மாலை, அஷ்டலட்சுமி ஆரம், ஸ்ரீலட்சுமி ஆரம், தசாவதாரத் திருக்கோலங்கள் கொண்ட ஆபரணத்தை மாலையாகவும் ஒட்டியாணமாகவும் அணிந்தபடி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப்பெருமாள். தம்முடைய திருக்கரத்தில் செங்கோலுடன் பெருமாள் காட்சி தருவது இத்தல விசேஷம். பெருமாளின் பிரபையில் ஆதிசேஷன் காணப்படுகிறார். எனவே, இந்தப் பெருமாளை வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும் என்பது ஐதிகம்.
தாயாரின் திருநாமம் - ஸ்ரீஅலர்மேல் மங்கை; தனிச்சந்நிதியில் அருள்கிறார். ஆண்டாளுக்கும் தனிச்சந்நிதி உள்ளது. பங்குனி உத்திர நாளில் ஸ்ரீஅலர்மேல் மங்கைத் தாயாருக்கும், ஆடிப்பூரம் அன்று ஸ்ரீஆண்டாளுக்கும் திருக் கல்யாண உத்ஸவம் நடைபெறு கின்றன. ஸ்ரீசுதர்சன பெருமாள் தனி விமானத்துடன் கோயில்கொண்டுள்ளது விசேஷம். இவரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை விலகும்; தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்; காரிய வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோயிலில் மாதம்தோறும் திருவோணத்தன்று திருவோண தீப பூஜை விசேஷம். அன்றைய நாளில், இந்தக்கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணத் தடை அகலும்; பிள்ளை பாக்கியம் உண்டாகும்; நினைத்த காரியம் தடங்கலின்றி நடந்தேறும் என்கின்றனர்.
புரட்டாசி மாதத்தின் திருவோண நாளில், உத்ஸவ மூர்த்தியான ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீதேவி - ஸ்ரீபூதேவித் தாயாருடன், பிராகார உலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும்.
அனுமன் இங்கே பறக்கும் கோலத்தில் காட்சி கொடுக்கிறார். வீர ஆஞ்சநேயர் என்பது திருநாமம். இந்தத் திருமேனி ஒரே கல்லால் ஆனதாம். வியாழக்கிழமைகளில் இவரை தரிசனம் செய்து நம் வேண்டுதலை முன்வைக்க வேண்டும். இங்குள்ள அர்ச்சகரிடம் நாம் வேண்டுதல் வைக்க விரும்புகிறோம் என்று சொன்னால் அவர் உங்கள் பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு ஒரு எண் தருவார்.
மட்டைத் தேங்காய் ஒன்றை மஞ்சள் துணியில் சுற்றி, அதில் உங்கள் பிரார்த்தனைச் சீட்டையும் வைத்து உங்கள் எண்ணை அதில் குறிப்பிட்டு, பிறகு அந்த மட்டைத் தேங்கா யைக் கட்டிவிட வேண்டும். சரியாக 48 நாள்களுக்குள் நம் வேண்டுதல் பலித்து விடும் என்கிறார்கள் பக்தர்கள். வேண்டுதல் பலித்ததும் ஒருநாள் திரும்ப வந்து தாங்கள் கட்டிய தேங்காயை அவிழ்த்து ஆலயத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது நியதி.

அற்புதமான இந்தப் புரட்டாசி மாதத்தில், வாய்ப்பிருக்கும் அன்பர்கள் குடும்பத்துடன் திருமலை வையாவூருக்குச் சென்று ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாளை மனமுருகி வழிபட்டு வாருங்கள்; திருப்பதிக்குச் சென்ற புண்ணியம் கிடைக்கும். பெருமாளின் திருவருளால், வாழ்வில் நல்ல திருப்பங்கள் உண்டாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


