Vishwanath & Sons: ஒரு படத்தின் வெற்றி என்பது, டிக்கெட் மற்றும் வசூல் கணக்கில் இல்லை! - சூர்யா
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்றைய தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சூர்யா பேசுகையில், "வெங்கி அட்லூரி, தயாரிப்பாளர் வம்சி என இருவரும் தெலுங்கு மாநிலங்களில் இருந்து வந்திருக்கிறார்கள்; நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். மமிதா கேரளாவில் இருந்து, ரவீனா மேடம் மகாராஷ்டிராவில் இருந்து வந்திருக்கிறார்கள்.
நாம் அனைவரும் வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்கள்தான். ஆனால் நீங்கள் அந்த எல்லைகள் அனைத்தையும் அழித்துவிட்டீர்கள். "இது ஒரு நல்ல திரைப்படம், இது மனதிற்கு நெருக்கமான ஒரு உணர்வு" என்று கூறி இந்த குடும்பக் கதையை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் திரையரங்கிற்கு வந்து, "இது ஒரு முக்கியமான திரைப்படம், இப்படிப்பட்ட திரைப்படங்களைப் பற்றிப் பேசுவது மிகவும் முக்கியம்" என்று நிரூபித்துவிட்டீர்கள்.
ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது, விற்பனையாகும் டிக்கெட் எண்ணிக்கையிலோ அல்லது வசூல் கணக்கிலோ இல்லை.
திரைப்படம் முடிந்து வெளியே வரும்போது மக்கள் பேசும் பேச்சுகள், அவர்களின் மனங்களில் தங்கும் உணர்வுகள், அவர்களின் கண்ணீர் மற்றும் சிரிப்பில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது.
நிச்சயமாகப் பணம் முக்கியம்தான், ஆனால் இரண்டு வருடங்கள் கழித்தும் இந்தப் படத்தைப் பற்றிப் பேசுவார்கள். அந்த உணர்வுதான் மிகவும் முக்கியமானது.

இந்தக் கதையில் ரவீனா மேடம், ராதிகா மேடம், மமிதா எனப் பெண்களுக்கான கதாபாத்திரங்களை அவ்வளவு அழகாக வடிவமைத்திருக்கிறார்கள். அதற்காகவும், இந்தக் கதாபாத்திரங்களைக் கொண்டாடுவதற்காகவும் திரையரங்கிற்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.
ஆக்ஷன் திரைப்படங்கள் ட்ரெண்டில் இருக்கும் இந்தக் காலத்தில், இதுபோன்ற ஒரு குடும்பத் திரைப்படத்தையும் மனித உறவுகளையும் மையமாகக் கொண்ட கதையை நீங்கள் நம்பி வெற்றிபெற வைத்தது உண்மையிலேயே எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது," எனப் பகிர்ந்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


