விஜயகாந்துக்கு விருது கொடுத்தது எனக்கு பிடிக்கல!.. கோபத்தில் பொங்கும் கேப்டனின் நண்பர்!..

Vijayakanth: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்தவர் விஜயகாந்த். கமல், ரஜினி, மோகன் போன்ற நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம் கருப்பு சிங்கமாய் சினிமாவில் நுழைந்து வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். எம்.ஜி.ஆர் பாணியில் துவக்கம் முதலே ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்தவர் இவர்.

துவக்கத்தில் சில தோல்விப்படங்களை கொடுத்தாலும் ஒருகட்டத்தில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார். அதிகமான படங்களில் போலீஸ் அதிகாரியாகவே நடித்திருக்கிறார். நடிகர் என்பதை விட மனிதாபிமானம் மிக்க ஒரு மனிதராகவே விஜயகாந்த் மக்களால் பார்க்கப்பட்டார். தன்னால் முடிந்தவரைக்கும் மற்றவர்களுக்கு உதவுவது, மற்றவர்களின் பிரச்சனையை தன்னுடைய பிரச்சனையாக கருதி அதை தீர்த்து வைப்பது, பசியோடு வருபவர்களுக்கு சாப்பாடு போடுவது என அவர் செய்த தர்மங்கள் ஏராளம்.


அதனால்தான் அவர் மறைந்தபோது அவரின் இறுதி ஊர்வலத்தில் அத்தனை லட்சம் பேர் கலந்துகொண்டனர். வீட்டின் மேலே இருந்தும், பாலங்களில் இருந்தும் அவரின் உடல் மீது பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் என்பதை விட நல்ல மனிதர் என்கிற இமேஜைத்தான் விஜயகாந்த் உருவாக்கிவிட்டு போயிருக்கிறார்.

அதிலும், சினிமாவில் விஜயகாந்த் போல ஒரு நல்ல மனிதரை பார்க்கவே முடியாது. சாப்பாட்டில் கூட வேறுபாடு காட்டிய திரையுலகில் முதன் முதலில் படப்பிடிப்பில் எல்லோருக்கும் ஒரே சாப்பாடு, அதுவும் கறி சாப்பாட்டை இலையில் போட்டவர் விஜயகாந்த். திரையுலகில் பலரின் வாழ்க்கை விஜயகாந்தால் மாறியிருக்கிறது. அவரின் மறைவுக்கு பின் அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவரும், விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமானவருமான வசனகர்த்தா லியாகத் அலிகான் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷன் விருது கொடுத்துவிட்டு விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கொடுத்திருக்கிறார்கள். பத்மபூஷனை விட பத்மவிபூஷன் விருது பெரியது. அதை சிரஞ்சீவிக்கு கொடுத்திருக்கிறார்கள். நான் சிரஞ்சீவியை குறை சொல்லவில்லை?.. ஆனால், அவர் அரசியல் கட்சி துவங்கி தோற்றுப்போனவர். விஜயகாந்த் அரசியலில் வெற்றி பெற்றவர்.

விஜயகாந்த் எந்த விதத்தில் சிரஞ்சீவியை விட குறைந்து போய்விட்டார்?. விஜயகாந்த் எவ்வளவு பேரை இலவசமாக படிக்க வைத்திருக்கிறார்.. அவரால் பல இன்ஜினியர்களும், டாக்டர்களும் உருவாகியிருக்கிறார்கள். பலருக்கும் சாப்பாடு போட்டு பசியை போக்கி இருக்கிறார். பல புதிய தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் உருவாக்கியிருக்கிறார். அவருக்கு பத்மவிபூஷன் விருது கொடுத்திருக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு’ என பொங்கியிருக்கிறார்.

லியாகத் அலிகான் விஜயகாந்தை வைத்து பாட்டுக்கு ஒரு தலைவன், ஏழை ஜாதி, எங்க முதலாளி போன்ற படங்களை இயக்கியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.