`18வது ஃப்ளோர்; எனக்கு அவளும், அவளுக்கு நானும் கொடுத்த ஒரே கிஃப்ட்’ - அருண், திவ்யாவின் லவ்வர்ஸ் டே!
இன்னும் நான்கே நாட்களில் களை கட்ட இருக்கிறது காதலர் தினம்.
உனக்கு கிப்ஃட் நான்; எனக்கு கிடைச்ச பரிசு நீ என்ற மொக்கை டயலாக்கை எடுத்து விட்டால், இப்போதெல்லாம்., காதலர் தினம் காதலர் தினமாக இருக்காதென்பதால், உண்மையச் சொல்லுங்க, இந்தக் காதலர் தினத்துக்கு என்ன கிஃப்ட் தர்றதா இருக்கீங்க என காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகர் அருணிடம் கேட்டோம்.
அம்மாக்கள் தினம், தந்தையர் தினம், பெண்கள் தினம்னெல்லாம் சொல்லி செலிபிரேட் செய்றதுல அவ்வளவா ஆர்வம் காட்டமாட்டேன் நான். ஏன்னு தெரியலை, அதுல ஒரு செயற்கைத்தனம் இருக்கறதா நினைக்கத் தோணுது. வெளிநாட்டுக் கலாச்சாரம் ப்ளஸ் இப்பெல்லாம் இதுல பிசினஸ் டெக்னிக் இருக்கு. செலிபிரேஷன்கிறது ஆத்மார்த்தமானதா இருக்கணும்னு நினைக்கிறேன்.
இதுல ஒரேயொரு விதிவிலக்கு காதலர் தினம்தான். ஏன்னா, காதலிச்சிட்டிருக்கிற காலத்துல மத்த பண்டிகைன்னா கூட நேர்ல சந்திச்சு, கூடவே நேரம் செலவழிக்க அவ்வளவா வாய்ப்பிருக்காது. ஆனா இந்த நாள் அப்படியில்லை இல்லையா?
வேலை, ஷூட்டிங் இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் லீவு எடுத்துகிட்டுக் கூட எங்காச்சும் வெளியில சுத்தி அன்னைக்குப் பொழுதை மறக்க முடியாததாக்குறோமே, பிறகு எப்படி அந்த நாள் பிடிக்காமப் போகும்? அதனால காதலர் தினத்தை மட்டும் ஏத்துகிடுறது மட்டுமில்ல, அன்னைக்கு பரஸ்பரம் கிஃப்ட் பரிமாறிக்கிடறதும் நிச்சயம் நடந்திடும் என்றவரிடம்,
சரி, இந்த வருஷம் கிஃப்ட் செலக்ட் பண்ணீட்டீங்களா என்றோம்.
பத்து நாள் முன்னாடியே பரிசைக் கொடுத்தாச்சு. அதாவது என் மனைவி திவ்யாவுக்கு நான் தந்ததும் எனக்கு அவங்க தந்ததும் ஒரே பரிசுதான். அது அழகான ஒரு ஃபிளாட். கொஞ்ச நாள் முன்னாடி நண்பர் ஒருத்தருடைய ஃபிளாட்டுக்குப் போயிருந்தோம். அது சென்னைக்குள்ளதான் இருக்கு. ஆனாலும் உயரமான அந்த ஃபிளாட்ல இருந்து சிட்டியின் அழகை அவ்வளவு ரசிச்சாங்க அவங்க. அப்பவே இப்படியொரு டாப் ஆங்கிள்ல இருந்து சிட்டியை ரசிக்க அவங்களுக்குப் பிடிக்கும்னு எனக்குத் தெரிய வந்தது
அடுத்த கொஞ்ச நாள்ல நாங்களும் சொந்த ஃபிளாட் வாங்க நேரம் கூடி வந்தது. அதனால அவங்க ஆசையை நிறைவேத்தலாமேன்னுதான் மொத்தம் 19 ஃப்ளோர் கொண்ட ஒரு பில்டிங்ல பதினெட்டாவது ஃப்ளோர்ல ஒரு ஃபிளாட்டை புக் பண்ணினோம். சென்னை சிட்டியை ஒருபக்கமும் இன்னொரு பக்கம் கடற்கரையையும் ரசிக்கிற மாதிரியான அழகான ஃபிளாட் அது.
ரெண்டு பேரும் சேர்ந்து வாங்கியிருக்கறதால அவங்க எனக்கும் நான் அவங்களுக்கும் தர்ற பரிசுன்னு சொன்னேன். வெளிநாட்டுக் கட்டுமான நிறுவனம் ஒண்ணு முதல் தடவையாச் சென்னையில கட்டியிருக்கிற அடுக்குமாடிக் கட்டிடம் இது. அவ்வளவு ஃப்ரண்ட்லியா எல்லா வேலைகளையும் முடிச்சுக் கொடுத்தாங்க. இன்டீரியர் வேலைகளை நாங்க ரெண்டு பேருமே பார்த்துப் பார்த்துப் பண்ணிட்டு, கடந்த 1ம் தேதி பால் காய்ச்சி குடி புகுந்தாச்சு. இந்த வருஷம் காதலர் தினம் எங்களுக்குப் புது வீட்டுலதான் என்கிறார் அருண்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.