Jananayagan: எடிட்டரை குற்றம் சொல்ல வேண்டாம்; குற்றவாளியை போலீஸ் நெருங்கிவிட்டது! - ஃபெஃப்சி

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் படத்தின் ரிலீஸ் அப்போது தடைப்பட்டது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தது. இந்த விஷயம் படக்குழுவினர் உட்பட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

விஜய் - பூஜா ஹெக்டே| ஜனநாயகன்

ரிலீஸுக்கு முன்பே படம் கசிந்திருப்பதால், இதற்கு படத்தின் படத்தொகுப்பாளரே காரணம் என இணையத்தில் குற்றச்சாட்டு வைத்து பலர் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், எடிட்டர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

முதலில் படத்தொகுப்பாளர்கள் யூனியன் தலைவர் கோபி, “எங்கள் மீது வைக்கப்படுகிற நம்பிக்கைதான் இங்கே ரொம்ப முக்கியம். அதன் மூலமாகத்தான், அடுத்தடுத்த வாய்ப்புகள் எங்களுக்குக் கிடைக்கும்.

இந்தப் படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ் இதுவரைக்கும் 25-க்கும் மேற்பட்ட படங்கள் செய்திருக்கிறார். ஆனால், இந்தப் படத்துக்கு எப்படி இதுபோல் நடந்தது என யூகிக்க முடியாதபடி இருக்கிறது. ரீவொர்க் செய்யலாம் என்று எடுத்துக்கொண்ட வெர்ஷன்தான், இப்போது இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.

மற்றபடி, இதை எடிட்டர் செய்திருப்பார் என்று இணையத்தில் சில தகவல்கள் பேசப்படுகின்றன. ஆனால், அது உண்மை கிடையாது. எடிட்டரிடம் தெளிவான படத்தின் ப்ரின்ட் இருக்கும்.

அவர் நினைத்திருந்தால், அதையே வெளியிட்டிருக்கலாம். எதற்காக அவர் ‘எடிட்டர் ரெஃபரன்ஸ்’ எனக் குறிப்பிட்ட பதிப்பை கசியவிட வேண்டும்? இந்தத் தருணத்தில் எடிட்டரை காரணமாகச் சொல்வது தவறான விஷயம்” என்றார்.

பெப்ஸி தலைவர் ஆர்.கே செல்வமணி
பெப்ஸி தலைவர் ஆர்.கே செல்வமணி

இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “இயக்குநர் அமீர் அவருடைய கருத்தைச் சொல்ல நினைத்திருக்கிறார். ஆனால், அந்த விஷயம் தலைப்பாக வைத்து பகிரப்படும்போது, வேறு மாதிரி திரிந்துவிட்டது.

ஆனால், எடிட்டர்தான் காரணம் என்று சொல்வது அவரை மன உளைச்சல் ஆக்கியிருக்கிறது. போலீஸார் குற்றவாளியை நெருங்கிவிட்டார்கள். கூடிய விரைவில் பிடித்துவிடுவார்கள்.

ஆனால், அதற்கு முன்பே எடிட்டரை குற்றவாளியாக்கிப் பதிவிட வேண்டாம். அவருக்கென குடும்பம் இருக்கிறது. இப்படியான விஷயங்களால் அவருடைய குடும்பம் பாதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.