ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் .. பாகிஸ்தானை 55 ரன்களில் சுருட்டிய இந்திய அணி..

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி வெறும் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். தொடக்க வீராங்கனைகளான முனீபா அலி 13 ரன்களும், ஷாவல் ஷுல்ஃபிகர் 14 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பெரும்பாலான வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.

 

இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலால் பாகிஸ்தான் பேட்டிங் வரிசை அடுத்தடுத்து சரிந்தது. 18.1 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

இந்திய அணியில் ஸ்ரீ சரணி மற்றும் பிரேமா ராவத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும், ஷஃபாலி வர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இதையடுத்து 56 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை இந்திய அணி எதிர்கொண்டுள்ளது. வலுவான பந்துவீச்சை தொடர்ந்து பேட்டிங்கிலும் இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.