கேப்டனின் பிளாக்பஸ்டர்: வல்லரசு வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவு!

தமிழ் சினிமாவில் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் விஜயகாந்த். ஆக்‌ஷன் ஹீரோக்களுக்குதனி இலக்கணம் வகுத்தவர் இவர். இவரது படங்களில் சண்டைகாட்சிகளில் மனிதர் வேறு லெவலில் பின்னியெடுப்பார்.குறிப்பாக விஜயகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்த படங்கள் என்றாலே ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். அந்த லிஸ்டில் வல்லரசு படமும் ஒன்று.

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் விஜய்காந்த் இரு வேடங்களில் நடித்து 2000-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் சக்கைப்போடு போட்ட குடும்பத் திரைப்படமான வானத்தை போல படத்திற்குப் பிறகு விஜயகாந்த் நடிப்பில் வெளியான அதிரடி திரைப்படம் தான் வல்லரசு. வானத்தை போல படத்தில் ஒரு சாதுவான, பாசமான அண்ணனாக அனைவரையும் கலங்க வைத்த விஜயகாந்த், அடுத்த சில மாதங்களிலேயே ஒரு முரட்டுத்தனமான நேர்மையான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருப்பார்.

வல்லரசு படம் கேப்டனின் சினிமா வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், ‘ராவுத்தர் பிலிம்ஸ்’ மூலம் அவரது பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவருமான இப்ராஹிம் ராவுத்தருக்கும், விஜயகாந்திற்கும் இடையே எதிர்பாராதவிதமாக மனக்கசப்பு ஏற்பட்டு நீண்ட கால நட்பு முறிந்தது. இந்தச் சூழலில் விஜயகாந்த், தனது மைத்துனர் எல்.கே.சுதீஷை முன்னிறுத்தி கேப்டன் சினி கிரியேஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்தப் புதிய நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மிகுந்த பொருட்செலவில் உருவான பிரம்மாண்டப் படைப்புதான் வல்லரசு.

அறிமுக இயக்குநர் மகாராஜன் இயக்கிய இந்தப் படத்தில் விஜயகாந்திற்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். இப்படத்தில் விஜயகாந்துடன் கரண், ஸ்ரீமன், ரகுவரன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல்ர் நடித்திருந்தனர். இயக்குனர் பி. வாசு இப்படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். வடிவேலு ஒரு பாடலில் மட்டும் நடித்திருப்பார்.

தேவாவின் இசையில் பாடல்கள் ஹிட்டாகின. வல்லரசு வெற்றிக்கு விஜயகாந்தின் அதிரடி நடிப்பும், பரபரபான திரைக்கதையும் பக்கபலமாக அமைந்தது. இப்படம் கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.