விழுப்புரம், தாதாபுரம் ரவிகுல மாணிக்க ஈஸ்வரர் : நிலம் சார்ந்த பிரச்னைகள் தீர்க்கும் தலம்!
சோழமன்னர்கள் எழுப்பிய ஆலயங்கள் அனைத்துமே காலத்தில் நிலைத்து நின்று வரலாற்றையும் ஆன்மிகத்தையும் தம்முள் தேக்கிவைத்திருக்கும் பொக்கிஷங்கள். தமிழகம் முழுவதும் இப்படியான ஆலயங்களைக் காணமுடியும். அப்படிப்பட்ட பழைமை வாய்ந்த ஓர் ஆலயம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்திலுள்ளது தாதாபுரம். ராஜராஜன் காலத்தில் இவ்வூர், ‘ராசராசபுரம்’ என வழங்கப் பட்டதாம். அதுவே மருவி தாதாபுரம் என்றானது என்கிறார்கள். இந்த ஆலயம் ராஜராஜ சோழனின் 19-ம் ஆட்சியாண்டில் கட்டப்பட்டதாக ஆலயத்தின் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
கருவறையில், லிங்கத் திருமேனியராகக் காட்சி தரும் இந்த ஈசனின் திருநாமம் அருள்மிகு ரவிகுல மாணிக்க ஈஸ்வரர். இந்த இறையனாருக்கு மாணிக்க ஈஸ்வரர், பால்வண்ண ஈஸ்வரர், பால்வண்ண நாதர் ஆகிய பெயர்களும் உண்டு. தரிசித்த கணத்திலேயே பக்தர்களின் பாவங்களையும் தோஷங்களையும் பொசுக்கி, அவர்கள் விரும்பும் வரங்களையும் சகல பேறுகளையும் அள்ளித் தரும் வள்ளலாகத் திகழ்கிறார் இந்த ஈசன்.
கிழக்கு நோக்கிய இந்தச் சிவாலயம் இது. நுழைவாயிலின் அருகே கோயிலின் மேற்புறமாக பாம்பு போன்ற அமைப்பு காணப்படுகிறது. மழை, வெள்ளம், இடி என இயற்கை சீற்றங்களால் இந்தக் கோயிலுக்கு எவ்வித பாதிப்பும் நேராது எனும் நம்பிக்கைக்கான குறியீடு அது என்கிறார்கள்.
சிவபெருமானை நோக்கி கம்பீரமாக அமைந்திருக்கும் நந்திதேவரை தரிசித்தபடி நகர்கிறோம். கருவறை, அர்த்தமண்டபம், இடைநாழி, மகா மண்டபம், முகமார்பு எனும் அமைப்பில் திகழ்கிறது ஆலயம்.
இடைநாழிப் பகுதியில் திகழும் துவார பாலகர்கள் கவனம் ஈர்க்கிறார்கள். இடதுபுற துவாரபாலகரின் கச்சையில் சுற்றியிருக்கும் பாம்பு ஒன்று பெரிய யானையை விழுங்குவது போன்ற காட்சி, சிற்ப அற்புதம்.

இந்த ஆலயம் ராகு-கேது பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது இந்தக் கோயில். மட்டுமன்றி, ரவிகுல மாணிக்க ஈஸ்வரரை மனதார வேண்டிக் கொண்டால், நிலம் சார்ந்த வழக்குப் பிரச்னைகள், திருமணத் தடைகள், உறவுகளுடனான பிரச்னைகள் ஆகியவை விலகும்; மன நிம்மதி உண்டாகும் என்கிறார்கள்.
இத்தலத்து அம்பிகைக்கு காமாட்சி என்று திருப்பெயர். `காமம் என்றால் விருப்பம் எனப் பொருள். தன்னைத் தேடி வந்து தரிசிக்கும் அன்பர்களின் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றித் தரும் கருணை நாயகி இந்த அன்னை என்கிறார்கள் பக்தர்கள்.
ஆடிப்பூரம் திருநாளில் அம்பாளுக்கு இங்கே வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும். குழந்தை இல்லாத தம்பதியர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு அன்னையை வழிபட்டால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆலயத்தின் வெளிப்புறச் சுவரில் 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. கோஷ்டங்களிலும் பரிவாரச் சந்நிதிகளிலுமாக நிருத்தக் கணபதி, தட்சணாமூர்த்தி, திருமால், துர்கை, நான்முகன், பைரவர், காளிங்கநாதர், விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், காலபைரவர், நவகிரகங்கள், சூரிய பகவான் ஆகியோரை தரிசிக்கலாம்.

எருமைத் தலையின்மீது பாதம் பதித்து எட்டுக்கரங்களுடன் திகழும் துர்கை இந்தக் கோயிலின் சிறப்பம்சம். ராகு காலத்தின் இந்த அன்னையை தரிசித்து வழிபட்டால், நாகதோஷங்கள் விலகுமாம்.
தைப் பொங்கல் தினத்தன்று வீதியுலா விமர்சையாக நடைபெறும். அதேபோல், காணும் பொங்கல் நாளில் இரவில் சிவனார் வேட்டைக்குச் செல்லும் வைபவமும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. மட்டுமன்றி, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம் போன்ற வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
வரலாற்று ஆவணமாகக் காணப்படும் இந்த ஆலயத்தை ஒருமுறை வந்து தரிசித்துச் செல்லுங்கள். வாழ்வில் பிணிகளும் பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் ஆரோக்கியமும் ஆனந்தமும் உண்டாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


