கடன் பிரச்சினையை தீர்க்கும் ஐந்து ரூபாய் பரிகாரம்
கடனால் வாழ்ந்தவர் என்று யாரும் இல்லை. கடனால் தாழ்ந்து ஒன்றும் இல்லாமல் போனவர்கள் தான் பலர் இருக்கிறார்கள். முடிந்த அளவிற்கு கடன் வாங்காமல் வருகின்ற வருமானத்திலேயே சமாளிக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் ஆசைப்படுவோம். இருப்பினும் நம்மை அறியாமல் அவசர சூழ்நிலைக்காக ஒரு முறை மட்டும் கடனை வாங்கி விட்டால் போதும். திரும்பத் திரும்ப ஏதாவது ரூபத்தில் கடனை வாங்க வேண்டிய ஒரு நிர்பந்தத்திற்கு நாம் ஆளாகி விடுவோம். அப்படிப்பட்ட கடனை திரும்ப வாங்காமல் இருப்பதற்கும் வாங்கிய கடனை திருப்பித் தருவதற்கும் செய்ய வேண்டிய ஐந்து ரூபாய் பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் பிரச்சனை ஏற்படுவதற்கு பலவிதமான காரணங்களை நாம் கூறலாம். அதிலும் குறிப்பாக கிரக நிலைகளை பொறுத்து கடன் பிரச்சினை என்பது உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கடன் பிரச்சினையை நீக்குவதற்கு கிரகங்களின் அடிப்படையிலேயும் அதேசமயம் பணவரவை அதிகரிப்பதற்கு மகாலட்சுமியின் அருளையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.
ஒருவருக்கு மகாலட்சுமியின் அருள் இருந்து விட்டால் பணவரவிற்கு எந்தவித தடைகளும் இருக்காது. பணம் தாராளமாக வந்துவிட்டால் அவர்களுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படாது. அதனால் மகாலட்சுமியை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி மகாலட்சுமியை வழிபாடு செய்வதற்கு முன்பாக நம்முடைய குலதெய்வத்தை நாம் வழிபாடு செய்ய வேண்டும். குலதெய்வத்தின் அருள் இருந்தால் தான் நமக்கு நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து ஒரு விடுதலை கிடைக்கும். மேலும் மகாலட்சுமியின் அருளையும் நம்மால் பெற முடியும்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு மண்பானை ஒன்று வேண்டும். இந்த மண்பானையை புதன்கிழமை அன்றுதான் வாங்க வேண்டும். புதன்கிழமை ஒரு மண் பானையை வாங்கி வந்து அதை தண்ணீரில் போட்டு வைத்து விடுங்கள். வியாழக்கிழமை அன்று காலையில் இந்த மண்பானையை தண்ணீரிலிருந்து எடுத்து ஒரு கிண்ணத்தில் மஞ்சளை போட்டு அதில் பன்னீரை ஊற்றி நன்றாக குழைத்து அதை அந்த மண்பானை முழுவதும் தடவி ஐந்து இடங்களில் தாழம்பூ குங்குமத்தால் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மண்பானையை பூஜையறையில் வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய கடைக்கு சென்று கல் உப்பை வாங்கி வந்து அந்த மண்பானை நிறைய கோபுரமாக கல்லுப்பை கொட்ட வேண்டும். பிறகு அந்த கல்லுப்பிற்குள் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு உள்ளே வைக்க வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக 18 வாரங்கள் வெள்ளிக்கிழமையில் ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் ஓர் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு அந்த உப்பிற்குள் வைத்து விட வேண்டும். உப்பை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. 18 வாரங்கள் நிறைவடைந்த பிறகு உப்பிற்குள் இருக்கக்கூடிய ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அடுத்ததாக பன்னீர், பால், மஞ்சள் தண்ணீர், சந்தன தண்ணீர் போன்றவற்றில் ஒவ்வொன்றாக போட்டு நன்றாக சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்து அதில் இந்த பதினெட்டு ஐந்து ரூபாய் நாணயங்களையும் வைத்து மூட்டையாக கட்டி, வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய குலதெய்வத்தின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். எப்பொழுது குலதெய்வ ஆலயத்திற்கு செல்கிறோமோ அப்பொழுது இந்த நாணயங்களை எடுத்துக்கொண்டு போய் குலதெய்வ உண்டியலில் சேர்த்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பணவரவு என்பது அதிகரிக்கும். மேலும் கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழிகளும் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: கேட்டதை கொடுக்கும் 999
எளிமையான இந்த ஐந்து ரூபாய் பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருளாலும் மகாலட்சுமியின் அருளாலும் செல்வ செழிப்பு என்பது உயரும் கடன் பிரச்சினை முற்றிலும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
The post கடன் பிரச்சினையை தீர்க்கும் ஐந்து ரூபாய் பரிகாரம் appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.