Champions Trophy: ஆனால் ஒரு கண்டிஷன் - வீரர்கள் குடும்பத்தினரை அழைத்துவர BCCI விதித்த நிபந்தனை?

பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக துபாய் செல்கிறது இந்திய அணி. (இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்ப பிசிசிஐ மறுத்ததால் இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்.)

இந்த தொடருக்காக பயணம் செய்யும் வீரர்கள் தங்களது மனைவிகளையும் உடன் அழைத்துச் செல்ல பிசிசிஐ அனுமதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பார்டர் கவாஸ்கர் கோப்பை தோல்விக்குப் பிறகு, இந்திய அணி வீரர்களுக்கான விதிமுறைகளை மாற்றி 10 கட்டளைகளை வெளியிட்டது பிசிசிஐ. அதில் குடும்பத்தினர் உடன் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனக் கூறப்பட்டதுடன் அதற்கான காரணங்களையும் விளக்கியிருந்தனர்.

BCCI

தற்போது குடும்பத்தினர் உடன் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Dainik Jagran என்ற இந்தி ஊடகத்தின் அறிக்கையின்படி, அணி வீரர்கள் தங்களது குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டாலும், அதற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த நிபந்தனை என்னவென்றால் வீரர்கள் தொடர் முழுவதும் தங்களது குடும்பத்தினருடன் இருக்க முடியாது. ஒரே ஒரு போட்டியில் மட்டும் அவர்கள் துணையிருக்கலாம். அதற்காக வீரர்கள் தங்களுக்குள் கலந்துரையாடி பிசிசிஐயிடம் விண்ணப்பிக்கலாம். அதற்கு ஏற்றவாறு வாரியம் ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.

முன்னதாக, விரர்களின் தனிப்பட்ட ஊழியர்கள் மற்றும் வணிக படபிடிப்புகளுக்கு கட்டுப்பாடு விதித்த பிசிசிஐ, 45 நாட்களுக்கு மேல் நடக்கும் வெளிநாட்டு பயணத்தில் 2 வாரங்கள் மட்டுமே குடும்பத்தினர் தங்க அனுமதி எனக் கூறியிருந்தது.

ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடர்போன்ற குறைந்த நாட்கள் பயணத்துக்கு குடும்பத்தினர் உடன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனினும் தொடரின் தன்மையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு வீரரும் ஒரு போட்டிக்கு குடும்பத்தினரை உடன் அழைத்துவர பிசிசிஐ அனுமதித்திருக்கிறது. எந்த போட்டியில் வீரர்கள் குடும்பத்தினரை அழைத்து வரலாம் என்பது குறித்து கூறப்படவில்லை.

Champions Trophy

கொடுக்கப்பட்ட விதிமுறைகளைத் தாண்டும் எந்த செயல்பாட்டுக்கும் வீரர்கள் தேர்வுக்குழு தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளரின் முன்னனுமதியைப் பெற வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியில் பிப்ரவரி 20ம் தேதி இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 23ம் தேதி பாகிஸ்தான் மற்றும் மார்ச் 2ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.