கோவை, புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகர்: நாகதோஷம் தீரும்... விரைவில் வேண்டுதல் நிறைவேறும்!

விநாயகரை வழிபட்டால் வினைகள் தீரும். எளிமையாக மனம் உருகி அழைத்தாலே ஓடிவந்து காத்திடுபவர் விநாயகர். அதனால்தான் ஊரெங்கும் தெருவுக்குத் தெரு விநாயகர் கோயிலை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.

பொதுவாக மகான்கள் பிரதிஷ்டை செய்தோ அல்லத அவர்களின் உத்தரவின் பேரில் உருவான ஆலயமோ மிகவும் சக்தி வாய்ந்ததாகத் திகழ்வும். அப்படி ஓர் ஆலயம்தான் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ஸ்ரீமுந்தி விநாயகர்.

பொதுவாகவே விநாயகர் திருமேனியைத் தரிசித்தாலே நமக்கு உற்சாகம் பிறக்கும். புலியகுளம் ஸ்ரீமுந்தி விநாயகர் ஆலயத்துக்குள் நுழைந்து அவரைத் தரிசனம் செய்தாலோ உற்சாகத்தோடு நம் விழிகளும் விரியும். காரணம் அவரது பிரமாண்டத் திருமேனி.

புலியகுளம் முந்தி விநாயகர்

முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குல உயரமும் 11 அடி 10 அங்குல அகலமும், 8 அடி கனமும் கொண்டவராக, சுமார் 190 டன் எடை கொண்டவராகத் திகழ்கிறார். இன்னொரு சிறப்பு... இந்தத் திருமேனி ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது. விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம்.

துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள். வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன்கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார்.

தவிர, துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீவிநாயகர். அவரின் கிரீடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு.

வாசுகி பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் ஸ்ரீகணபதி பெருமான். நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து ஸ்ரீவிநாயகரை வணங்கினால், தோஷம் நீங்கி, வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை என்கிறார்கள் இங்கு வந்து வழிபடும் பக்தர்கள்.

இந்த ஆலயம், அந்தப் பகுதி மக்களால், கடந்த 98-ம் வருடம், ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

எத்தகைய சிக்கலாக இருந்தாலும் என்ன இன்னல் வந்திடினும் முன்னின்று வந்து அனுக்கிரகம் செய்து அதைத் தீர்த்துவைப்பாரம் இந்த விநாயகர். இப்படி முந்திவந்து காப்பவர் என்பதால்தான் இவருக்கு ஸ்ரீமுந்தி விநாயகர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர். அனைத்துக் கடவுளருக்கும் முதன்மையானவர் என்பதாலும் இந்தத் திருநாமம் இவருக்கு.

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது’ என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு ஸ்ரீவிநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி. அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளது.

சித்திரை முதல் நாள், இவருக்கு மலர்களால் பழங்களால் சிறப்பு அலங்கார பூஜை நடைபெறுகிறது. அந்த மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்வதும் பக்தர்களுக்கு பழங்கள் விநியோகிப்பதும் சிறப்புற நடைபெறும்.

அதேபோல் விநாயக சதுர்த்தி நாளில், அதிகாலையிலேயே விநாயகருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுடன், மிகுந்த எடை கொண்ட பிரமாண்ட மாலை அணிவிக்கப் பட்டு, ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார் இந்த விநாயகர்.

பாகலூர் ஸ்ரீவரசித்தி விநாயகர்
பாகலூர் ஸ்ரீவரசித்தி விநாயகர்

இந்த விநாயகர் சந்நிதியில் பிள்ளைகளுக்கு அட்சராப்யாசம் செய்து படிப்பினைத் தொடங்கினால் அவர்கள் நல்ல முறையில் கல்வி கற்பார்கள் என்பது நம்பிக்கை. மேலும் இவரே ஆசியாவில் மிகப் பெரிய விநாயகர் திருமேனிகளில் ஒருவர் என்கிறார்கள் ஆலயத்தினர் பெருமையாக.

ஸ்ரீமுந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். பதினாறு வகை பேறுகளும் பெற்று, பெருவாழ்வு வாழலாம் என்கின்றனர் பக்தர்கள். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் இந்த முந்திவிநாயகரை வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும். நலமாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.