மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: ரூ 32 கோடி திருப்பணி... 17 ஆண்டுகளுக்குப் பின் கோலாகல கும்பாபிஷேகம்!

மதுரை மாநகரின் அடையாளம் அன்னை மீனாட்சி அம்மன் கோயில்தான். பரந்து விரிந்து சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயில், எட்டு கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 32 கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும், கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் கொண்ட இந்தக் கோயிலின் ஆடி வீதிகளில், நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய, நான்கு கோபுரங்கள் மிகவும் பிரமாண்டமாக நின்று நம்மை வரவேற்கின்றன.

மீனாட்சியம்மனுக்குத் திருவிழா நடைபெறாத மாதமே இல்லை எனலாம். ஓர் ஆண்டின் பன்னிரண்டு மாதங்களில் 274 நாள்கள் திருவிழா நடைபெறும். இந்தத் தலத்தில் ஈசன் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வதை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானது. ஆண்டில் 16 முறை அவர் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வார். அவரைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா

மதுரை, ஈசன் தன் திருவடிபட நடந்த மண். எனவே இங்கு சென்றாலே புண்ணியம் பெருகும். மதுரை மண்ணில் ஈசன் நிகழ்த்திய திருவிளையாடல்களான வேடர்பறி லீலை, வளையல் விற்றது, நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது உள்ளிட்ட திருவிளையாடல்கள் ஆவணி மூலத் திருவிழாவின்போது நிகழ்த்திக் காட்டப்படும்.

அன்னை மீனாட்சி, பாண்டிய மன்னர்களின் குலதெய்வம். இதைக் குறிக்கும் வகையில் பட்டாபிஷேக வைபவத்தின் போது அன்னை வேப்பம்பூ மாலை சூடிக்கொள்வாள்.

அன்னையின் திருமேனி பச்சை மரகதக் கல்லால் ஆனது. மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால், மீனாட்சி என்றும் அங்கையற்கண்ணி என்றும் திருப்பெயர்கள் உண்டாயின. மீன், தன்னுடைய முட்டைகளை எப்படித் தனது பார்வையாலேயே தன்மயமாக்குவதுபோல, மீனாட்சி அம்மன், தனது பக்தர்களை, அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள் என்கின்றன புராணங்கள். மீனாட்சியம்மன் திருக்கரத்தில் கிளி ஒன்றும் உண்டு. பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்களை இந்தக் கிளி மீண்டும் மீண்டும் கோரிக்கை நிறைவேறும்வரை சொல்லிக்கொண்டே இருக்குமாம். மேலும் கிளி என்பது ஞானத்தின் வடிவம்.

அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி நுழைவாயில்களுக்கு மத்தியில், பழைய திருக்கல்யாண மண்டபம் உள்ளது. மண்டபத்தின் பின்னால், வரையப்பட்டுள்ள ரகோளம், பூகோளம் ஆகிய நுணுக்கமான இரண்டு சித்திரங்களும் இன்றைய அறிவியல் சிந்தனைகளை, அந்தக் காலத்திலேயே வெளிப்படுத்துபவையாக அமைந்திருக்கின்றன. திருக்கல்யாணம் காணவரும் கூட்டம் ஒவ்வோராண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால், 1981-க்குப் பிறகு புதிய மண்டபம் கட்டப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

தற்போது சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (செப்டம்பர் 17, 2026) மகா கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை நிபுணர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ், சுமார் ₹32.29 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 186 திருப்பணிகள் திட்டமிடப்பட்டு, தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.

பழைமை மாறாமல் நவீனம், பாரம்பர்யக் கலைநயத்துடன் இந்தத் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோயிலின் கம்பீரமான நான்கு ராஜகோபுரங்கள் உட்பட மொத்தம் 14 கோபுரங்களில் உள்ள சுதைச் சிற்பங்கள் (சுண்ணாம்புச் சிற்பங்கள்) அனைத்தும் தொல்லியல் முறைப்படி பழுதுபார்க்கப்பட்டு, பாரம்பர்ய இயற்கை வண்ணங்கள் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன.

மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் சந்நிதிகளின் மேல் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தங்க விமானங்கள், வேதியியல் நிபுணர்களின் உதவியுடன் எவ்வித சேதமுமின்றி தூய்மைப்படுத்தப்பட்டு, கலசங்கள் பளபளப்பாக்கப்பட்டுள்ளன. சந்நிதிகளின் மேல் தளங்களில் மழைநீர் கசிவதைத் தடுக்கும் பொருட்டு, சுமார் 2.5 லட்சத்தில் புதிய கூரை ஓடுகள் பாரம்பர்ய முறைப்படி பதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம், இந்தத் திருப்பணியின் மிக முக்கிய அங்கமாகும். பல கோடி ரூபாய் செலவில், பழங்காலத் தூண்களின் வடிவமைப்பிலேயே புதிய கற்கள் செதுக்கப்பட்டு, இம்மண்டபம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது.

மேலும் ஆயிரங்கால் மண்டபம், உட்பிரகாரங்களில் உள்ள தூண்கள், சிற்பங்களில் பல ஆண்டுகளாகப் படிந்திருந்த எண்ணெய் மற்றும் கற்பூரப் புகைக் கறைகள் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.

கோயிலின் பிரசாதங்கள், நெய்வேத்தியங்கள் தயாரிக்கும் மடைப்பள்ளி (சமையலறை) நவீனப்படுத்தப்பட்டுள்ளது. விறகு அடுப்புகளுக்குப் பதிலாக, புகை மாசற்ற (Eco-friendly) சமையல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த 50 சிசிடிவி (CCTV) கேமராக்களுடன், கூடுதலாக 75 நவீன உயர்ரக கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் இருந்த மின்சாரக் கம்பங்கள் அகற்றப்பட்டு, மின்சாரக் கம்பிகள் அனைத்தும் நிலத்தடி கேபிள்களாக (Underground Cables) மாற்றப்பட்டுள்ளன.

மாடவீதிகளில் பாதாளச் சாக்கடைக் குழாய்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு, தடையற்ற குடிநீர், தற்காலிக சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவுடன் கூடிய முக அங்கீகார (Facial Recognition) சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், சிறுவர்கள் தடம் மாறுவதைத் தவிர்க்க அவர்களின் கைகளில் பெற்றோர் விவரங்கள் அடங்கிய அடையாளப் பட்டைகள் (Tags) கட்டப்பட உள்ளன. நகரினுள்ளே நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க, நகரின் வெளிவட்டப் பகுதிகளில் தற்காலிகப் பேருந்து நிலையங்களும், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வெளியூர் பக்தர்களுக்காக நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்களின் வசதிக்காக மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, கும்பாபிஷேக நாள்களை முன்னிட்டுக் கட்டண தரிசன முறைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தற்போது கோயில் வளாகத்தில் 180-க்கும் மேற்பட்ட யாக குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டதும், ஆடி மற்றும் சித்திரை வீதிகளில் கூடும் பக்தர்கள் மீது தானியங்கி தெளிப்பான்கள் (Sprinklers) மூலம் புனித நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்குள் செல்ல முடியாதவர்களுக்காக நகரின் முக்கிய சந்திப்புகளில் 50-க்கும் மேற்பட்ட எல்.இ.டி (LED) திரைகளில் விழா நேரலை செய்யப்பட இருக்கிறது. அவசர மருத்துவ உதவிகளுக்காகப் பிரத்யேக மருத்துவக் குழுக்களும், 24 மணி நேர இலவச உதவி எண்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அற்புதமான கும்பாபிஷேக வைபவத்தை நீங்கள் சக்தி விகடன் யூட்யூப் தளத்தில் நேரடியாகக் காணலாம். https://www.youtube.com/@SakthiVikatan

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.