Love Marriage Review: காமெடிக்கேற்ற களம், குடும்பங்களின் சங்கமம் - ஈர்க்கிறதா இந்தக் கல்யாண கலாட்டா?

33 வயதான ராமச்சந்திரனுக்கு (விக்ரம் பிரபு) திருமணம் கைகூடவில்லை. `இந்த வயதில் கண்டிப்பாக திருமணம் ஆகியிருக்க வேண்டுமே, `இவனுக்கு ராசியில்லை, `இவன்கிட்ட எதோ குறை இருக்கு எனச் சுற்றி இருப்பவர்கள் தரும் அழுத்தத்தில் எதாவது ஒரு பெண் கிடைத்துவிட்டால் போதும் என இருக்கிறார்.

வயது, தொழில் எனப் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிப்புகளைச் சந்திக்கும் அவருக்கு இறுதியாக ஒரு வரன் அமைகிறது. சாதி விட்டு, ஊர் விட்டு கிடைக்கும் அந்த வரனுக்கு அவரும் சம்மதிக்கிறார். அம்பிகா (சுஷ்மிதா பட்) என்னும் அந்தப் பெண்ணை நிச்சயம் செய்ய மதுரையிலிருந்து கோபிசெட்டிபாளையம் செல்லும் அவரது குடும்பத்தினர், கொரோனா ஊரடங்கால் அங்கேயே சில வாரங்கள் தங்க வேண்டியதாகிவிடுகிறது. அப்படி அங்கே இருக்கும்போது சொந்தங்களால் ஏற்படும் குழப்பங்களும், பிற சிக்கல்களும் விக்ரம் பிரபுவின் திருமணக் கனவுக்கு முட்டுக்கட்டையாக வந்து நிற்க, இறுதியில் என்ன ஆனது என்பதே இந்த லவ் மேரேஜின் கதை!

லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage Review

அசோக வனமுலு அர்ஜுன கல்யாணம் என்ற தெலுங்குப் படத்தை சிற்சில மாற்றங்களுடன் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். சுவாரஸ்யமான ஒன்லைனை வைத்து நல்லதொரு பீல் குட் டிராமாவை உருவாக்க முயன்றிருக்கும் அறிமுக இயக்குநர் சண்முகப்பிரியன், அதில் பாதி கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறார். லாக்டௌனின்போது கொங்கு வட்டாரப் பெண் வீட்டாரிடம் மதுரையைச் சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார் சிக்கிக்கொள்ளும் களம் காமெடியில் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. விதவிதமான கதாபாத்திரங்களை அந்தச் சூழலில் உலாவவிட்டு நம்மைச் சிரிக்க வைக்கிறார்கள். அதே சமயம், நம் சமூகத்தில் திருமணம் என்னவாக இருக்கிறது, அதிலிருக்கும் பிரச்னைகள் என்ன என்பதையும் சீரியஸாகப் பேசுகிறது படம்.

திருமணக் கனவுடன் தவிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாகப் பொருந்திப் போகிறார் விக்ரம் பிரபு. பெரிதாக வசனங்கள் எதுவுமில்லாமல் உணர்வுகளை உடல்மொழியிலேயே கடத்த வேண்டிய மணப்பெண்ணாக அறிமுக நாயகி சுஷ்மிதா பட் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சுஷ்மிதாவின் தங்கையாக வரும் மீனாட்சி தினேஷ், துறுதுறுப்பான உற்சாகமான பாத்திரத்தில் முத்திரை பதிக்கிறார். கஜராஜ், ரமேஷ் திலக், வடிவேலு, அருள்தாஸ் எனத் துணைக் கதாபாத்திரங்களில் பலரும் நடித்திருக்கிறார்கள். இதில் அருள்தாஸ் மட்டுமே தனித்து நிற்கிறார். இரண்டாம் பாதியில் வரும் சத்யராஜின் கேமியோ பெரிதாக எடுபடவில்லை. ஆனால், மற்றொரு நடிகரின் கேமியோ ஓகே!

லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage Review
லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage Review

சுவாரஸ்யமாகத் தொடங்கும் படம், யூகிக்கக்கூடிய திரைக்கதையால் ஊரடங்குப் போட்டது போல அவ்வப்போது ஒரே இடத்தில் முடங்கிவிடுகிறது. காட்சிக்குக் காட்சி படத்தின் தொனி மாறிக்கொண்டே இருப்பதும் நம்மைக் குழப்புகிறது. ஒரு சீரியஸ் காட்சி திடீரென காமெடியாக மாற, காமெடியாகத் தொடங்கும் காட்சி திடீரென மெசேஜ் சொல்லும் காட்சியாக மாறிவிடுகிறது. இந்த மாறுதல்கள், நம்மைக் கதாபாத்திரங்களின் உணர்வுகளுடன் ஒட்டவிடாமல் விலக்கி வைக்கிறது. ஊரடங்கு என்கிறார்கள், ஆனால் மார்க்கெட்டில் கூட்டத்துக்கு நடுவில் திடீரென ஃபைட் செய்கிறார் விக்ரம் பிரபு. இப்படி இது என்ன பாஸ் லாஜிக் என நம்மை சில இடங்களில் கேள்விகேட்கவும் வைக்கிறார்கள். கதையையும் சில ட்விஸ்ட்களையும் தாண்டி எழுத்தில் கூடுதல் நேரம் செலவழித்திருந்தால் சுவாரஸ்ய களம், சுவாரஸ்ய படமாகவும் நம்மை சீட்டில் கட்டிப்போட்டிருக்கும்.

தொழில்நுட்பரீதியாக எந்தக் குறையும் வைக்கவில்லை படக்குழு. பெரும்பாலும் ஒரே வீட்டில் நடக்கும் படத்தைச் சுவாரஸ்யப்படுத்தியிருப்பது ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர் - கலை இயக்குநர் முரளி கூட்டணியின் உழைப்புதான். பரத் விக்ரமனின் எடிட்டிங்கும் சிறப்பு. சமீபகாலங்களில் இதே போன்ற படங்களுக்கு இசையமைத்ததாலோ என்னவோ ஷான் ரோல்டனின் பாடல்கள் தனித்து மனதில் நிற்கவில்லை. மீண்டும் பிறந்தேனோ பாடல் தவிர, மற்றவை சம்பிரதாயமாகவே வந்துபோகின்றன. மற்றபடி, சிறப்பான பின்னணி இசையால் காட்சிகளைத் தாங்குகிறார். ஆனால், அதுவே சில நேரங்களில் ஓவர்டோஸும் ஆகிவிடுகிறது.

லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage Review
லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage Review
எழுத்தின் போதாமைகளை அவ்வப்போது காமெடிக் காட்சிகள் மறைத்தாலும், இந்த `லவ் மேரேஜில் பரிமாறப்பட்டிருக்கும் விருந்தில் முழுத் திருப்தியில்லை.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.