திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாத தரிசன விழா.. 2 கிமீ வரிசையில் நின்று தரிசித்த பக்தர்கள்..!

 

சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், பஞ்சபூதங்களில் நிலத்திற்குரிய தலமாகவும் போற்றப்படும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில், உலகப்புகழ் பெற்ற பாத தரிசன விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. 

 

ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே தியாகராஜரின் பாதங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இன்றைய திருவாதிரை திருவிழா பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விழாவையொட்டி தியாகராஜருக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்வு பக்திப் பரவசத்துடன் அரங்கேறியது.

 

இந்த அரிய காட்சியை காண்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே திருவாரூரில் குவிந்தனர். தியாகராஜரின் திருப்பாதங்களை தரிசித்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பக்தர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

 

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.