முதல் நாளே தெரியும் இந்த படம் கூடாதுன்னு.. இருந்தாலும் ஏன் நடிச்சேன்னா..? சரவணன் ஷேரிங்
பருத்திவீரன் படத்தின் மூலம் சித்தப்பு கேரக்டரால் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகர் சரவணன். ஆரம்ப கால கட்டங்களில் விஜயகாந்த் போல தோற்றத்தை கொண்டு இருந்ததால் தமிழ் சினிமா இவருக்கு குட்டி விஜயகாந்த் என்ற அடையாளத்தை கொடுத்தது. இதனால் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்தார். அதன் பிறகு ஹீரோவாக வெற்றி பெற முடியாமல் தொடர் தோல்விகளால் தடுமாறி வந்தார். என்னதான் விஜயகாந்த் மாதிரி இருந்தாலும் அவரைப் போல வெற்றி படங்கள் கொடுக்க முடியவில்லை.
முதல் ஐந்து படங்கள் பெரிய வெற்றி கொடுத்தாலும் அடுத்தடுத்து வந்த திரைப்படங்கள் சரவணனை அட்ரஸ் இல்லாமல் ஆக்கியது. ஒரு பேட்டியில் அவரே சொல்லி இருக்கிறார், ”நான் சினிமாவில் வெற்றி பெறாமல் போனதுக்கு காரணமே விஜயகாந்த் மாதிரி இருக்கிற என் உருவ அமைப்பு தான்” என்று. ஆரம்பத்தில் அது பாசிட்டிவாக இருந்தாலும் போகப்போக மிகப்பெரிய பின்னடைவாக சரவணனுக்கு அமைந்தது. இந்நிலையில் தனது 40 வது வயதில் கார்த்தியுடன் பருத்திவீரன் படத்தில் சித்தப்பு கேரக்டரில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.

கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொண்டாலும் இன்னும் மக்கள் மனதில் நிற்பது என்னவோ பருத்தி வீரன் சித்தப்பு கேரக்டர் தான். குணச்சித்திர கதாபாத்திரத்தில் பல திரைப்படங்களில் நடித்து தற்போது ”சட்டமும் நீதியும்” என்ற வெப் தொடரின் மூலம் மீண்டும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஹீரோவாக தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் சரவணன். இந்நிலையில் பேட்டி ஒன்றில், தான் நடித்த படம் மொக்கை, ஓடாதுன்னு தெரிந்தும் அதில் நடிச்சேன். என்று தன்னுடைய சுவாரசிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது,” எனக்கு முதல் நாளிலே தெரியும் இந்த படம் மொக்கையாக இருக்கும் கண்டிப்பாக ஓடாது என்று. இது எனக்கு நிச்சயமாக கேவலமான பெயரை வாங்கித் தரும். இதுல நீங்க ஏங்க நடிச்சீங்க அப்படின்னு பல பேர் என்கிட்ட கேப்பாங்கன்னு எனக்கு தெரியும். அப்படி இருந்தும் நான் பல படங்களில் நடிச்சிருக்கேன்”.
”நமக்கு தெரிஞ்சவங்க அண்ணே வாங்க அண்ணே.. தயவு செஞ்சு இந்த படத்துல நடிச்சு கொடுத்துட்டு போங்கன்னு கேப்பாங்க, அதை நாம தவிர்க்கவே முடியாது கதை நல்லா இல்ல, இதுல எனக்கு சரியான ரோல் இல்ல, என்று நாம் சொல்ல முடியாது. நல்ல நண்பர்களா இருப்பாங்க வேற வழி இல்லாம நடிச்சு கொடுத்துடுவேன். அந்த மாதிரி நிறைய படங்கள் நடந்திருக்கு”. தனக்கு விருப்பமே இல்லை என்றாலும் நண்பர்களுக்காக பல படங்களில் நடித்ததாக அந்த நேர்காணலில் கூறியுள்ளார் சரவணன்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


