தாய் கிழவி- திரைவிமர்சனம்
பவனுதாயி என்கிற பெயரில் தாய் கிழவியாக ஊரில் வலம் வருபவர் ராதிகா. அங்குள்ளவர்களுக்கு வட்டிக்கு விட்டு மிரட்டி வட்டி வசூலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் கிழவி எப்போது இறக்கும் என ஊரே காத்திருக்கிறது.
ராதிகாவிற்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன்கள், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது. இன்னும் சில நாட்களில் ராதிகா இறந்து விடுவார் என்று ஊரே வந்து பார்த்துவிட்டு செல்கிறது.
அப்போது, ராதிகா 160 சவரன் சேர்த்து வைத்துள்ளதாக மகன்களுக்கு தெரியவருகிறது. பாசத்தால் இல்லாவிட்டாலும், நகை சொத்துக்காகவாவது தாய் ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என மெனக்கிடுகிறார்கள்.
இறுதியில் தாய் கிழவி உயிர் பிழைத்தாரா? அந்த 160 சவரன் நகை என்னவாயிற்று? என்பது படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
ராதிகா படத்தில் தாய் கிழவியாகவே வாழ்ந்திருக்கிறார். ஊரில் கடன் வாங்கியவர்களிடம் வட்டியை மிரட்டி வசூல் செய்யும் காட்சிகளிலும், அவருக்கான கதாப்பாத்திர காட்சிகளிலும் மிரள வைத்திருக்கிறார்.
ராதிகா மட்டுமில்லை பால சரவணன், அருள் தாஸ், சிங்கம்புலி இவர்களுடைய மகள்கள் என படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அசர வைத்துள்ளனர். கமல் ரசிகராக வரும் சிங்கம்புலி, அவர் போடும் பாடல்கள், இடைவேளை, கிளைமேக்ஸ் எல்லாம் சரவெடி.
இயக்கம்
தாய் கிழவி மூலம் பெண்ணியம், சம உரிமை என்று நமக்கு மிரட்டலான பாடம் எடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் கதைக்கரு முதல் கதாப்பாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் வரை சரியான தேர்வு. படத்திற்கு கூடுதல் பலம்.
பெண்கள் சும்மா இல்லாமல் எதாவது வேலை செய்ய வேண்டும்.. அது தான் உண்மையான சுதந்திரன் போன்ற வசனங்கள் அதிரவைத்துள்ளது. படம் முழுவதும் நகைச்சுவை, எமோஷ்னல் என அறிமுக படத்திலேயே சிக்ஸர் அடித்துள்ளார் இயக்குனர்.
மொத்தத்தில், குடும்பங்கள் கொண்டாடும் படம் இந்த தாய் கிழவி.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார் அப்படியே அந்த ஊர் மக்கள், இடம் , கலாச்சரம் என அனைத்தையும் கண்முன் கொண்டு வந்துள்ளார்.
இசை
நிவாஸ் கே பிரச்சன்னாவின் இசை படத்திற்கு கச்சிதம்.
ரேட்டிங்-4/5
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


