அன்பே சிவம் - 2 | நம் வேண்டுதல்களைக் கொட்டுகிற இடமா கோயில்கள்? | தவத்திரு பொன்னம்பல அடிகளார்!

இப்போதெல்லாம் கோயிலுக்குப் போகிறோம். மனம் ஒருமைப்படுவதில்லை. நமக்கு நிறைய பிரச்னைகள், நிறைய தேவைகள். நம்முடைய எல்லாத் தேவைகளையும் கொண்டு வந்து கொட்டுகிற இடமாகத் திருக்கோயிலை மாற்றிவிடுகிறோம். கருவறையில் இருக்கிற கடவுளிடம் நமக்கு என்னென்ன வேண்டும் என்று மளிகைக் கடையில் பட்டியல் போடுவதுபோல பட்டியல் போட்டுக்கொண்டிருக்கிறோம்.

கோயிலுக்கு வழிபாட்டுக்கு ஒருவர் வருகிறார். அர்ச்சனை செய்ய ஆசைப்படுகிறார். கோயில் வாசலில் இருக்கும் கடைக்குச் சென்று அர்ச்சனைக்காகத் தேங்காய் கேட்கிறார். கடையில் இருக்கும் தேங்காய்களில் ஒன்றை எடுத்து காதோரம் வைத்து ஆட்டிப் பார்க்கிறார். ஒரு தேங்காய், இரண்டு தேங்காய் என்று நூறு தேங்காய்களைப் போட்டு புரட்டி, கடைசியில் ஒரு தேங்காயை எடுத்து அர்ச்சனைக்காகத் தேர்வு செய்கிறார்.

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

அப்போது அவருடைய நண்பர், “என்னங்க, நூறு தேங்காய்களைப் போட்டு புரட்டுறீங்களே... ஒரு தேங்காயைத்தானே எடுத்தீங்க. இந்த முத்தின தேங்காயில்தான் அர்ச்சனை பண்ணணுமா?” என்று கேட்கிறார்.

அதற்கு அவர், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைங்க!” என்கிறார்.

“அப்புறம் ஏன் இத்தனை காய்களைப் போட்டு புரட்டி எடுத்தீங்க? ஒரு மூடையையே கொட்டிப் புரட்டிட்டீங்களே!” என்று நண்பர் கேட்கிறார்.

அதற்கு அவர், “இவர் இந்த அர்ச்சனையைப் பண்ணிவிட்டு வீட்டுக்குக் கொண்டு போகணும். வீட்டுல சட்னிக்கு இது வேணும்!” என்கிறார்.

பாருங்கள்... நம்முடைய பிரார்த்தனை எப்படி இருக்கிறது... வழிபாடு எல்லாம் வணிகமயமாகிவிட்டது.

ஒருவர் நிலத்தை உழுது வைத்திருக்கிறார். வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்கிறார். மழை வரவில்லை. கோயிலுக்குப் போய் ஒரு தேங்காயை உடைத்து, “கடவுளே, மழையைக் கொண்டுவா... மழையைக் கொண்டுவா. நான் நிலத்தை உழுது வைத்திருக்கிறேன். நெல்லை விதைத்திருக்கிறேன். மழை வேண்டும்” என்று வேண்டுகிறார்.

அவர் அங்கிருந்து நகர்ந்தார். அடுத்ததாக ஒருவர் வருகிறார். அவர் கருவறைக்கு முன்னால் நின்று விழுந்து விழுந்து கும்பிட்டு, “கடவுளே, பொங்கல் வரப்போகிறது. தைப்பொங்கலுக்கு மண்பானை செய்யும் வேலை என்னுடையது. அந்த மண்பானையைச் செய்வதற்காக மண்ணை இப்போதுதான் பிசைந்து வைத்திருக்கிறேன். இந்த மண் நனைந்துவிடக்கூடாது; கரைந்துவிடக்கூடாது. அதனால் மழை வரக்கூடாது” என்று வேண்டுகிறார்.

நிலத்தை உழுதவர் நெல்லுக்காக மழையைக் கேட்டார். மண்பானைக்காக மண்ணைப் பிசைந்து வைத்தவர் மழையை நிறுத்தச் சொல்கிறார். என்ன செய்வார் கடவுள்? ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி வானிலை அறிக்கையைச் சொல்லிக்கொண்டிருந்தால், அவரால் அதை எப்படிப் படிக்க முடியும்?

