சுக்ரன் நல்ல இடத்தில் இருந்தால் ஆயுள் முழுக்க ராஜயோகம்! உங்கள் ஜாதகத்தில் எப்படி?

செழிப்பும், புகழும், செல்வம் - செல்வாக்குமாக ஒருவர் வாழ்கிறார் எனில், `அவருக்கு என்னப்பா... சுக்ரதசை!’ என்போம். சுக்ர தசைதான் கொட்டிக் கொடுக்கும் என்பதில்லை... உங்கள் ஜாதகத் தில் சுக்ரன் நல்ல நிலையில் இருந்தாலும், ஆயுள் முழுக்க முடிசூடா மன்னனாக வாழலாம்.

சுக்ர யோகம்

முதலில் சுக்ரதசையின் மகத்துவத்தை அறிந்துகொள்வோம். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர தசை என்பது இருபது ஆண்டுகளுக்கு நடக்கும். மற்ற நேரத்தில் வாழ்க்கை எப்படி இருந்தாலும், இந்த இருபது ஆண்டுகளில், ஆசைப்படும் அனைத்தையும் கொடுத்துச் சந்தோஷப்படுத்துவார் சுக்கிரன்.

சந்தோஷமான தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, குழந்தை களால் கிடைக்கும் மன நிம்மதி, நல்ல பெயர், புகழ், வாகனங்கள் வாங்கும் பாக்கியம், தொழில் மேம்பாடு என அனைத்தையும் கொடுப்பார் சுக்கிரன். இளம்வயதில் சுக்கிர தசை அடித்தால், கண்டிப்பாக அந்த ராசிக்காரருக்குத் திருமணம் நடக்கும்!

ஆனால், சுக்கிரன் இருக்கும் இடம், உடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள் ஆகியவற்றைப் பொறுத்து சிலருக்கு எதிர்மறையான பலன்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதேபோல், சிலருக்கு வாழ்க்கை முழுக்கவே சுக்கிர தசை நடக்கும் பாக்கியம் இல்லாமலும் இருக்கும். இப்படியானவர்கள் தங்கள் ஜாதகத்தில் சுக்ரன் இருக்கும் நிலையை அறிந்து, அதற்கேற்ப அவர் தரும் பலன்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சரி, இனி ஜாதகத்தில் சுக்ரன் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பது குறித்த பொதுவான விதிகளைப் பார்ப்போம்.

சுக்ர யோகம்

சுக்ரன் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்?

உங்கள் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் `ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டமே லக்னம். அதுவே ஒன்றாம் இடம். அதிலிருந்து கடிகாரச் சுற்று அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களைக் கணக்கிடலாம்.

ஒன்றாம் இடம்: லக்னமாகிய ஒன்றாம் இடத்தில் சுக்ரன் இருந்தால், எந்தச் செயலை எடுத்தாலும் அதில் வெற்றி கிட்டும். நல்ல அரசாங்க வேலை கிடைக்கும். படிப்பு, சுகமான வாழ்வு என எல்லாமே நிறைவாக அமையும்.

2-ம் இடம்: இந்த ஜாதகர் இலக்கியப் படைப்பாளியாக இருப்பார். பேச்சுத் திறன், அடுத்தவர்களுக்கு உதவும் தயாள குணம் என எல்லாமும் இருக்கும். நிறைய வழிகளில் பண வரவு இருக்கும். ருசியாகச் சாப்பிடுவதில் ஆசை கொண்டவராக இருப்பார்.

3-ம் இடம்: லக்னத்தில் இருந்து எண்ண வர 3-ம் இடத்தில் சுக்ரன் இருந்தால், அவர் தைரியசாலியாகவும் எப்போதும் உற்சாகத்துடனும் இருப்பார். விதவிதமான வாகனங்கள் வாங்கும் யோகம் இருக்கும்.

4-ம் இடம்: நான்காம் இடத்தில் சுக்ரன் இருந்தால், ராஜபோக வாழ்க்கைத்தான். அரசியலிலும் செல்வாக்குப் படைத்தவராக இருப்பார். உலகம் முழுக்கப் பெயர் தெரிகிற அளவு பிரபலமாவார். எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் வெற்றி கிட்டும்.

5-ம் இடம்: ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால், கல்வி மற்றும் கலைகளில் திறமைசாலியாக இருப்பார். நிறையக் குழந்தைகள் பிறக்கும். பெரிய பதவி கிடைக்கும். எல்லோரிடமும் நல்ல பெயர் எடுப்பார். இவருக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள்.

