கன்னியாகுமரி மாவட்டம், திருநட்டாலம் சங்கரநாராயணர் : வழக்குகளில் வெற்றி... திருமண வரம் தரும் ஆலயம்!
ஈசன் சங்கரநாராயணராய் அருளும் தலங்கள் அனைத்துமே சிறப்புடையவை. தம்பதி ஒற்றுமையை அதிகப்படுத்துபவை. இந்த உலகில் வாழ்வதற்குத் தேவையான நலன்களை அருள்வதோடு உலகுக்குத் தேவையான ஞானத்தையும் வழங்குவன. அப்படிப்பட்ட ஓர் ஆலயம் தான் திருநட்டாலத்தில் இருக்கும் சங்கரநாராயணர் கோயில்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, திருநட்டாலம். மகாசிவராத்திரி சிவாலாய ஓட்டத்தில் இடம்பெறும் 12-வது சிவத்தலம் இது.
குருக்ஷேத்ர யுத்தத்துக்குப் பிறகு யாகம் ஒன்று நடத்த புருஷாமிருகம் தேவைப்பட்டது. ஆனால், புருஷாமிருகத்தை அதன் எல்லையில் வீழ்த்துவதோ, அதை அதன் எல்லையிலிருந்து வெளியேற்றி அழைத்து வருவதோ எளிதான காரியம் அல்ல. அப்போது, தனது பலத்தின் மீது கர்வம் கொண்டிருந்த பீமன், புருஷாமிருகத்தை, தான் அழைத்து வருவதாகச் சொன்னான்.
ஹரியும் சிவனும் ஒன்று. அப்படியிருக்க, சிவனை மட்டுமே வழிபடும் புருஷாமிருகத்தின் போக்கையும், தன் பலத்தால் எதையும் அடைந்துவிடலாம் என்று எண்ணிய பீமனின் கர்வத்தையும் முடிவுக்குக் கொண்டுவர எண்ணினார் கிருஷ்ணர்.
அதன்படி பீமனுக்கு 12 ருத்திராட்சங்களை வழங்கினார். ``புருஷா மிருகத்துக்குக் கேட்கும் படி `கோபாலா... கோவிந்தா... என்று நீ எனது பெயரைக் கூவி அழைத்தால், ஆத்திரத்துடன் உன்னைப் புருஷா மிருகம் துரத்த ஆரம்பிக்கும்.
அதனிடம் இருந்து தப்பிக்க நீ ஓடும்போது, சோர்வு ஏற்பட்டால் இந்த ருத்ராட்சங்களில் ஒன்றைக் கீழே வை. அது சிவலிங்கமாக மாறி விடும். சிவலிங்கத்தைக் கண்டால் வழிபாடு செய்யாமல் நகராது புருஷாமிருகம். வழிபட்டு முடித்த பின்னர் மீண்டும் உன்னைத் துரத்த தொடங்கும். அதற்குள் நீ வெகுதூரம் ஓடி வந்துவிட முடியும்” என்று உபாயம் கூறினார் கிருஷ்ணர்.
பீமனும் அப்படியே செயல்பட்டான். புருஷா மிருகத்தின் எல்லைக்குச் சென்று `கோவிந்தா... கோபாலா... எனக் கூவினான். புருஷாமிருகம் அவனைத் துரத்த ஆரம்பித்தது. கண்ணன் சொன்னபடியே, குறிப்பிட்ட தூரங்களில் ருத்ராட்சத்தைக் கீழே வைத்துத் தப்பித்தான். அவ்வாறு 12 ருத்ராட்சங்களையும் பயன்படுத்திய பிறகும், புருஷா மிருகத்தின் எல்லையை முழுமையாகத் தாண்ட முடியவில்லை.
இறுதியில் எல்லையைத் தாண்டும் கணத்தில், பீமனின் ஒரு காலை புருஷா மிருகம் பிடித்துவிட்டது. அதன் எல்லைக்குள் ஒரு காலும் வெளியே ஒரு காலும் வைத்து நின்றிருந்தான் பீமன். தன் எல்லைக்குள் ஒரு கால் இருப்பதால், பீமன் தனக்கே சொந்தம் என்றது புருஷாமிருகம். இதை பீமன் ஏற்க மறுத்தான்.