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

உடனே கடவுள், “இந்த மனிதர்களிடமிருந்து நாம் தப்பிக்க வேண்டும்” என்று நினைக்கிறார். அதற்காக ஒரு ஆலோசனைக் குழுவைக் கூட்டுகிறார்.

“நிறைய கோரிக்கைகள் என்னிடம் வருகின்றன. தவிர்க்க முடியாத கோரிக்கைகளாக இருக்கின்றன. இந்த மனிதர்களிடமிருந்து நான் தப்பிக்க வேண்டும். அதற்கு மனித நடமாட்டம் இல்லாத ஓர் இடம் வேண்டும். அப்படி ஓர் இடத்தைச் சொல்லுங்கள்” என்று ஆலோசனைக் குழுவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

ஆலோசனைக் குழுவும் மனிதர்கள் இல்லாத இடம் எது என்று தேடிப் பார்க்கிறது. அப்படி ஒரு இடம் தெரியவில்லை.

கடவுளுக்கே எங்கே ஒளிந்துகொள்வது என்று தெரியவில்லை. ஒருவரோ, “இமயமலையில் போய் உட்கார்ந்துகொள்ளலாமே!” என்கிறார்.

“அங்கேயா? இப்போதெல்லாம் அங்கேயும் போர்க்கருவிகளோடு, பீரங்கிகளோடு, துப்பாக்கிகளோடு வருகிறார்கள். அங்கே இருக்க முடியாது” என்கிறார் இன்னொருவர்.

“சரி, சந்திர மண்டலத்துக்குப் போகலாமா?” என்று ஒருவர் கேட்கிறார்.

“அதுவும் முடியாது. இப்போது மனிதன் அங்கே கால்பதிக்கிறான். சந்திரயான் ஒன்று, சந்திரயான் இரண்டு என்று தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறது” என்கிறார்கள்.

அடுத்து ஒருவர், “நட்சத்திரக் கூட்டத்துக்குள் போய் இருந்துகொள்ளலாமா?” என்கிறார்.

“எங்கே இருந்தாலும் மனிதன் தேடிக் கண்டுபிடித்துவிடுவான். இப்போது ராக்கெட்டுக்கு மேல் ராக்கெட் விட்டுக்கொண்டிருக்கிறான். எங்கே ஒளிவது?” என்று அனைவரும் தடுமாறுகிறார்கள்.

மனித நடமாட்டம் இல்லாத இடம் தெரியாமல் கடவுளும் தடுமாறுகிறார்; ஆலோசனைக் குழுவும் தடுமாறுகிறது.

இந்த நேரத்தில் கடவுளுடைய கண்களில் பூமியில் ஓர் காட்சி தென்பட்டது.

ஒரு அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அம்மா புலம்புகிறாள். “நம்ம பையன் எங்கே பணத்தை வைத்தாலும் எடுத்துவிடுகிறான். டிராயரில் வைத்தால் எடுத்துவிடுகிறான். மேஜை டிராயருக்குள் பூட்டி வைத்தாலும் எடுத்துவிடுகிறான். அலமாரியில் பத்திரப்படுத்தி வைத்தாலும் எடுத்துவிடுகிறான். எங்கே பணத்தை வைத்தாலும் இவன் எடுத்துவிடுகிறான்” என்று அழுகிறாள்.

அப்பா சொல்கிறார், “இனிமேல் பணத்தை நீ பீரோவில் பூட்டி வைக்காதே. அலமாரியில் பத்திரப்படுத்தாதே. மேஜை டிராயருக்குள்ளும் பூட்டி வைக்காதே. பணத்தை மறைத்து வைக்க ஒரு பாதுகாப்பான இடம் இருக்கிறது.”

“என்ன பாதுகாப்பான இடம்?” என்று அம்மா ஆர்வமாகக் கேட்கிறாள்.

அப்பா ரகசியமாக மெதுவாகச் சொல்கிறார்:

“நம்ம பையனோட பாடப் புத்தகத்துக்குள்ள பணத்தை வை. அவன் பாடப் புத்தகத்தைத் திறந்து பார்க்கவே மாட்டான். பணம் பத்திரமாக இருக்கும்!”

இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் கடவுள் சொன்னார்:

“நான் மனிதனுடைய மனதுக்குள் ஒளிந்துவிட்டால், அவன் தன் மனதைத் திறந்து என்னைத் தேடிப் பார்க்க மாட்டான். நான் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பேன்!”

என்று ஆண்டவன் சொன்னாராம்.

இந்தக் காட்சியைத்தான் அப்பர் பெருமான், “கடவுள் எப்போது நம் கண்களுக்கு தெரிவார்? நம்மைக் கண்டு ஓடி ஒளிகிற கடவுள் எப்போது நம் கண்களுக்கு தெரிவார்?” என்ற நிலையில் உணர்த்துகிறார்.

தாய்மார்கள் அதிகாலைப்பொழுதில் தயிரைக் கடைவார்கள். சூரிய ஒளியின் இளஞ்சூட்டில் வெண்ணெய் தயிரிலிருந்து பிரிந்து வந்துவிடும். அதுபோலத்தான் நம் மனதை இளமைக்காலத்திலேயே பக்தியை நோக்கிச் செலுத்தினால், அன்பே சுகமாக மாறிவிடும்.

அந்த நிலையில்தான், “உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால்முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே” என்று அப்பர் பெருமான் பாடுகிறார்.

அப்பனாகவும், அம்மையாகவும், ஐயனாகவும், அனைத்து உறவாகவும் இறைவன் நமக்குக் காட்சி தருகிறார்.

“அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ,| அன்பு உடைய மாமனும் மாமியும் நீ,

ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,| ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,| துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ” என்று எல்லா உறவுகளாகவும் இறைவனைப் பார்க்கிறார் அப்பர் பெருமான்.

இறைவன் நம்மோடு உறவாக, உறவோடு உறவாக இருக்கிறான். அந்த பக்தி நிலையை நாம் நாளும் வளர்த்தால், அன்பே சிவமாகி, அவன் நமக்குக் காட்சி தருவான்.

அன்பே சிவமாகக் காட்சி தருகிற இறைவன் எப்படியெல்லாம் காட்சி தருகிறான்?

அப்பர் பெருமானைத் திருவெண்ணீற்று அறையில் இடுகிறார்கள். வெண்ணீற்று அறை என்பது சுண்ணாம்புக் காளவாய். சுண்ணாம்புக் காளவாய் அறையில் அவரைப் பூட்டி வைத்தபோது அவர் பாடுகிற பாடல்:

“மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நிழலே”

என்று பாடுகிறார்.

அடைக்கப்பட்டிருப்பது சுண்ணாம்புக் காளவாய் அறை. வெப்பம் நிறைந்த அறை. கனலாய் இருக்கிற அறை. ஆனால் அது அவருக்கு எப்படி இருக்கிறது? குளிர்சாதன அறையைப் போலக் குளிர்ச்சியாகக் காட்சி தருகிறது.

“மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கிள வேனிலும், மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே” என்று பாடுகிறார்.

வீணையின் கீதத்தைக் கேட்கக் கேட்க இன்பமாக இருக்கிறது. அதற்கு என்ன வேண்டும்? நம் காதுகளுக்குக் கேட்கும் சக்தி இருக்க வேண்டும்.

முழு நிலவு வானத்திற்கு அலங்காரமாக இருக்கிறது. வானத்தின் விண்ணில் அழகாகக் காட்சி தருகிற முழு நிலவைப் பார்க்கப் பார்க்க பரவசம் ஏற்படுகிறது. அதற்கு என்ன தேவை? நம் கண்களுக்குப் பார்க்கும் சக்தி தேவை.

தென்றல் காற்றுக்கு எந்தப் பேதமும் கிடையாது. இன்னார் இனியார், நல்லார் தீயார், உயர்ந்தார் தாழ்ந்தார் என்று எந்தப் பேதமும் பார்க்காமல் அனைவரையும் வருடிச் செல்கிறது.

அந்தத் தென்றல் காற்றைப் போல இறைவனும் புதுமையானவன். அனைவருக்குமாக இருக்கிறான்.

அந்தப் புதுமையான இறைவனை நாம் உணர்ந்து வழிபட்டால், ஒன்றிய உணர்வோடு வழிபட்டால், அவன் நமக்குக் காட்சி தருவான்.

எப்படி?

அன்பே சிவமாகக் காட்சி தருவான்.!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.