`சீரியலில் இருந்தும் தூக்கிட்டாங்க; ரியாலிட்டி ஷோவும் ரிஜெக்ட் பண்ணிடுச்சு! - பிக்பாஸ் தாமரை செல்வி

பிக்பாஸ் தமிழ் சீசன் 5-இல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டவர் தாமரைச் செல்வி. மேடை நாடகங்களில் நடித்து வந்தவர். நாடக ஏரியாவில் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. மேடைகளில் பாட்டுப் பாடி ஆடுகிறவர்களிலேயே அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் என்கிறார்கள்.

இந்த நிலையில் விஜய் டிவி பிக்பாஸ் 5-வது சீசனில் ஒரு போட்டியாளராக இவரைக் களம் இறக்கியது. நாடக மேடைகள் மட்டும் அறிந்திருந்த தாமரை இந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்தார்.

பிக்பாஸ் முடிவடைந்த பிறகு சீரியல் வாய்ப்பையும் வழங்கியது விஜய் டிவி. அதில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதாவது ஹீரோயின் அம்மாவாக நடித்து வந்தார். தவிர சினிமா முயற்சிகளையும் செய்து வந்தார்.

இந்தப் பின்னணியில் தற்போது சின்ன மருமகள் சீரியலில் அவருக்குப் பதில் வேறொரு நடிகை நடித்து வருவதை அறிந்து தாமரைச் செல்வியிடமே பேசினோம்.

`சின்ன மருமகள் சீரியல்

மேடை நாடகம்கிற ஒரு சின்ன வட்டத்துல சுத்திட்டிருந்த என்னை தமிழ் பேசற எல்லா மக்களுக்கும் தெரிய வச்சது விஜய் டிவிதான். பிக்பாஸ் நிகழ்ச்சியுமே எனக்கு நல்ல அனுபவத்தைத் தந்திச்சு. கொஞ்ச நாள்ல எவிக்ட் ஆகி வெளியில வந்துடுவேனு பலரும் நினைச்சிருக்காங்க. ஆனா 90 நாட்களூக்கும் மேல அங்க இருந்தேன்.

நிகழ்ச்சி முடிஞ்சு வெளியில வந்ததும், சீரியல் வாய்ப்பும் கொடுத்தாங்க.

சின்ன மருமகள் சீரியல் நல்லபடியாகத்தான் போயிட்டிருந்தது. எனக்கு அறிமுகம் கொடுத்து சோறு போட்ட நாடகத்தையும் விட முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னச் சின்ன ஈவென்டுகள், சினிமா வாய்ப்புகள் வந்தன. எல்லாத்தையும் பேலன்ஸ் செய்யற இடத்துல லேசா தடுமாறி ஒரேயொரு நாள் ஷூட்டிங் தேதி தரமுடியாமப் போயிடுச்சு.

அதுக்காக உடனே சீரியல்ல இருந்தே என்னைத் தூக்கிட்டு வேற ஆர்ட்டிஸ்ட்டைப் போட்டுட்டாங்க. வருத்தம்தான் ஆனாலும் என்ன பண்றது? அதனால இப்ப சினிமாவுல கவனம் செலுத்தலாம்னு முடிவு செய்திருக்கேன். ஒரு படம் முடிஞ்சிருக்கு. சீக்கிரமா அறிவிப்பு வரும் என்றவரிடம்,

ஜீ தமிழ் சேனலில் கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சியிலயும் நீங்க கலந்துக்கப் போறதா தகவல் வந்தது. ஆனா இப்ப ஷோ தொடங்கிடுச்சு, உங்களைக் காணோமே என்ற கேள்வியையும் வைத்தோம்.

பிக்பாஸ் தாமரை செல்வி

அதை ஏன் கேக்கறீங்க, அங்கயும் அவங்கதான் கூப்பிட்டாங்க. போனேன். நிகழ்ச்சி பத்திச் சொன்னாங்க. த்ரில்லிங்கா இருக்கும், கடல், மலைன்னெல்லாம் ஷூட்டிங் இருக்கும்னும் சொன்னாங்க. எல்லாத்துக்கும் நான் தயராக இருக்கேன்னுதான் சொன்னேன். சரி, போயிட்டு வாங்க, கூப்பிடுறோம்னு சொன்னாங்க. ஆனா என்ன நடந்ததுனு தெரியலை, திடீர்னு அடுத்த முறை பார்க்கலாம்னு சொல்லிட்டாங்க. அதனால அந்த நிகழ்ச்சியிலயும் நான் இல்ல என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.