BBC : இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனைகள்... விருது வழங்கி கௌரவித்த பிபிசி!

பிரபல ஆங்கில ஊடகமான பிபிசி, 2024-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருது வழங்கியிருக்கிறது.

இந்தியாவின் சிறந்த விளையாட்டு விராங்கனை மனு பாக்கர்

சிறந்த மாற்றுத்திறன் விளையாட்டு வீராங்கனை அவ்னி லேகரா

சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனை ஷீத்தல் தேவி

வாழ்நாள் சாதனையாளர் மிதாலி ராஜ்

மனு பாக்கர்

உலகளாவிய பொது வாக்கெடுப்பை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு (ISWOTY) ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றதன் மூலம், ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார். மனு பாக்கர் முன்னதாக பிபிசியின் சிறந்த வளரும் வீராங்கனையாக 2021-ல் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

பாரா துப்பாக்கிச் சுடுதலில் படைத்த வரலாற்று சாதனைக்காக அவ்னி லேகராவிற்கு இந்த ஆண்டுக்கான பிபிசி பாரா-விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது. 2020 டோக்கியோவில் தங்கம் மற்றும் வெண்கலம் மற்றும் 2024 பாரிஸில் தங்கம் என பாராலிம்பிக்கில் மூன்று பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான்.

அவ்னி லேகரா

டெல்லியில் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்திய பிபிசி டைரக்டர் ஜெனரல் டிம் டேவி, "மனு பாக்கரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒலிம்பிக் சாதனை இந்திய விளையாட்டில் தீர்க்கமான தருணம். திறமை வாய்ந்த இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்பதிலிருந்து சாதனை படைத்த ஒலிம்பிக் வீராங்கனை வரையான அவரது பயணம் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களை மட்டுமல்லாது அதற்கு அப்பால் உள்ளவர்களையும் ஊக்குவிக்கிறது. அவ்னி லேகராவை ஆண்டின் சிறந்த பாரா-விளையட்டு வீராங்கனையாக கொண்டாடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அவரது நெஞ்சுரமும், சாதனைகளை தகர்த்த வெற்றியும், மேலும் அதிகம் பேரை உள்ளடக்கி, பாரா விளையாட்டுகளில் மேன்மையை அடைவதற்கான பாதையை வகுக்கிறது." என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், “இந்தியாவில் உள்ள பார்வையாளர்களுக்கான பிபிசியின் அர்ப்பணிப்பு, நமது உறவை தனிச் சிறப்புடையதாக்குகிறது. அற்புத ஆற்றல் பெற்ற இந்தியா விளையாட்டு வீராங்கனைகளின் சாதனைகளை கொண்டாடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ” என்று குறிப்பிட்டார்.

பிபிசியின் சிறந்த வளரும் விளையாட்டு வீராங்கனைக்கான விருது, மிக இளம் வயதில் பாராலிம்பிக் பதக்கம் பெற்ற இந்திய வீராங்கனை என்ற புதிய மைல்கல்லை எட்டிய 18 வயதான ஷீத்தல் தேவிக்கு வழங்கப்படுகிறது. மூன்றே ஆண்டுகளில், 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம், 2022 ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.

ஷீத்தல் தேவி

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமாக இந்திய மகளிர் கிரிகெட் அணிக்கு 2004 முதல் 2022 வரை 18 ஆண்டு காலம் விளையாடி கேப்டனாக இருந்த மிதாலி ராஜுக்கு பிபிசியின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

துளசிமதி முருகேசன்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீரரான துளசிமதி முருகேசன் பிபிசியின் இந்திய வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழாவில், பிபிசி நட்சத்திர வீராங்கனை விருது வழங்கப்பட்டிருக்கிறது.

பிபிசியின் ஐந்தாவது சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான விருது (ISWOTY) வழங்கும் நிகழ்ச்சியை தி கலெக்டிவ் நியூஸ்ரூம் நடத்தியது.

கலெக்டிங் நியூஸ்ரூமின் தலைமை செயல் அதிகாரி ரூபா ஜா, “இந்திய விளையாட்டுத் துறையில் இருக்கும் பெண்கள் மீது இந்த விருதின் தாக்கத்தை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விருது அவர்களின் சாதனைகளை எடுத்துக்காட்டி, தடைகளை தகர்த்து, எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்த விருதுகள் அங்கீகாரம் அளிப்பதற்கானது மட்டுமல்ல, மாறாக இந்திய விளையாட்டுத்துறை மற்றும் அதைத் தாண்டியும் நீடித்து நிலைக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்குமானது. ” என்று கூறினார்.

பிபிசி - இந்திரா காந்தி

இந்த ஆண்டின் கருப்பொருளான சாம்பியன்களின் சாம்பியன் என்பது, பதக்கம் வெல்லும் வீராங்கனைகளை ஆதரித்து அவர்களை செதுக்கிய, வெளியே தெரியாத நாயகர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. பார்வை மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வழிகாட்டியாக களத்தில் ஓடும் வழிகாட்டி வீரர்களை பற்றிய சிறப்பு ஆவணப்படம் பிபிசியின் 6 இந்திய மொழிகளின் இணையதளத்திலும், ஆங்கில இணையதளத்திலும் காணக் கிடைக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.