படங்களை உருவாக்குவதை விட கடினம்; அவமானகரமாகவும் இருந்திருக்கிறது! - உரியடி தயாரிப்பாளர் சமீர்!

நல்ல கண்டென்ட்களைக் கொண்ட சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகளில் சரியான வரவேற்பு கிடைப்பதில்லை.

அப்படியான படங்களுக்கு வணிக ரீதியான பிசினஸும் இங்கு மிகவும் கடினமாக இருக்கிறது என்று பல தயாரிப்பாளர்கள் கடந்த சில வருடங்களாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

Producer Sameer Bharath Ram

இப்படியான நிலைமை பல சுயாதீன தயாரிப்பாளர்களுக்கு பல சவால்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது எனவும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

இப்படியான பிரச்னைகள் குறித்து, சுயாதீன தயாரிப்பாளராக இருந்து உரியடி, முதல் நீ முடிவும் நீ, கடைசி விவசாயி ஆகிய படங்களை தயாரித்த சமீர் பரத் ராம் பதிவிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் தயாரிப்பாளர் சமீர் பரத் ராம், "பலர் என்னிடம் ஒரு சுயாதீன தயாரிப்பாளராக உங்கள் படங்களை எப்படி இவ்வளவு எளிதாக விற்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

அதற்கு நான் புன்னகைக்கிறேன். ஏனென்றால், அது எளிதல்ல என்பதுதான் உண்மை. இதைப் பற்றி நான் பொதுவெளியில் பேசியதில்லை.

நான் பேட்டிகள் கொடுப்பதில்லை. வட்டமேசை கலந்துரையாடல்களுக்கு என்னை அழைப்பதில்லை. எங்கள் பட வெளியீடுகளிலோ, பத்திரிகையாளர் சந்திப்புகளிலோ கூட நான் அரிதாகவே பேசுவேன். ஆனால் இன்று, இதை எழுத வேண்டும் என்று தோன்றியது.

Uriyadi Movie
Uriyadi Movie

உண்மையைச் சொல்வதானால், நாங்கள் உருவாக்கும் படங்களை விற்பது மிகவும் கடினமானது. அது வலி மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. சில சமயங்களில், படங்களை உருவாக்குவதை விட இது கடினமாக இருக்கிறது.

சில நேரங்களில், இது அவமானகரமாகவும் இருந்திருக்கிறது. என்னுடைய முதல் படத்திலிருந்தே இப்படித்தான் நடந்து வருகிறது. அது நேர்மையான, உணர்ச்சி நிறைந்த ஒரு படைப்பு.

விமர்சகர்கள் அதைப் பாராட்டினர். அதைப் பார்த்த பார்வையாளர்கள் அதை அரவணைத்தனர். ஆனால் யாரும் அதை வாங்க விரும்பவில்லை. என்னை நானே சந்தேகிக்க ஆரம்பித்தேன்.

அந்தப் படம் பைரசியில் அதிகமாகப் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியது. மக்கள் அதைப் பார்க்க எவ்வளவு ஆவலாக இருந்தார்கள் என்பதை இது காட்டுகிறது.

ஆனால், அதை சரியான வழியில் மக்களிடம் கொண்டு சேர்க்க வர்த்தகத்தில் உள்ளவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பது என் இதயத்தை உடைத்தது.

என்னுடைய மற்றொரு படத்தை சிலர் மிகவும் ஆவணப்படம் போல இருக்கிறது. கமர்ஷியலாக இல்லை. என்று கூறினர். ஆனால் அது ஆழமான, வேரூன்றிய, முக்கியமான ஒரு படைப்பு. இருந்தாலும், அதை கவனிக்க வைக்க நாங்கள் போராட வேண்டியிருந்தது.

A note from an indie producer #Hope #Cinema pic.twitter.com/vBB9h2RwMp

— sameer Bharat ram (@sameerbr) June 9, 2025

பின்னர் மற்றொரு படம் வந்தது. இந்த முறை வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நிராகரிப்பு இன்னும் மோசமாக இருந்தது.

ஒரு மரியாதைக்குரிய தயாரிப்பு நிறுவனம், அதை வெட்டி, ஒரு தொலைக்காட்சி தொடராக விற்கச் சொன்னது. இந்தத் துறையில் சுயாதீன தயாரிப்பாளர்களுக்கு இடம் இருக்க வேண்டும் என்று நான் ஆழமாக நம்புகிறேன். பெரிய நட்சத்திரங்கள் இல்லாத, ஆனால் நல்ல குரல்களுக்கு இடம் இருக்க வேண்டும்.

நாங்கள் நல்ல படங்களை உருவாக்குகிறோம். இதை நான் பெருமையின்றி, உறுதியுடன் கூறுகிறேன். அவை நீண்ட காலம் நிலைத்திருக்கும் படங்கள். மக்கள் மீண்டும் மீண்டும் பார்க்கும் படங்கள். இவை வாங்குவதற்கு விலை உயர்ந்தவை அல்ல. இவை முதலீட்டுக்கு லாபம் தருகின்றன." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.