42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?
இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், ஆசிய கோப்பை 2025 தொடருக்கு தயாராகி வரும் நிலையில் கேரளா கிரிக்கெட் லீக் போட்டியில் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இதேபோல் அவர் ஆசிய கோப்பையிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், சாம்சன் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடினார். வெறும் 16 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடித்து அரை சதம் கடந்தார். சதத்தை நெருங்கியபோது மட்டும் சற்று நிதானமாக ஆடிய அவர், 14-வது ஓவரில் 42 பந்துகளில் சதம் அடித்து தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
சஞ்சு சாம்சன், வரவிருக்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். அணியில் அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய மேலும் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்கள் உள்ளனர். இது குறித்துபேசிய இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், "அபிஷேக் ஷர்மாவுடன் சஞ்சு சாம்சன் மற்றும் கில் இருவருமே சிறந்த தொடக்க வாய்ப்புகள்" என்று தெரிவித்தார்.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


