கமல் ஹீரோ.. ரஜினி வில்லன்.. மீண்டும் 80ஸ் சினிமாவை கொண்டு வரும் லோகேஷ்..

Rajni kamal movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியும் கமலும் 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்கிற செய்திதான் இன்று காலை முதலே தீயாக பரவி வருகிறது. கமலை வைத்து விக்ரம், ரஜினியை வைத்து கூலி ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் லோகேஷ். ஒருபக்கம் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற ஆர்வமும், ஆசையும் ரஜினி கமல் இருவருக்குமே இருக்கிறது. ஆனால் சரியான கதை, சரியான இயக்குனர் மற்றும் சரியான தயாரிப்பாளர் அமையாததால் அது நடக்கவில்லை.

ரஜினி சினிமாவில் நடிக்க வந்த புதிதில் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் கமலுடன்தான். அதில் கமல் ஹீரோவாக இருப்பார். ரஜினி வில்லனாக இருப்பார். அல்லது நண்பனாக இருப்பார். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பேசி முடிவெடுத்து தனியாக பயணிக்க துவங்கினார்கள். அது இப்போது வரை தொடர்கிறது.

‘ரஜினியும் கமலும் இணைந்து நடிக்க மாட்டார்களா?’ என்கிற ஏக்கமும், ஆசையும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் இருக்கிறது ஆனால் பல திறமையான இயக்குனர்கள் இருந்தும் அது நடக்கவில்லை. இதுபற்றிய கேள்விக்கு ‘பேசி வருகிறோம்.. கண்டிப்பாக செய்வோம்’ என ரஜினியும், கமலும் தொடர்ந்து பதில் சொல்லி வந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு கூட கமல் அளித்த பேட்டியில் ‘இதை ரஜினியும் என்னிடம் கேட்டார். ‘நீங்களும் நானும் இணைந்தால் அந்த படத்தை நான் தயாரிக்கிறேன் இல்லை நீங்கள் தயாரியுங்கள்.. இடையில் வேறு ஒருவர் வரக்கூடாது’ என சொன்னேன் என சொன்னார்.

அதேபோல் கூலிப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி ‘கூலி படத்தில் ஒரு கேமியா வேடத்தில் ஒரு நடிகர் நடிக்கவிருக்கிறார். நீங்கள் நம்ப மாட்டீர்கள்’ என லோகேஷ் என்னிடம் சொன்ன போது ‘உலக நாயகனை சம்மதிக்க வைத்து விட்டாரா என நினைத்து நான் மிதந்து கொண்டிருந்தேன். ஆனால் அது அமீர்கான் என லோகேஷ் சொன்னார்’ என பேசி இருந்தார். இந்நிலையில்தான் தற்போது ரஜினியும் கமலும் இணையும் படத்தை லோகேஷ் இயக்குவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதோடு சுமார் 700 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமும், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக சொல்லப்படுகிறது.

கூலி படத்திற்கு பின் கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார் லோகேஷ். ஆனால் வெளிவரும் செய்திகளை பார்க்கும்போது கமல் ரஜினி படத்தை முடித்துவிட்டுதான் லோகேஷ் கைதி 2 படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது. கூலிப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி ‘முதலில் லோகேஷ் என்னிடம் ஒரு கதை சொன்னார். முழுக்க முழுக்க வில்லன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அவர் சொன்ன அந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

lokesh
#image_title

ஏனெனில் வில்லன் கதாபாத்திரத்திற்கு கட்டுப்பாடுகளே கிடையாது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எனவே சந்தோஷத்தில் இருந்தேன். ஆனால் சில நாட்கள் கழித்து வந்து ‘அது பெரிய ஸ்கேல்.. பெரிய பட்ஜெட்.. நிறைய நடிகர்கள் நடிக்க வேண்டும்.. அது இப்போது சாத்தியமில்லை.. என்னிடம் வேறு கதை இருக்கிறது’ என சொல்லி கூலி கதையை சொன்னார்’ என பேசி இருந்தார்.

இந்நிலையில் ரஜினியிடம் லோகேஷ் முதலில் சொன்ன அந்த கதையைத்தான் இப்போது ரஜினி, கமலை வைத்து லோகேஷ் இயக்கவிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. இதை பார்க்கும்போது இந்த படத்தில் கமல் ஹீரோவாகவும், ரஜினி வில்லனாகவும் நடிப்பார்கள் என தெரிகிறது. இது மட்டும் நடந்தால் தமிழ் சினிமா ரசிர்களுக்கு ஒரு பெரிய விருந்து காத்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.