`பராசக்தி வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி ரிலீஸ்.! - பாண்டியன் ஸ்டோர்ஸ் ரவிச்சந்திரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெட் ஜெயன்ட் வழங்கும் பராசக்தி ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் ஜனநாயகன் ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள்.
இதில் சில சென்சார் பிரச்னைகளும் உள்ளது அனைவரும் அறிந்ததே.
அரசியலில் தி.மு.க-வுக்கு எதிர் நிலைப்பாடு எடுத்துள்ள விஜய், சினிமாவில் தனது இடத்துக்கு அடுத்து `சிவகார்த்திகேயன் எனச் சுட்டிக்காட்டியதாக வெளியான படக் காட்சியையும் பார்த்திருப்போம்.
ஆனால் முதல்வர் குடும்பத்துக்குச் சொந்தமான ரெட் ஜெயன்ட் சிவகார்த்திகேயனை விஜய்யுடன் மோதவிட்டிருக்கிறது.
இந்தச் சூழலில் பராசக்தி வெளியாகும் அதே நாளில் மஹா சக்தி என்கிற குறும்படத்தை வெளியிட இருக்கிறார் சின்னத்திரை நடிகரும் பா.ஜ.க ஆதரவாளருமான பாண்டியன் ஸ்டோர்ஸ் ரவிச்சந்திரன். சனாதனக்கு எதிராகப் பேசினார் என கமல்ஹாசனைக் கடுமையாக விமர்சித்து, அது காவல் துறை புகார் வரை சென்றதே, அந்தப் பஞ்சாயத்துக்கு காரணமான அவரேதான். குறும்படம் வெளியாவது, ஹெச்.ராஜா நடிப்பில் வெளியான படம் ரிலீஸ் ஆனதே அதே தாமரை சேனலில்தானாம்.
என்னங்க இது என அவரிடமே கேட்டோம்.
ஏட்டிக்குப் போட்டி பண்றதெல்லாம் திமுக-காரங்க வேலை. நாங்க வரலாற்றுல என்ன நடந்ததோ அதை மட்டுமே சொல்வேம். இந்தி எதிர்ப்புங்கிற ஒரு வார்த்தையை வச்சுகிட்டு ஐம்பது வருஷத்துக்கும் மேலா தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக்கிட்டு இருக்கிறாங்க. இப்ப ஏ.ஐ., யுகம். இப்ப இந்த வாதமெல்லாம் எடுபடாது. இனி வரும் தேர்தல்களில் திமுக-வின் இந்தக் கோஷம் எடுபடாது.
அன்னைக்கு நடந்த போராட்டமும் உண்மையிலேயே மொழி மீது அக்கறை கொண்டு நடந்ததில்லை. மொழி வெறியை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தூண்டிவிட்டு, அந்த உணர்ச்சியை தங்களது அரசியலுக்குப் பயன்படுத்திக் கிட்டாங்க. கேட்டா, நாங்க இந்தியை எதிர்க்கலை, திணிப்பைத்தான் எதிர்க்குறோம்னு சப்பைக் கட்டு கட்டுவாங்க. எதுவும் அழுத்தமா பதிகிற மாணவப் பருவத்துல ஒரு மொழி மீது வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டுட்டு, பிறகு படிக்கறவங்க படிச்சுக்கட்டும்னு சொன்னா, யார்தான் அந்த மொழியைப் படிக்க ஆர்வம் காட்டுவாங்க?
தொண்டர்கள் மத்தியில நரம்பு புடைக்க இப்படிப் பேசற திமுக தலைவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் இந்தி படிக்கிறதை மட்டும் தடுக்கவே மாட்டாங்க. தயாநிதி மாறன், கனிமொழிக்கெல்லாம் இந்தி சரளமா வரும். அதைக் கேட்டா மழுப்புவாங்க.

இந்த வண்டவாளங்களையெல்லாம் புட்டு புட்டு வைக்கணும்னுதான் இப்படியொரு குறும்படம்.
இந்தி எதிர்ப்பு போராட்டம்கிற பேர்ல திமுக நடத்திய பித்தலாட்டங்களை மக்களுக்குப் படம் பிடிச்சுக் காட்டியிருக்கோம்.
இதுல நடிச்சிருக்கிற யாருமே நடிகர்கள் கிடையாது. பராசக்தி வெளியாகுற அதேநாள் படத்தை வெளியிடலாம்னு இருக்கோம்" என்கிறார் ரவிச்சந்திரன்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