6-ம் இடம்: ஆறாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால், அவருக்கு சுக்கிர தசைகூட நல்லதாக அமையாது என்கின்றன ஜோதிடநூல்கள். பண விஷயமாக பயமும், பொருள் நாசமும் ஏற்படும். எப்போதும் ஏதாவது உபத்திரவம் இருக்கும். பிறப்பு தொடர்பான உடல் பாகங்களில் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

7-ம் இடம்: ஏழாம் இடத்தில் இருந்தால், குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடும். சந்தோஷமான விஷயங்கள் வாழ்க்கையில் நடந்தால்கூட அவற்றை அனுபவிக்க முடியாதபடி உடல் நலம் மோசமாக இருக்கும்.

8-ம் இடம்: அஷ்டமம் எனப்படும் எட்டாம் இடத்தில் சுக்ரன் இருக்கும்போது, இஷ்டமில்லாத காரியங்கள் நடக்கும். ஆனால், பணத்துக்குக் கஷ்டம் இருக்காது. பொதுவாகவே மற்ற கிரகங்கள் எட்டில் இருக்கும்போது அதிக உபத்திரவங்கள் தரும். சுக்ரன் அந்த அளவுக்கு மோசமான பலன்களைத் தரமாட்டார் எனலாம்.

9-ம் இடம்: ஒன்பதாம் இடம் என்பது பாக்கிய ஸ்தானமாகும். இதில் சுக்ரன் இருந்தால், பெயரும் புகழும் கிடைக்கும். நினைத்துப் பார்க்க முடியாத இடங்களில் இருந்தெல்லாம் பணம் வரும்.

10-ம் இடம்: பத்தாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால், அவர்கள் தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றம் காண்பார்கள். உயர்ந்த அரசாங்கப் பதவிகள் கிடைக்கும்.

11-ம் இடம்: இது லாப ஸ்தானம் ஆகும். இந்த பதினோராவது இடத்தில் சுக்ரன் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் அதிகமான சுகத்தை அனுபவிப்பார்கள். கலைகளில் ஆர்வம் காட்டும் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

12-ம் இடம்: இது விரய ஸ்தானம். பொதுவாக பன்னிரண்டாவது இடத்தில் எந்தக் கிரகம் இருந்தாலும் மோசமான பலன்களையே தரும். ஆனால், இந்த இடத்தில் இருந்து நல்லது செய்யும் ஒரே கிரகம் சுக்கிரன்தான். உடல்நலம் மேம்படும். விவசாயத்தில் லாபம் கிடைக்கும். பண வரவு நிறைய இருக்கும். ஆனால், தாயாருக்கு உடல் நலக் கோளாறு வரும் ஆபத்து இருக்கிறது.

இவையாவும் பொதுவான ஜோதிட விதிகளே. சுக்ரன் அமைந்திருக்கும் இடம் எந்த ராசி, அதன் அதிபதி கிரகத்தின் நிலை, இந்த இடங்களில் சுக்கிரனுடன் இருக்கும் கிரகங்களின் கூட்டணி போன்ற அமைப்புகள் பலன்களில் சில மாற்றங்களைச் செய்யக்கூடும். அதுபற்றி துல்லியமாக அறிய ஜோதிடரின் ஆலோசனையைப் பெறலாம்.

சுக்ர யோகம் வழிபாடு

செல்வ யோகம் அருளும் சுக்ர சாந்தி வழிபாடு

ஜாதகத்தில் சுக்ரனின் பாதக நிலைக்குப் பரிகாரமாகவும், சுக்ர பகவானின் அருளால் உயர்ந்த வாழ்வைப் பெறவும் விரிவான முறையில் சுக்ரசாந்தி பரிகா ஹோம வழிபாடுகள் செய்வது உண்டு.

எளிய முறையில்... வெள்ளிக்கிழமைகளில் சுக்ரபகவானை வணங்கி அவரின் அருளைப் பெறலாம். சிவாலய நவகிரகங்களில் சுக்ர பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம்.

வெள்ளிக்கிழமைகளிலும், பூச நட்சத்திரத்திலும் சுக்ரனை வழிபடுவது விசேஷம். இரண்டும் இணைந்து வரும் நாளாக இருந்தால் கூடுதல் விசேஷம். அன்றைய தினத்தில், சுக்கிர சாந்தி செய்யும்போது மகாலட்சுமியை வணங்குவது சிறப்பானது.

அதேபோல், ‘நமஸ்தேஸ்து மகாமாயே’ எனத் தொடங்கும் மகா லட்சுமி அஷ்டகத்தைத் தவறாமல் 41 வெள்ளிக்கிழமைகள் படித்து, மகாலட்சுமியை வணங்கி வந்தால் சுக்கிர சங்கடங்கள் விலகி, நீங்காத செல்வம் கிடைக்கும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.