தவறான ரயிலில் ஏறிவிட்டால் இறங்குவதுதான் நல்லது! – முதன்முறையாக மனம் திறந்த ஹன்சிகா!

தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து ஜெயம் ரவியுடன் ‘எங்கேயும் காதல்’, உதயநிதி ஸ்டாலினுடன் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, விஜய்யுடன் ‘வேலாயுதம்’, ‘புலி’, சூர்யாவுடன் ‘சிங்கம் 2’ எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா, தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான சோஹைல் கத்தூரியாவைக் காதலித்து வந்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மாதம் மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். இந்த விவாகரத்தின் போது ஹன்சிகா ஒரு ரூபாய் கூட ஜீவனாம்சம் வேண்டாம் என மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விவாகரத்து குறித்து முதன்முறையாக பேசியுள்ளார் ஹன்சிகா, அவர் கூறுகையில் “என் சொந்த வாழ்க்கை குறித்து ஊடகங்களில் கிளம்பும் வதந்திகளுக்கு நான் விளக்கம் அளிக்க விரும்பவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. தவறான ரயிலில் ஏறிவிட்ட பின் கஷ்டப்படுவதை விட அதில் இருந்து இறங்கிவிடுவது தான் சிறந்தது. அதனால் இது பரவாயில்லை. நான் வருத்தப்படவில்லை. எனது தாய் மற்றும் சகோதரர் என முழு குடும்பத்தின் ஆதரவு எனக்கு இருக்கிறது. தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என்று பதிலளித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.