முதல் ஓவரில் 3 விக்கெட், மெய்டன்.. இந்த ஓவரை வைபவ் சூர்யவன்ஷி சந்தித்து இருந்தால் என்ன நடந்திருக்கும்?

லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் தனது அபாரமான பந்துவீச்சால் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

 

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், புதிய பந்தை கையில் எடுத்த ராபின்சன், தனது முதல் ஓவரிலேயே டெவன் கான்வே, கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி மெய்டன் ஓவராக மாற்றி அசத்தினார்.

 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 ஓவர்கள் வீசி, 3 மெய்டன்களுடன் வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை அவர் அள்ளினார். இதனால் நியூசிலாந்து அணி 61 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

 

ராபின்சனின் இந்த மிரட்டலான பந்துவீச்சு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர்கள் சுவாரசியமான விவாதம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்தியாவின் 15 வயது இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி இந்த அனல் பறக்கும் ஓவரை எதிர்கொண்டிருந்தால் விக்கெட் இழக்காமல் தப்பித்திருப்பாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

 

இதற்கு பதிலளித்துள்ள சிலர், இவ்வளவு கடினமான இங்கிலாந்து ஆடுகளத்தில் சூர்யவன்ஷி தப்பிப்பது கடினம் என கூறினாலும், சர்வதேச போட்டிகளில் இன்னும் அறிமுகமே ஆகாத ஒரு இளம் வீரரை இப்போதே இப்படிப்பட்ட உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சுடன் ஒப்பிடுவது முறையல்ல என்றும் மற்ற ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.