Champions Trophy: ராகுலுக்கா, பண்ட்டுக்கா? -விக்கெட் கீப்பர் ஸ்லாட் விவகாரத்தில் கம்பீர் ஓப்பன் டாக்

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கவிருக்கிறது. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் நடத்தும் இந்தத் தொடர் ஹைபிரிட் மாடலில், பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும்) நடைபெறும். இதற்கான, 8 அணிகளின் வீரர்களின் பட்டியலும் வெளியாகிவிட்டது. இதில், இந்திய அணியில் முதற்கட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த பும்ரா, ஜெய்ஸ்வால் ஆகியோர் நீக்கப்பட்டு ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இறுதிப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

ராகுல், பண்ட்

இவ்வாறிருக்க, நேற்றோடு நடந்து முடிந்த இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விக்கெட் கீப்பராக அணியில் இருந்த கே.எல்.ராகுல், முதல் இரண்டு ஆட்டங்களில் 6-வது இடத்தில் களமிறக்கப்பட்டது விவாதப்பொருளானது. இதனால், அணியில் ராகுல் ஓரங்கட்டப்படுவதாகவும், சாம்பியன்ஸ் டிராபியில் பிளெயிங் லெவனில் இவரை உட்கார வைத்துவிட்டு ரிஷப் பண்டை களமிறக்கப்போவதாகவும் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் விமர்சித்தனர். இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், சாம்பியன்ஸ் டிராபி பிளெயிங் லெவனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடம் யாருக்கு என்பது குறித்து விளக்கமளித்திருக்கிறார்.

இங்கிலாந்துக்கெதிரான தொடர் முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கம்பீர், ``தனிநபர்களைப் பற்றி பேசுவது மிகவும் கடினம். இருப்பினும், அவருக்கான (பண்ட்) நேரம் வரும்போது, வாய்ப்பு கிடைக்கும்போது அணியில் இடம்பிடிப்பார் என்று என்னால் கூற முடியும். ஆனால், இப்போதைக்கு விக்கெட் கீப்பர் இடத்துக்கு ராகுல்தான் நம்பர் ஓன் சாய்ஸ்.

கம்பீர் - ராகுல்

அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்களை நீங்கள் பெற்றிருக்கும்போது அவர்கள் இருவரையும் அதே தரத்துடன் நீங்கள் விளையாட வைக்க முடியாது. எனவே, பண்ட் வாய்ப்பு கிடைக்கும்போது அதற்குத் தயாராக இருக்க வேண்டும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். நாங்கள், ராகுல்தான் விளையாடப் போகிறார்." என்று கூறினார்.

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் பிளெயிங் லெவனில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்பது பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடவும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.