Madhuri Dixit: `சினிமா வேண்டாம்!’ - ஆப்பிள் நிறுவனத்தில் மாதுரி தீட்சித்தின் மகன்!

இந்தியத் திரையுலகின் `புன்னகை அரசி என்று வர்ணிக்கப்படுபவர் மாதுரி தீட்சித். நடிப்பைத் தாண்டி நவரசங்களையும் தன் கண்களிலேயே கடத்தும் அசாத்திய கலைஞர். தனது காந்தப் புன்னகையாலும், நளினமான நடன அசைவுகளாலும் 80 மற்றும் 90களின் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர், இன்றும் அதே வசீகரத்துடன் ஜொலிக்கிறார்.

நடனம் என்பது வெறும் அசைவு அல்ல, அது ஒரு மொழி என்பதை நிரூபித்தவர். தற்போதுகூட மாதுரி தீட்சித் நடிப்பில் கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் `மிஸஸ் தேஷ்பாண்டே வெளியாகியுள்ளது. அப்படிப்பட்டவரின் மூத்த மகன், தனது தாயின் வழியில் சினிமாவில் நடிக்க வராமல், தொழில்நுட்பத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் என்பதுதான் சமீபத்திய ட்ரெண்டிங் செய்தி.

மாதுரி தீட்சித்

மாதுரி தீட்சித் மற்றும் டாக்டர் ஸ்ரீராம் நேனேவின் மூத்த மகனான அரின் நேனே (Arin Nene), உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple) நிறுவனத்தில் `மெஷின் லேர்னிங் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக, `நாய்ஸ் கேன்சலேஷன் (Noise Cancellation) தொடர்பான திட்டங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக மாதுரி தீட்சித் தெரிவித்துள்ளார்.

ரியான், ஸ்ரீராம், மாதுரி, அரின்

அரின் நேனே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (USC) கணினி அறிவியல் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றுள்ளார். தொழில்நுட்பத்தில் மட்டுமன்றி, அரினுக்கு இசையிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. கல்லூரியில் படிக்கும்போதே இசையை ஒரு துணைப் பாடமாக எடுத்துப் படித்துள்ளார். அவர் சொந்தமாக இசையமைக்கவும் செய்கிறார். முன்னதாக, கரண் ஜோஹரின் Rocky Aur Rani Kii Prem Kahaani என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் சிறிது காலம் பணியாற்றி சினிமா அனுபவம் பெற்றுள்ளார். இருப்பினும், தனது முழுநேர பணியாக தொழில்நுட்பத் துறையையே தேர்ந்தெடுத்துள்ளார்.

ஸ்ரீராம், மாதுரி, அரின்

மாதுரியின் இளைய மகன் ரியானும் (Ryan) சினிமாவில் ஆர்வம் காட்டாமல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (STEM) சார்ந்த துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

சினிமா வாரிசுகள் பெரும்பாலும் சினிமா துறையையே தேர்ந்தெடுக்கும் சூழலில், மாதுரி தீட்சித்தின் மகன்கள் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் தங்களின் தனித்துவமான பாதையை அமைத்துக்கொண்டது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.