உன் அசிஸ்டண்ட பெரிய டைரக்டர் ஆக்கி காட்டுறேன்!.. இயக்குனரிடம் சவால் விட்டு ஜெயித்த அஜித்!..
திரையுலகில் ஒருவருக்கு வளர்ச்சி என்பது யாரால் அமையும் எப்போது அது நடக்கும் என சொல்லவே முடியாது. திடீரென ஒருவர் மேலே வந்துவிடுவார். மேலே இருக்கும் ஒருவர் கீழே போய்விடுவார். சினிமாவில் ஒரு இயக்குனரின் வளர்ச்சி என்பது பெரும்பாலும் தயாரிப்பாளரால் அமையும். ஏனெனில், ஒரு படம் கூட பண்ணாத அறிமுக இயக்குனரை நம்பி பணம் போட ஒரு தயாரிப்பாளர் இருக்க வேண்டும்.
ஆர்.பி.சவுத்ரியெல்லாம் அப்படி பல இயக்குனர்களை உருவாக்கியிருந்தார். சில இயக்குனர்களை நடிகர்கள் உருவாக்குவார்கள். ரஜினி, அஜித், விஜய் போன்றவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இயக்குனர் ஆக்க முடியும். ஏனெனில், அவர்கள் சொல்கிறவர்களே இயக்குனர்கள். தயாரிப்பாளரால் மறுக்க முடியாது. சில நடிகர்கள் கோபத்தில் சில இயக்குனர்களை உருவாக்குவார்கள்.

அப்படி அஜித் உருவாக்கிய ஒரு இயக்குனர் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்தவர் வஸந்த். கேளடி கண்மணி என்கிற படம் மூலம் சினிமாவில் இயக்குனராக மாறினார். வஸந்த் இயக்கத்தில் அஜித் நடித்த படம்தான் ஆசை. இந்த படத்தில் சில நேரம் அஜித்தை வசந்த் அசிங்கப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
அடுத்து விஜய் – அஜித் இருவரையும் வைத்து நேருக்கு நேர் படத்தை வஸந்த் துவங்கினார். இந்த படத்தில் சில நாட்கள் அஜித்தும் நடித்தார். ஆனால், வஸந்துக்கும் அவருக்கும் செட் ஆகவில்லை. எனவே, படத்திலிருந்து வெளியேறிவிட்டார். இதனால் கோபமடைந்த வஸந்த் ‘ஒரு புதுமுக நடிகரை நடிக்க வைத்து படத்தை ஹிட் ஆக்கி காட்டுகிறேன்’ என சொல்லி சூர்யாவை இந்த படத்தில் அறிமுகம் செய்தார்.

அஜித்துக்கும் ஈகோ விடவில்லை ‘உன்னுடைய உதவியாளர் ஒருவனை உன்னை விட பெரிய இயக்குனர் ஆக்கி காட்டுகிறேன்’ என நினைத்து ஆசை படத்தில் வேலை செய்த எஸ்.ஜே.சூர்யாவை அழைத்து ஒரு கதையை உருவாக்க சொன்னார். அப்படி உருவான படம்தான் வாலி. வாலி படம் சூப்பர் ஹிட். எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒரு படம் கொடுத்து அவரை அறிமுகம் செய்ததோடு, அவருக்கு கார் கூட வாங்கி கொடுத்தார் அஜித்.
அடுத்து விஜயை வைத்து குஷி எடுத்தார் எஸ்.ஜே.சூர்யா. அந்த படமும் சூப்பர் ஹிட். அதன்பின் சில படங்களை அவரே இயக்கி நடித்தார். இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார். வஸந்த் ஹிட் படம் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது அவர் படங்களை இயக்குவதும் இல்லை. ஆனால், எஸ்.ஜே.சூர்யா வேற ரேஞ்சில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
