விஜய் சார், இந்த அரசு அமைஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் என்றார்! - பாடலாசிரியர் விவேக்
நடிகர் விஜய் தற்போது முதல்வர் ஆகிவிட்டார். சினிமாவில் அவருடன் இணைந்து பணியாற்றிய பலரும், அவர் முதல்வரான பிறகு தொடர்ந்து சந்தித்து அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் பாடலாசிரியர் விவேக் முதல்வர் விஜய்யை சந்தித்திருக்கிறார். மெர்சல், பிகில், வாரிசு, சர்கார், ஜனநாயகன் போன்ற விஜய் நடித்த படங்களுக்கு ஹிட் பாடல்களை இவர் எழுதியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, விஜய், தவெக கட்சியைத் தொடங்கிய பிறகு கட்சிப் பாடல்களாகவும், பிரசாரப் பாடல்களாகவும் வெளிவந்த தமிழன் கொடி, உங்க விஜய் நான் வரேன், தன்னந்தனி ஆளு போன்ற பாடல்களையும் எழுதியது இவர்தான்.
தற்போது முதல்வர் விஜய்யை சந்தித்தது குறித்து அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் விவேக்.
அந்தப் பதிவில் அவர், "மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பைக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே!
மதிப்பிற்குரிய முதல்வர் என்னிடம், இந்த அரசு அமைஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா என்றார்.
ஆனால், அப்படி கிடையாது. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்.
View this post on InstagramA post shared by Vivek (@lyricist_vivek)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு, அதான் தளபதி.
எனக்கு இது வரலாற்றுப் பதிவு. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள்!" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


