5-0.. இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிரணி! இது இந்திய அணியின் 3வது ஒயிட்வாஷ்..!
இலங்கைக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள இந்தியா, இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டியில், இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.
பின்னர் 176 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியில், தொடக்க வீராங்கனை ஹாசினி (65 ரன்கள்) மற்றும் இமேஷா துலானி (50 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தனர். இருப்பினும், மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த அபார வெற்றியின் மூலம், இந்திய அணி மூன்றாவது முறையாக ஒரு டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு 2019-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணியையும், 2024-ல் வங்கதேச அணியையும் இந்தியா ஒயிட்வாஷ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