உடனே புருஷா மிருகம், “உன் சகோதரன் தர்மன்தானே அவனிடமே நீதி கேள்” என்றது. வழக்கு தருமரிடம் சென்றது. தர்ம புத்திரரோ தன் உடன் பிறந்தவன் என்றும் பாராமல் பீமன் உடலை இரண்டாகப் பிளந்து ஒரு பகுதியை புருஷாமிருகத்திடம் கொடுக்கும்படித் தீர்ப்பு சொன்னார். இதைக் கேட்ட புருஷாமிருகம் சிலிர்த்தது. தர்மரின் நியாய உணர்வைப் பாராட்டியது. அதற்குப் பரிசாக பீமனை விட்டுவிட்டது. தனது பாலை வழங்கவும் ஒப்புக்கொண்டது.
அப்போது, அந்த இடத்தில் பீமன் வைத்த 12-வது ருத்திராட்சத்தில் இருந்து ஈசன் சங்கர நாராயணராகக் காட்சி கொடுத்தார். புருஷாமிருகமாக இருந்த வியாக்ரபாத முனிவர் ஹரியும் சிவனும் ஒன்றே என்பதை அறிந்து மகிழ்ந்தார். பீமனும் தன் பலம் குறித்த அகந்தையை விட்டான். இப்படி மெய்ஞ்ஞானம் அருளும் அற்புதத் தலமாகத் திகழ்கிறது திருநட்டாலம்.
இங்குள்ள ஆலயத்தை தரிசித்து, மகாசிவராத்திரி தோறும் நடைபெறும் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்கிறார்கள் பக்தர்கள். பெரிய திருக்குளம் ஒன்றின் மேற்கில் மகா தேவர் ஆலயமும், கிழக்குப் பகுதியில் சங்கர நாராயணர் கோயிலும் அமைந்துள்ளன.
மகாதேவர் ஆலயத்தை பீமன் ஸ்தாபித்ததாகக் கூறுகின்றனர். மஹாதேவர் கோயில் சற்று உயரமான இடத்தில் அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்குக் கொடிமரம் இல்லை. நுழைவு வாயிலில் பலிபீடம் அமைந்துள்ளது. கருவறைக்கு முன்பு ஓடால் வேயப்பட்ட நந்தி மண்டபம் உள்ளது.
வட்டவடிவில் அமைந்துள்ள கருவறையின் மேல்பகுதி, கூம்பு வடிவில் தேக்குமரங்களால் அமைக்கப்பட்டுள்ளது; செப்புத்தகடும் வேயப்பட்டுள்ளது. கருவறையில் உயரமான பீடத்தில் சுயம்பு லிங்கமாக மகாதேவர் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். ஐந்தெழுத்து ஓதி கருவறையை பிரதட்சிணம் செய்தால், மனதின் சங்கடங்கள் அனைத்தும் விலகுகின்றன. மனத்தில் நேர்மறை அதிர்வுகள் பரவுவதை நம்மால் உணரமுடியும்.

தெற்குமுக விநாயகர், நாகர் ஆகியோ ருக்கும் சந்நிதிகள் உள்ளன. இங்கு அபூர்வமாய் நின்ற கோலத்தில் அருள்கிறார் சண்டிகேஸ்வரர். வெளிப்புறத்தில் `குச்சரி மூடு எனப்படும் பழைமை வாய்ந்த மரத்தடியில் துர்கை அம்மன், சப்த மாதர்கள், காலபைரவர், சாஸ்தா ஆகியோர் அருள்க்கிறார்கள்.
கொடிமரத்தின் மேல் பகுதியில் கருடாழ்வார் காட்சி அளிக்கிறார். கோயில் நுழைவு வாயிலில் சங்கரநாராயணர் நின்ற கோலத்தில் அருள்வதையும் தரிசிக்கலாம். சிவன் பாகத்தில் காளை வாகனமும், விஷ்ணு பாகத் தில் கருட வாகனமும் அமைந்திருப்பது சிறப்பு.
மேலும் இத்தலத்தோடு தொடர்புடைய மகாபாரத நிகழ்வை விளக்கும் விதமாக, சங்கரநாராயணருக்கு ஒருபுறம் பீமனும் மறுபுறம் வியாக்ரபாத முனிவரும் அமர்ந்திருக்கும் காட்சியைப் பார்க்க முடியும்.
கோயிலுக்குள் நுழைந்தால் 16 தூண்களைக் கொண்ட நமஸ்கார மண்டபத்தை அடைய லாம். சிறிது இடைவெளியில் வட்ட வடிவில் கருவறை அமைந்துள்ளது. விமான கோபுரத்தில் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறையை ஒட்டி இடப்புறம் விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. விநாயகர் சிவலிங்கத்தின் கோமுகி பாகத்துக்கு மேல் வீற்றிருக்கிறார்.
கருவறையில் சுயம்பு லிங்க வடிவத்தில் சங்கர நாராயணர் காட்சி அருள்கிறார். சிவாலய ஓட்டத்தின்போது, பக்தர்களுக்கு அனைத்து சிவாலயங்களிலும் திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். நிறைவாக சங்கர நாராயணர் கோயிலில், சந்தனப் பிரசாதம் பெற்று சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்கிறார்கள் பக்தர்கள்.

பங்குனி மாதம் 10 நாள்கள் கொடியேற்றத்துடன் திருவிழா நடை பெறுகிறது. சுவாமிக்கு சர்க்கரைப் பாயசம், பால் பாயசம், அவல், பஞ்சாமிர்தம் மற்றும் பழங்களை நைவேத்தியமாகப் படைக்கிறோம்.
இந்தக் கோயிலுக்கு வந்து மனம் உருகி வழிபடும் பக்தர்களின் திருமணத் தடைகளை நீக்குவதுடன், குழந்தைப் பாக்கியமும் அருள்கிறார் சங்கர நாராயணர். மேலும் வழக்குகளில் வெற்றி பெறுவதற்காக இங்கு வந்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்.
வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறையேனும் சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் எல்லா இன்பங்களும் உங்களைத் தேடிவரும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


